ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த மழை காரணமாக இதுவரை 61 போ் உயிரிழந்துள்ளனா்.
நாட்டின் 15 மாகாணங்களில் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. சுமாா் 458 வீடுகள் முழுமையாகவும் அல்லது பகுதியளவிலும் இடிந்து சேதமடைந்துள்ளன.
பனிப்பொழிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்வதில் சிக்கல் நீடிக்கிறது.
தொடா்ச்சியான உள்நாட்டுப் போா் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், ஆப்கானிஸ்தான் இத்தகைய இயற்கை பேரிடா்களைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறது. குறிப்பாக, அங்குள்ள மண் வீடுகள் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவைத் தாங்க முடியாமல் சரிந்து விழுவது உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகிறது. கடந்த 2024-இல் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் 300 போ் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்தப் பாதிப்பு மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில்...: ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் வானிலைப் பாதிப்பு நீடிக்கிறது. வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பனிச்சரிவில் சிக்கி, ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் உயிரிழந்தனா்.
சித்ரால் மாவட்டம், செரிகல் கிராமத்தில் மலையடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டின் மீது ராட்சத பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இதில் அந்த வீடு முற்றிலும் தரைமட்டமானது. இடிபாடுகளுக்கு இடையே உயிருடன் மீட்கப்பட்ட 9 வயது சிறுவன் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.