4 படங்கள்.. ரூ.500 கோடி வசூல்..!

இந்தாண்டில் வெளியான மலையாளத் திரைப்படங்களின் வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
4 படங்கள்.. ரூ.500 கோடி வசூல்..!

நம்மூருக்கு என்னதான் ஆச்சு என்கிற வசனத்தைப்போல் தமிழ் சினிமாவிற்கு போதாத ஆண்டுபோல் தெரிகிறது. கமர்ஷியல் படங்களைக் கொடுத்தாலும் பெயர் சொல்லும் அளவிற்கு சில நல்ல திரைப்படங்களும் வந்துகொண்டிருந்தன. ஆனால், இந்தாண்டில் இதுவரை கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களைத் திணறச் செய்யும் தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

ஆனால், மலையாள சினிமாவின் கதையே வேறு. இத்தனையாண்டுகள், நன்றாக இருந்த மலையாளப் படங்கள் பெரிய வசூலை அடையாமல்தான் இருந்தன. அபூர்வமாக, மோகன்லால், மம்மூட்டி படங்கள் ரூ.50 கோடியைக் கடந்தாலே பெரிது என்ற நிலையிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் மலையாள சினிமா சென்ற தூரம் மிகப்பெரிது..

குறிப்பாக, இந்தாண்டு மலையாள சினிமாவுக்குப் பெரிய துவக்கத்தைக் கொடுத்துள்ளது.

நடிகர் மம்மூட்டியின் பிரம்மயுகம், பிரேமலு, மஞ்ஞுமல் பாய்ஸ், பிருத்விராஜின் ஆடு ஜீவிதம் என அடுத்தடுத்து இரண்டு மாதங்களுக்குள் வெளியான இந்த 4 படங்களும் உலகளவில் இன்றும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதில், மிகத் தைரியமாக கருப்பு வெள்ளை வடிவத்தில் வெளியான ஹாரர் திரில்லர் படமான பிரம்மயுகம் ரூ.60 கோடியையும், காதல் நகைச்சுவைப் படமான பிரேமலு ரூ.125 கோடியையும் வசூலித்து திணறடித்தன. இந்த இரு படங்களும் தென்னிந்திய மொழிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின என்றே கூற வேண்டும்.

4 படங்கள்.. ரூ.500 கோடி வசூல்..!
பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் - 69!

ஆனால், மலையாள சினிமாவுக்கே மகுடம்போல் வந்தது, ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’. தமிழகத்தில் சக்கைபோடு போட்ட இப்படம், உலகளவில் ரூ.225 கோடியை வசூலித்து இந்திய சினிமாவையே திகைக்கச் செய்திருக்கிறது. ரூ.200 கோடியைக் கடந்த முதல் மலையாளப் படமும் இதுதான்.

இதோடு முடிந்ததா? நடிகர் பிருத்விராஜ் ஆடு ஜீவித்தோடு வந்திருக்கிறார். ஆடு ஜீவிதம் வெளியாகி ஒருவாரமே ஆகவுள்ள நிலையில், இதுவரை இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் உலக சினிமா விருது மேடைகளில் ஏறும் அளவிற்கு, ‘ஒரு சினிமாவாக’ உருவாகியிருக்கிறது.

சின்ன பட்ஜெட், குறைந்த வசூல், நல்ல படம் என்கிற நிலையிலிருந்து மலையாள சினிமா மேலே எழுந்துவிட்டது என்றே தோன்றுகிறது. இனி, மிகத் தைரியமாக அதிக பட்ஜெட்களில் மலையாள சினிமாக்கள் உருவாக்கப்படும் என்பதற்கு இந்த 4 படங்களும் முன்னோடிகளாக இருக்கப் போகின்றன என்றால் மிகையல்ல..

இந்தப் படங்கள் சொல்லும் பாடம் ஒன்றுதான். படத்தின் வெற்றிக்கு பிரம்மாண்ட பட்ஜெட்டும் நட்சத்திர நடிகர்களும் மட்டும் போதாது. படம் வெல்ல வேண்டுமென்றால் ‘கதையும் திரைக்கதையும்’ சரியாக இருக்க வேண்டும். நம்மூர் ஆள்கள் இனியாவது ‘எழுத்தை’ நம்பி ஆக்‌ஷன்.. கட்.. சொல்ல முன்வருவார்களா?!

4 படங்கள்.. ரூ.500 கோடி வசூல்..!
‘படம் பிடிக்கவில்லையென்றால் செருப்பால் அடிங்க..’ ஹாட்ஸ்பாட் இயக்குநர் வேதனை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com