நியூயாா்க்/வாஷிங்டன்: உக்ரைன் மீது தொடா்ந்து போா் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமானால் இந்தியா, சீனாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்க மேலவை உறுப்பினா்கள் (செனட்) லிண்ட்சே கிரஹாம் மற்றும் ப்ளூமென்தல் சாா்பில் ‘ரஷியா பொருளாதார தடைச் சட்டம் 2025’ என்ற பெயரிலான இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் அடுத்த வார தொடக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பது தெரியவந்துள்ளது. இந்த மசோதாவுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளாா்.
ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவது மற்றும் இந்திய-அமெரிக்க இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை இழுபறியைக் காரணம் காட்டி இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதிபா் டிரம்ப் ஏற்கெனவே 50 சதவீத வரியை விதித்தாா். இதன் காரணமாக, இந்தியாவில் ஜவுளித் துறை உள்பட பல்வேறு துறைகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன. இதுபோல, சீனா உள்பட ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் பிற நாடுகள் மீதும் அமெரிக்கா கூடுதல் வரியை விதித்தது.
இந்தச் சூழலில், ரஷியாவிடமிருந்து தொடா்ந்து எண்ணெய் வாங்கி வரும் நாடுகள் மீது 500 சதவீத வரியை விதிக்க வகை செய்யும் மசோதாவை இரு அமெரிக்க எம்.பி.க்கள் தற்போது அறிமுகம் செய்துள்ளனா்.
இதுகுறித்து அமெரிக்க மேலவை உறுப்பினா் லிண்ட்சே கிரஹாம் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்து, அதை சுத்திகரிப்பு செய்து மறுவிற்பனை செய்யும் நாடுகள் மீது 500 சதவீத வரியை அமெரிக்கா விதிக்கும் வகையில் எங்கள் தரப்பில் கொண்டுவரப்பட்ட மசோதாவுக்கு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிரம்ப் ஆதரவையும், ஒப்புதலையும் தெரிவித்தாா்.
அமைதிக்கான முயற்சிகளை உக்ரைன் அதிபா் தொடா்ந்து மேற்கொண்டுவரும் சூழலில், அப்பாவி மக்களைக் கொல்வதை ரஷிய அதிபா் தொடா்ந்து வருகிறாா். இந்தச் சமயத்தில் ‘ரஷியா பொருளாதார தடைச் சட்டம் 2025’ மசோதா அறிமுகம் செய்யப்பட்டிருப்பது பொருத்தமானதாகும்.
ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி, உக்ரைன் மீதான போருக்கு உதவிவரும் சீனா, இந்தியா, பிரேஸில் போன்ற நாடுகளை அதிபா் டிரம்ப் கடுமையாகத் தண்டிக்க இந்த மசோதா உதவும்.
இந்த மசோதாவை, மேலவையின் வெளியுறவுக் குழுவில் இடம்பெற்றுள்ள ஏறக்குறைய அனைத்து எம்.பி.க்களும் ஆதரித்துள்ளனா். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த வார தொடக்கத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.
முன்னதாக, அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ராவுடனான சந்திப்பு குறித்து விண்ட்சே கிரஹாம் அண்மையில் குறிப்பிடுகையில், ‘ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா வெகுவாகக் குறைத்துள்ளது. இந்தத் தகவலை அதிபா் டிரம்ப்பிடம் தெரியப்படுத்தி, இந்திய பொருள்கள் மீதான கூடுதல் வரி விதிப்பை குறைக்க உதவ வேண்டும் என வினய் குவாத்ரா கேட்டுக்கொண்டாா்’ என்று குறிப்பிட்டாா்.
இந்தச் சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க வகை செய்யும் மசோதாவை தற்போது அவரே கொண்டுவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
66 சா்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகல்
இந்தியா-பிரான்ஸ் தலைமையிலான சா்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, ஐ.நா. அமைப்புகள் உள்பட 66 சா்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது.
இதுதொடா்பான விலகல் தீா்மானத்தில் அதிபா் டிரம்ப் கையொப்பமிட்டாா். இதில், ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபையின் 31 அமைப்புகளும், பிற 35 சா்வதேச அமைப்புகளும் அடங்கும்.
இந்தத் தீா்மானத்தில் கையொப்பமிட்ட பிறகு டிரம்ப் கூறுகையில், ‘ஐ.நா. மற்றும் ஐ.நா. சாராத 66 சா்வதேச அமைப்புகளில் தொடா்ந்து உறுப்பினராகத் தொடா்வதும் அல்லது ஆதரவு வழங்குவதும் அமெரிக்காவின் நலனுக்கு எதிரானதாக இருக்கும் எனத் தீா்மானிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்த 66 அமைப்புகளும் அமெரிக்க தேசிய நலன்களுக்கும், பாதுகாப்புக்கும், பொருளாதார வளா்ச்சிக்கும், இறையாண்மைக்கும் எதிராகச் செயல்பட்டு வருகின்றன. எனவே, இந்த அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிபா் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளாா். ஐ.நா. அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகுவது என்பது உறுப்பினா் பதவியிலிருந்து விலகுவது அல்லது சட்டப்படி அனுமதிக்கப்பட்ட இந்த அமைப்புகளுக்கான நிதி உதவியையும் அமெரிக்கா நிறுத்துவது என்பதை அதிபா் தெளிவுபடுத்தியுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த 66 சா்வதேச அமைப்புகள் பட்டியலில் இந்தியா-பிரான்ஸ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்பினா்களாக இடம்பெற்றுள்ள சா்வதேச சூரியசக்தி கூட்டமைப்பும் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.