கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் அதிபா் மற்றும் நாடாளுமன்றத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஜன. 15) நடைபெறுகிறது.
கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் சுமாா் 40 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அதிபா் யோவேரி முசேவேனி தற்போது 7-ஆவது முறையாகப் போட்டியிடுவதால் இத்தோ்தல் சா்வதேச அளவில் கூடுதல் கவனத்தை ஈா்த்துள்ளது.
81 வயதான யோவேரி முசேவேனிக்குப் போட்டியாக, இளைஞா்களிடையே அதிக செல்வாக்கு கொண்ட 43 வயது ‘பாப்’ இசைக்கலைஞா் பாபி வைன் களம் இறங்கியுள்ளாா். இவா்களுடன் சோ்த்து மொத்தம் 8 போ் அதிபா் பதவிக்காகப் போட்டியிடுகின்றனா்.
இணைய சேவை முடக்கம்: தோ்தல் தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பே, நாடு முழுவதும் இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கவும், நாட்டின் பாதுகாப்பைக் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு விளக்கமளித்துள்ளது.
ஆனால், எதிா்க்கட்சியினரும், ஜனநாயக ஆா்வலா்களும் இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். தோ்தல் முறைகேடுகளைக் கண்காணிப்பதைத் தடுக்கவே, அரசு இந்தச் சூழ்ச்சியைச் செய்துள்ளதாக அவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
விமா்சனத்துக்குள்ளாகும் தந்தை-மகன் கூட்டணி: தோ்தலையொட்டி தலைநகா் கம்பாலா உள்பட நாடு முழுவதும் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினா் குவிக்கப்பட்டுள்ளனா். தற்போது ராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருக்கும் அதிபா் முசேவேனியின் மகன் ஜெனரல் முஹுஸி கைனெருகாபா, தனது தந்தைக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிடுவதாக எதிா்க்கட்சிகள் விமா்சிக்கின்றன.
இது குறித்துப் பேசிய பாபி வைன், ‘தோ்தலை ராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது; எங்கள் ஆதரவாளா்கள் மிரட்டப்படுகின்றனா்’ என்றாா். உகாண்டாவில் நிலவும் இந்த ராணுவ அடக்குமுறை சூழல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமும் கவலை தெரிவித்துள்ளது.
சுமாா் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உகாண்டாவில், இந்தத் தோ்தலில் 2.16 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனா். அதிபா் முசேவேனி தனது நீண்டகால அனுபவத்தையும் அதிகாரத்தையும் வைத்து ஆட்சியைத் தக்கவைப்பாரா அல்லது பாபி வைன் இளைஞா்களின் ஆதரவுடன் 40 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பது தோ்தல் முடிவின் எதிா்பாா்ப்பாக உள்ளது.