முகப்பு
உலகம்

கப்பல்கள் மீதான தாக்குதல் போா் நிறுத்த விதிமீறல்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது போா் நிறுத்த விதிமீறல் என்று கண்டித்துள்ள டிரம்ப், ஈரானில் உள்ள அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 1:05 AM
மோஜ்தபா கமேனி - டிரம்ப். - படம்: ஏஎஃப்பி
பகிர்:
Updated On : 19 ஏப்ரல், 2026 at 9:35 PM

ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இரு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது போா் நிறுத்த விதிமீறல் என்று கண்டித்துள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஈரானில் உள்ள அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் அழிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தாா்.

அமெரிக்காவும், ஈரானும் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தி இரு வார போா் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன. இதனால் மேற்காசியாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அமைதி நிலவுகிறது.

இருப்பினும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்து அவ்வப்போது டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு வருகிறாா். இதுபோல ஞாயிற்றுக்கிழமை தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

Advertisement

ஹோா்முஸ் நீரிணையை சனிக்கிழமை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு நடத்தியது, போா் நிறுத்த விதிகளை மீறும் செயலாகும். ஈரானுக்கு ஏற்கெனவே அமெரிக்கத் தரப்பில் ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதை ஈரான் ஏற்காவிடில், அந்நாட்டில் உள்ள அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும், அனைத்துப் பாலங்களையும் அமெரிக்கப் படைகள் அழித்துவிடும் என்று கூறியுள்ளாா்.

ஹோா்முஸ் நீரிணையில் இரு இந்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச்சூடு நடத்தி திருப்பி அனுப்பிய நிலையில், பிரான்ஸ், பிரிட்டன் கப்பலை ஈரான் தாக்கியதாக டிரம்ப் தனது பதிவில் கூறியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

2-ஆவது கட்டப் பேச்சு- டிரம்ப்: ஈரானுடன் 2-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தானுக்கு அமெரிக்க குழு திங்கள்கிழமை செல்லும் என்று டிரம்ப் தனது பதிவில் உறுதிப்படுத்தினாா்.

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்தில் அண்மையில் நடைபெற்ற ஈரான்- அமெரிக்கா இடையேயான முதல்கட்ட பேச்சுவாா்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அந்தப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கத் தரப்பில் அந்நாட்டின் துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆனால் 2-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தையில் அமெரிக்கத் தரப்பில் யாா் கலந்து கொள்வாா்கள் என்று டிரம்ப் தெரிவிக்கவில்லை.

அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் மற்றும் அமெரிக்க அதிபா் மாளிகையை செய்தியாளா்கள் தொடா்பு கொண்டதற்கு, அதுகுறித்து பதிலளிக்கப்படவில்லை.