துந்தனா பட்ஜெட் 2012-13
மத்திய நிதியமைச்சர் முகர்ஜி 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்தப் பட்ஜெட்டில் ""வந்தது வரட்டும்'' என்று மலையைக் கெல்லி எலியைப் பிடித்துள்ளார். வளர்ச்சியை நிலைநிறு


மத்திய நிதியமைச்சர் முகர்ஜி 2012-13-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்தப் பட்ஜெட்டில் ""வந்தது வரட்டும்'' என்று மலையைக் கெல்லி எலியைப் பிடித்துள்ளார். வளர்ச்சியை நிலைநிறுத்த வரவு, செலவு, கடன் எல்லாவற்றையுமே உயர்த்திவிட்டார். ரூபாயைக்கொண்டு தீர்க்க முடியாத பசியை அதிகச் செலவுள்ள டாலர்களைக் கொண்டு தீர்க்க முயன்றுள்ளார்.
பட்ஜெட் என்பது வரவு - செலவுத்திட்டம் என்று எல்லோரும் அறிவார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை ஆண்டுதோறும் எடுத்துக்காட்டும் ஒரு கண்ணாடி என்பதையும் மறந்துவிடக் கூடாது. ஆண்டுக்கு ஆண்டு பற்றாக்குறை உயர்ந்து போகிறது. 2011-12-ல் நிதிப் பற்றாக்குறை 5,21,980 கோடியாகும். இது ஏன் ஏற்பட்டது?
நேர்வரி (வருமானவரி - கார்ப்பரேட் வரி) வசூலாகாத தொகை 5,29,432 கோடியாகும். அன்னிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப்பணம் 24,50,000 கோடியாகும். 2012-13 பட்ஜெட்டின்படி எதிர்பார்க்கப்படும் அரசு வருவாய் சுமார் 15,00,000 கோடிதான்.
ஒட்டுமொத்த இந்தியாவின் இரண்டாண்டு வருவாய் கணக்கில்வராதபோது துந்தனா துந்தனா என்று நாம் தாளம் போடுவதைத் தவிர, வேறு என்ன செய்வது? வரவேண்டிய வருவாய்கள் எல்லாம் வசூலாகிவிட்டால் இப்படி நாம் துந்தனா போடவேண்டிய அவசியமே இல்லை.
எந்த அளவில் வருவாயை மதிப்பிடுகிறார்களோ அந்த அளவில் செலவுகளுக்குப் பணம் ஒதுக்கப்படுகிறது. வருமான வரியையும் கார்ப்பரேட் வரியையும் உண்மையான கணக்குப்படி வசூல் செய்ய இயலாத அரசு உலக வங்கியில் கடன் வாங்கும். ஒதுக்கப்பட்ட திட்டச் செலவுக்கு டாலர் முதலீடுகளை எதிர்பார்க்கும். இப்படி வாங்கப்பட்ட கடனுக்கு வட்டி மட்டும் 2012 - 13-ல் 3.20 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
""வாடகை சோபா இருபது ரூபாய். விலைக்கு வாங்கினால் முப்பதே ரூபாய்'' என்ற பாமா விஜயக் கணக்கு நாட்டுக்கும் பொருந்தும். நாம் ஏன் கடன் வாங்குகிறோம்? எதற்கெல்லாம் வாங்குகிறோம்? என்ற கேள்வியின் பதில் ""வட்டி கட்டி வட்டி கட்டி உலக வங்கியை வாழவைப்பதுதான்''. பல்வேறு ஏற்றுமதிகள் மூலம் டாலர் நாடுகளையும் வாழ வைக்கிறோம்.
2011-12-ல் ஏற்றுமதி மதிப்பு 23.5 பில்லியன் டாலர், இறக்குமதி மதிப்பு 29.4 பில்லியன் டாலர். 2010-11-ல் ஏற்றுமதி 40.5 பில்லியன் டாலர், இறக்குமதி 28.2 பில்லியன் டாலர். டாலர் நாடுகளிலும் யூரோ நாடுகளிலும் நிகழ்ந்த திவாலா நிலை என்ற நிதி நெருக்கடியால் இந்திய ஏற்றுமதி குறைந்துவிட்டது. ஜப்பான் இன்னமும் சுனாமியிலிருந்து மீளவில்லை.
இந்தியா சேமித்து வைத்துள்ள அன்னியச் செலாவணி எல்லாம் கச்சா எண்ணெய், டீசல், பெட்ரோல், யூரியா செலவுக்குத்தான்.
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை கொல்கத்தா - மும்பை, தில்லி - மும்பை, மும்பை - சென்னை, கொல்கத்தா - சென்னை என்றெல்லாம் தேசிய நெடுஞ்சாலைகள் வந்தன.
ஒருகாலத்தில் கார் என்றால் அம்பாசிடர்தான். உலக நாடுகளில் உள்ள அத்தனை கார்களும் இன்று இந்தியச் சாலைகளில் பவனி வருகின்றன.
அமெரிக்கா அல்லது ஜப்பான் மாடல்களில் டாட்டா, மகேந்திரா கம்பெனிகளும் கார் உற்பத்தியில் சக்கைபோடு போடுகிறார்கள். வசதி குறைந்தவர்கள்கூடக் கடன் வாங்கிக் கார் வைத்துக்கொள்ள முற்படும் இந்திய தேசத்தின் நாடாளுமன்றத்தில் வறுமைக்கோடு விவாதம் தூள் பறக்கிறது. ""யானையைப்போல பூனையும் தின்னால் ஜீரணமாகாது, ஐயா ஜீரணமாகாது...'' ஒருபக்கம் வறுமையைப் படம்பிடித்துக் காட்டுகிறோம். மறுபக்கம் ஆடம்பரங்களுக்காகக் கடன் வாங்கிச் சீரழிகிறோம். இதுதான் இந்தியா.
இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதை பட்ஜெட்டுக்கு முன் வழங்கப்பட்ட பொருளியல் ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. 2011-12-ல் வளர்ச்சி 6.4 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. கடந்த ஆண்டு நிதிப்பற்றாக்குறை ஜி.டி.ப்பியில் 4.8 சதவிகிதம் அப்படியே தொடர்கிறது. பணவீக்கம் கட்டுப்பட்டதாகவே தெரியவில்லை. உணவு உற்பத்தி 25 கோடி டன்னாக உயர்ந்தும்கூட பணவீக்கம் தொடர்ந்து 9 சதவிகிதத்துக்கு மேல் சென்று இறங்க மறுக்கிறது. பாவம் முகர்ஜி என்ன செய்வார்? 6.4 சதவிகித வளர்ச்சியை 8 சதவிகிதத்துக்கு உயர்த்தியாக வேண்டும் என்று பிரதமர் நெருக்குகிறார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் முகர்ஜி அறிந்த ஒரே வழி. வரியை உயர்த்துவதுதான். வரியை உயர்த்தினால்தான் செலவை உயர்த்த முடியும். செலவை ஈடுகட்ட வரி மட்டும் போதாது. ""வாங்கு கடனை கட்டு வட்டியாக'' என்று ஒரு வரவு - செலவுக் கணக்கைக் காட்டிவிட்டார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவேண்டிய நடவடிக்கைகள் பூஜ்ஜியமாயுள்ளது.
கார்ப்பரேட் வரி 45,547 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வருமான வரி 23,907 கோடியாகத் தீட்டப்பட்டுள்ளது. வருமான வரிச் சலுகை போற்றும்படி இல்லை. கலால் வரி 33,964 கோடி. மத்திய எக்சைஸ் வரி ரூ. 43,655 கோடி. சேவை வரி 29,000 கோடி. நேர்முக வரியைவிட மறைமுக வரி கூடுதல் என்பதால் நடுத்தர மக்கள் குமுறுவது சரியே. வரிச்சலுகை இல்லாத பட்ஜெட் என்பதால் உடனடியாகத் தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் இல்லை.
செலவுகளை எடுத்துக்கொண்டால் வளர்ச்சியை மனதில்வைத்து உற்பத்தித் தன்மையுள்ள திட்டச்செலவுகளை உயர்த்தி உற்பத்தித் தன்மையில்லாத மானியச் செலவுகளைக் குறைத்துள்ள விதம் வரவேற்புக்குரியது என்றாலும் இது நிலைக்குமா என்பது கேள்விக்குறி.
உர மானியம் ரூ. 73,000 கோடியிலிருந்து ரூ. 60,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. உர மானியத்தை உர நிறுவனங்களுக்கு வழங்காமல் உர விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும்.
மத்திய நிதி நிலை சீர்திருத்தக் கமிஷனின் யோசனைகளை மனதில்கொண்டு முகர்ஜி வரவினங்களில் ஒரு புதிய கருத்துருவத்தை உருவாக்கியுள்ளார். அதன் பெயர் ""பலன் தரும் வருவாய்ப் பற்றாக்குறையாம்'' அதாவது மகாத்மா காந்தி கிராமிய வேலைக்கு உறுதித் திட்டம், இந்திரா ஆவாஜ் யோசனா (வீடு வழங்கல்), பிரதான் மந்திரி கிராம் சடக் யோசனா (கிராமச்சாலை), சர்வ சிக்ஷா அபியான் (இலவசக் கல்வி) ஆகியவை வருவாய்ப் பற்றாக்குறைக் கணக்கில் வரக்கூடாது. (வேறு என்ன கணக்கில் வரும்?) ஊழல் நிரம்பிய குளத்து வேலைத்திட்டத்துக்குரிய (ம.கா.கி.வே.தி) ஒதுக்கீடு 70,000 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள டீசல் கட்டுப்பாடு பாராட்டுதலுக்குரியது.
பெட்ரோலுக்கு மானியம் இல்லை. டீசலுக்கு மானியம் உண்டு. டீசல் ஏழைகளுக்குரியதாகக் கருதப்பட்டாலும் டீசல் கார் வாங்கும் பணக்காரர்கள் அதிகமாகிவிட்டார்களாம்!
ஆகவே, டீசல் மானியம் ரயில்வே துறைக்கும், பொதுப் போக்குவரத்துத் துறைக்கும் நேரிடையாக வழங்கப்படுகிறது. இது நல்ல கருத்து. அதேசமயம், வாடகைக் கார், டீசல் ஆட்டோ நிலை என்னாவது? பணக்காரர்கள் வாங்கும் டீசல் காருக்கு கூடுதல் டீசல் வரி விதிக்கலாமே.
÷மானியச் செலவுகளை மொத்த ஜி.டி.ப்பியில் 2 சதவிகிதமாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறும் முகர்ஜி உணவு உரிமைப் பாதுகாப்புக்கு எப்படி நிதி திரட்டப் போகிறார் என்பது புரியாத புதிர். 50 சதவிகித ஈக்விட்டி டாலர் முதலீடுகளைக் கொண்டு சமாளிக்கும் திட்டமோ? டாலர் விஜயம் நிறைய உண்டு. எல்லாம் கடன்களே, இனாம் அல்ல. அன்று சொன்னார்கள். அடுத்த ஆண்டு வரும்போது நிதிப் பற்றாக்குறையை மொத்த ஜி.டி.ப்பியில் 4.6 சதவிகிதமாகக் குறைப்போம் என்றார்கள். ஆனால், இன்று நிதிப் பற்றாக்குறை 5.9 சதவிகிதமாயுள்ளது.
2012-13 பட்ஜெட்டில் இது 5 சதவிகிதமாகக் குறையும் என்று முகர்ஜி கூறுகிறார். ஜி.டி.ப்பியில் 5 சதவிகிதம் என்றால் அது எவ்வளவு? 5,13,580 கோடியா? இது தவிர வருவாய்ப் பற்றாக்குறை 3,50,424 கோடி.
÷உலகமயமாதலின் சீரழிவால் டாலர், யூரோ, யென், யூவான் எல்லாமே வலுவிழந்து விட்டன. ரூபாயின் நிலையும் அதுவே. வருவாய்ப் பற்றாக்குறை நோட்டடித்து ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை எல்லாம் மீளாத நிலைக்கு ஆளாகிவிட்டன.
இதற்குக் காரணம் உர மானியம், டீசல் மானியம். இன்று நிகழ்ந்து வரும் அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மோதல்களினால் மேலும் கச்சா எண்ணெய் விலையும் யூரியா விலையும் உயரும். துந்தணா பாட வேண்டிய சூழ்நிலை தீவிரமாகும்.
÷விவசாயத்தை எடுத்துக்கொண்டால் பயிர்களில் பச்சையை ஏற்ற யூரியா மார்க்கத்தை மட்டுமே அரசு யோசிக்கிறது. அதே வேலையை நீலப் பச்சைப் பாசியாகிய அசோல்லா செய்கிறது. அசோல்லா வளர்ப்பு செலவே இல்லாதது.
ஒரு கைப்பிடி அசோல்லாவை பாசன ஏரி - குளங்களில் தூவி விட்டால் போதும். கோடி மடங்கு பெருகும். நீர் நிற்கும் நெல் வயல்களில் அள்ளித் தூவினால் நீர்ச் செலவும் மிச்சம், யூரியாச் செலவும் மிச்சம். அசோல்லா காற்றில் உள்ள நைட்ரஜனை வாங்கி வளர்ந்து நெற்பயிருக்கு ஏற்றித் தரும். யூரியா உரம் போட்ட அரிசியால் ரத்தசோகை ஏற்படுவதையும் நிறுத்தலாம்.
மாற்று எரிசக்திகள் பற்றிய யோசனை இல்லாமல் கூடங்குளமே விடிவு தரும் என்று நசிந்துபோன ""அரீவா ஆஃப் பிரான்ஸ்'' அணு உலை நிறுவனத்துக்குப் புத்துயிர் அளித்துக் கசியும் கதிர் வீச்சையும் தாங்கிக் கொள்ளத் தயாராகிவிட்டோம்! அணுசக்தி மின்சாரமும் அதிகச் செலவுள்ள திட்டமே. பஞ்சபூத சக்திகளான நீர், நெருப்பு, காற்று, சூரிய ஒளி, அண்டத்திலிருந்து பெற வேண்டியதை அணுக் கதிர்வீச்சால் - யூரேனிய உதவியால் பெறத் தீர்மானித்துவிட்டோம்.
இந்தியா அழிந்து வருகிறது. மேலும் அழிய என்ன மிச்சம் உள்ளது? ஒருவருக்கொருவர் சண்டைபோட்டு மண்டையை உடைத்துக் கொள்ளும் மம்தா - தேசியக் கூட்டணி அமைச்சர்கள், 2012-13 பட்ஜெட்டை இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்று ""ஒளி வீசும் இந்தியாவாக'' மாற்றுவதாகச் சொல்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை. ""இருள் சூழ்ந்து பரிதவிக்கும் இந்தியாதான்'' காட்சி தருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...