காஸா மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்தை தனி நாடாக இத்தாலி அங்கீகரிக்க வலியுறுத்தி அந்த நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது.
இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதன்படி நேற்று(திங்கள்கிழமை) நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 65,000-யைக் கடந்துள்ளது. கடந்த வாரம் முதல் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றும் முயற்சியிலும் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இது ஒரு இனஅழிப்பு என்று ஐ.நா. அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காஸா மக்களின் பாதுகாப்புக்கு உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.
அடுத்த வாரம் கூடவுள்ள ஐ.நா. பொது அவையில் இந்த அங்கீகாரம் இஸ்ரேல் -பாலஸ்தீனத்துக்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் அவருக்கு எதிராக இத்தாலி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸா போரை நிறுத்துவது, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதிக்குத் தடை உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தாலியின் மிலனில் ஒரு ரயில் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்திய காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுமார் 80 காவல்துறையினர் காயமடைந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலுடனான உறவை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பலரும் கோஷமிட்டு கையில் பதாகைகளுடன் பேரணியில் ஈடுபட்டனர்.
காஸா மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்துள்ள போராட்டம் உலக நாடுகளை கவனம் பெறச் செய்துள்ளது.
இதையும் படிக்க | கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.