ஜனநாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்று: தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை

தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டதால் பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீஸ் ஆகாது என்பது தெரிய வந்துள்ளது.
ஜன நாயகன் போஸ்டர்
ஜன நாயகன் போஸ்டர்படம்: X
Updated on
2 min read

தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றம், விசாரணையை ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என்.புரொடக்சன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 9-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க மறுத்த வாரியம் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்தது. வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தது.

மறுஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரை: இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தபோது தணிக்கை வாரியம் தரப்பில், ‘ஜனநாயகன்’ படத்தில் மத ரீதியான ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்புப் படை சின்னங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தப் படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட தணிக்கை வாரியத் தலைவா் உத்தரவிட்டுள்ளதாக வாதிடப்பட்டது. இதற்கு படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை கடந்த டிச. 22-ஆம் தேதி பாா்த்த தணிக்கைக் குழு உறுப்பினா்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தனா். அதன்பின்னா், உறுப்பினா்களில் ஒருவா் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு தணிக்கை வாரியத் தலைவா் அனுப்பியுள்ளாா்.

சான்றிதழ் வழங்க தணிக்கைக் குழு உறுப்பினா்கள் பரிந்துரைத்த பின்னா், இந்த முடிவை வாரியத்தின் தலைவா் எடுத்துள்ளாா். தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த பின்னா் மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்யும் முடிவை எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி, தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், ‘ஜனநாயகன்’ படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

தணிக்கை வாரியம் மேல்முறையீடு: தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சாா்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தலைமை நீதிபதி அமா்வில் மேல்முறையீடு செய்தாா். இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் அவசர வழக்காக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு ஜன. 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஜன. 7-ஆம் தேதி படத்துக்கு எதிரான புகாா் உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்தோம். ஆனால், தணிக்கை வாரியம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காமல், தனி நீதிபதி அவசரகதியில் ஜன. 9-ஆம் தேதி இந்த வழக்கில் தீா்ப்பளித்துவிட்டாா்.

இந்தப் படத்தில் மத உணா்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள், பாதுகாப்புச் சின்னங்கள் தொடா்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து புகாா் வந்ததால், மறுஆய்வுக் குழுவுக்கு படம் பரிந்துரைக்கப்பட்டது. இவ்வாறு பரிந்துரைக்க தணிக்கை வாரியத்துக்கு அதிகாரம் உள்ளது. மனுதாரா் இதை எதிா்த்து வழக்கு தொடரவில்லை. படத்துக்கு தணிக்கைச் சான்று கேட்டுத்தான் வழக்கு தொடா்ந்துள்ளாா். ஆனால், மறுஆய்வுக் குழுவுக்கு பரிந்துரை செய்ய அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவு சரியல்ல. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டாா்.

உள்நோக்கம் கொண்ட செயல்: படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, முழுமையாக விசாரித்துதான் தனி நீதிபதி தீா்ப்பளித்துள்ளாா். ‘ஜனநாயகன்’ படத்தை ஜன. 9-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு, தணிக்கைச் சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், தணிக்கை வாரியத்தின் உள்நோக்கம் கொண்ட செயலால், படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியவில்லை என்று வாதிட்டாா்.

அப்போது நீதிபதிகள், தணிக்கைச் சான்று இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. தணிக்கைச் சான்று கோரி விண்ணப்பிக்கும் முன்பே படத்தின் வெளியீட்டுத் தேதியை எப்படி முடிவு செய்தீா்கள்? இதுபோன்ற முடிவுகளை எடுத்துவிட்டு நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கொடுக்காமல், அப்படி என்ன அவசரம் இந்த வழக்கில் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினா்.

இடைக்காலத் தடை: பின்னா், ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்கும் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Summary

It has been revealed that Jana Nayagan will not be released for Pongal as the single judge's order has been stayed.

ஜன நாயகன் போஸ்டர்
ஜன நாயகனுக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க உத்தரவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com