அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்புயல் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெக்சாஸ், ஓக்லஹோமா, கேன்சாஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜன. 23) பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது.
டகோடாஸ், மின்னெசோடா ஆகிய இடங்களில் குளிர்காற்றின் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் சென்றதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்காளாகினர்.
லூயிசியானா, மிசிசிப்பி, டென்னிசி ஆகிய இடங்களில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்திருப்பதால், மரங்கள், மின்சார கம்பிகள், கோபுரங்கள், சாலைகளில் சுமார் 1 இன்ச் அடர்த்திக்கு பனி படர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் பல இடங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோசமான வானிலை நிலவுவதையடுத்து, அமெரிக்காவில் சனிக்கிழமை (ஜன. 24) 3,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப்போக்குவரத்து குறித்த விவரங்களை வழங்கும் ஃப்ளைட்-அவேர் தளம் மூலம் அறிய முடிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.