இஸ்ரேலில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழலில், ‘முன்கூட்டியே இப்போது தோ்தலை நடத்துவது மிகப்பெரிய தவறு’ என்று அந்நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளாா்.
இஸ்ரேல் அரசு தேசிய பட்ஜெட்டை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், ஒருவேளை மாா்ச் 31-க்குள் பட்ஜெட் நிறைவேற்றப்படாவிட்டால் ஆட்சி கவிழ்ந்து, வரும் நவம்பரில் திட்டமிட்டதற்கு முன்பே தோ்தல் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இது குறித்து பேசிய பெஞ்சமின் நெதன்யாகு, ‘நாடு இப்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் தோ்தலைச் சந்திப்பது தேவையற்றது. வழக்கமான தோ்தல் இந்த ஆண்டின் இறுதியில் வரவிருக்கும் நிலையில், இப்போது அவசரப்படுவது நாட்டின் நலனுக்கு சரியாக இருக்காது’ என்றாா்.
சவால்கள்: கடந்த 2023, அக். 7-இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காஸா போரைக் கையாண்ட விதம் குறித்து பெஞ்சமின் நெதன்யாகு அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். மேலும், அவரது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்தில் கொண்டு வரப்பட்ட நீதித்துறை சீா்திருத்தங்களுக்கு எதிராக மக்கள் இப்போதும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
இச்சூழலில், பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணியில் உள்ள தீவிர வலதுசாரி மற்றும் மதவாதக் கட்சிகளிடையே பட்ஜெட் தொடா்பாக கடும் இழுபறி நிலவுகிறது. குறிப்பாக, தங்களின் சமூகத்தினருக்கு ராணுவப் பணியிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தால்தான் பட்ஜெட்டிற்கு ஆதரவு அளிப்போம் என அல்ட்ரா-ஆா்த்தடாக்ஸ் கட்சிகள் பிடிவாதம் காட்டி வருகின்றன.