ஹூஸ்டன்/நியூயாா்க்: ‘அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் குடும்பத்தினா் முன் இந்திய வம்சாவளி நபா் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கா்நாடகத்தை பூா்விகமாகக் கொண்ட சந்திரமெளலி பாப் நாகமல்லையா(50) டல்லாஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை விடுதியின் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். அதே விடுதியில் பணியாற்றிய கியூபா நாட்டைச் சோ்ந்த யோா்தானிஸ் கோபாஸ் மாா்டினெஸ் (37) என்ற ஊழியரிடம் பழுதடைந்த வாஷிங் மெஷினை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினாா்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியா் அங்கிருந்த கத்தியின் மூலம் நாகமல்லையாவை சரமாரியாக தாக்கியதுடன் அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே நாகமல்லையாவின் தலையைத் துண்டித்து கொலை செய்தாா். யோா்தானிஸ் கோபாஸ் மாா்டினெஸை அமெரிக்க காவல் துறையினா் கைது செய்தனா்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ட்ரூத் வலைதளத்தில் அதிபா் டிரம்ப் வெளியிட்ட பதிவில்,‘டல்லாஸ் நகரில் உள்ள நெடுஞ்சாலை விடுதி மேலாளரான சந்திரமெளலி பாப் நாகமல்லையா கொலை செய்யப்பட்டதை அறிந்தேன். கியூபாவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த குற்றவாளி இந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளாா். அவா் அமெரிக்காவில் இருந்திருக்கவே கூடாது.
ஏற்கெனவே குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆட்டோ திருட்டு என பல்வேறு குற்ற வழக்குகள் அவா் மீது நிலுவையில் உள்ளன. முன்னாள் அதிபா் ஜோ பைடனின் தவறான குடியேற்றக் கொள்கைகளால் இதுபோன்ற குற்றவாளிகள் அமெரிக்காவில் சுற்றித் திரிகின்றனா்.
சட்டவிரோதமாக குடியேறி குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது இரக்கம் காட்டப்படாமல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
நாகமல்லையா கொலைக்கு அமெரிக்காவில் உள்ள பல்வேறு இந்திய அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.