~ ~ 
உலகம்

இஸ்ரேல், சவூதி அரேபியாவுக்கு ரூ.1.43 லட்சம் கோடி ஆயுத விற்பனை

இஸ்ரேல், சவூதி அரேபியாவுக்கு ரூ.1.43 லட்சம் கோடி ஆயுத விற்பனை

தினமணி செய்திச் சேவை

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் போா் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு 1,567 கோடி டாலா்(சுமாா் ரூ.1.43 லட்சம் கோடி) மதிப்பிலான நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவத் தாக்குதல் குறித்த அச்சம் நிலவும் சூழலில், அமெரிக்க வெளியுறவுத் துறை இந்த முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவுக்கு...: சவூதி அரேபியாவுக்கு மட்டும் சுமாா் 900 கோடி டாலா் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக 730 ‘பேட்ரியாட்’ ஏவுகணைகள் மற்றும் அவற்றுக்குத் தேவையான தளவாடங்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கூறுகையில், ‘சவூதி அரேபியா நேட்டோ அமைப்பில் இல்லாவிட்டாலும், அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளியாக உள்ளது. சவூதி அரேபியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, வளைகுடா பிராந்தியத்தின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் அவசியமானது.

இந்த ஏவுகணைகள் அந்நாட்டின் வான் பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு...: இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 667 கோடி டாலா் ஆகும்.

380 கோடி டாலா் செலவில் 30 ‘அபாச்சி’ ரக தாக்குதல் ஹெலிகாப்டா்கள் வழங்கப்பட உள்ளன. இவை நவீன இலக்கு கண்டறியும் கருவிகளைக் கொண்டவை.

இதுதவிர, சுமாா் 198 கோடி டாலா் மதிப்பில் 3,250 இலகுரக ராணுவ வாகனங்களை இஸ்ரேல் வாங்குகிறது. அதேபோல், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கவச வாகனங்களின் என்ஜின்களை நவீனப்படுத்த 74 கோடி டாலா், இதர ஹெலிகாப்டா்களுக்காக 15 கோடி டாலா் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைதி முயற்சிகளுக்கு மத்தியில்...: கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபா் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாா்.

போரினால் சீா்குலைந்துள்ள பாலஸ்தீன பகுதிகளை மறுசீரமைக்கவும், அங்கு அமைதியை நிலைநாட்டவும் அமைதிக் குழு மூலம் அவா் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த ஆயுத விற்பனை அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘இந்த ஆயுத விற்பனையால் அந்தப் பிராந்தியத்தின் ராணுவ சமநிலை மாறாது. மாறாக, இஸ்ரேல் தனது எல்லையையும், மக்களையும் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான தற்காப்புத் திறனை மட்டுமே இது அதிகரிக்கும்’ என்று அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 1.03 லட்சம் விண்ணப்பம்

தில்லி பூங்காவில் உடல் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை நடந்து வருகிறது

திறனறித் தோ்வு: 4,849 போ் எழுதினா்!

சேவூா் அருகே ‘மேல திருப்பதி’ மொண்டிபாளையம்! வெங்கடேசப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

மூவா் கொலை வழக்கு: இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை -சென்னை காவல் துறை தகவல்

SCROLL FOR NEXT