கண்மாய்களின் கண்ணீர்க் கதைகள்
வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க'' இவ்வாறு தேசபக


வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப் பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசந்தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா! நீ வாழ்க! வாழ்க''
இவ்வாறு தேசபக்திக் கவிஞர் பாரதி வாழ்த்திய மகாத்மா மறைந்துவிட்டாலும் அவருடைய ஆன்மா நல்லதையே எண்ணி நாட்டுப்பணி செய்யும் நல்ல உள்ளங்களில் வாழும் சூழ்நிலையில், மகாத்மா காந்தியின் பெயரால் இன்றைய இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் மாபெரும் ஊழல் திட்டமாகிவிட்டது.
கடந்த ஐந்தாண்டுகளில் இத்திட்டத்தின் முக்கியப் பணியான ஏரி, குள நீர்ப்பாசனத் திட்டத்துக்கு 1,10,000 கோடி ரூபாய் செலவழித்தும்கூட ஏரி, குளம் நிரம்பவில்லை. வேளாண் உற்பத்திக்குரிய நீராதாரங்களுக்கு இந்த அளவு பணம் ஏறத்தாழ ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தின் அதே அளவு செலவாகியும் விவசாயம் செழிக்கவில்லை. விவசாயிகளின் தற்கொலைகள் தொடர் கதைகளாக உள்ளன. மழைநீர் சேமிக்கப்படாமல் வடிந்து காய்ந்து கொண்டிருக்கும் கண்மாய்களும் காந்தியை நினைத்துத் தண்ணீரைக் காணாமல் கண்ணீர் வடிப்பதை யாரும் கவனிப்பதாகத் தெரியவில்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் என்று நீட்டி முழக்கிச் சொல்வதை கிராம மக்கள் ரத்தினச் சுருக்கமாகக் "குளத்து வேலைத் திட்டம்' என்று கூறுவதால் நாமும் இனி அதே சொல்லைப் பயன்படுத்துவோம். இத்திட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றிய பொருளாதார மதிப்பீட்டு அறிக்கை எதுவும் வெளிவரவில்லை. அரசாங்கம் தரும் புள்ளிவிவரம் அவ்வப்போது மத்திய அமைச்சர்களின் பேச்சுகளையும் கணக்கில்கொண்டு கவனிப்போம்.
முதலாவதாக, குளத்து வேலைத்திட்டத்தால் சுமார் 6 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு மேல் உயர்ந்துவிட்டதாக ஒரு தகவல். குறிப்பாக, 2006 - 07 முதல் 2010 - 11 வரை செல்லும்போது கிராம மக்களின் வருமானம் 2 மடங்கு உயர்ந்துவிட்டதாகவும் தகவல். கிராம மக்களின் கூலி உயர்வைப் பற்றிப் பேசும் அதேசமயம், இக்குளத்து வேலைத்திட்டத்தால் விவசாயம் வளம்பெற்று உற்பத்தி உயர்ந்துள்ளதா? இக்கேள்விக்கு விடை இல்லை.
சாதனைக்குரிய குளத்துவேலைத் திட்டப் புள்ளிவிவரங்கள் நம்மை மலைக்க வைக்கின்றன. 2006 - 2007 முதல் 2010 -2011 வரை சுமார் 5 லட்சம் கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளன. சுமார் 3.02 மில்லியன் கியூபிக் மீட்டர் கொள்ளளவுக்குக் கண்மாய்கள் நிரம்பியுள்ளன. 16,93,716 கி.மீ. தூரம் பாசனக் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன.
தனிப்பட்ட முறையில் இந்தத் திட்டத்திலும் இட ஒதுக்கீடு உண்டு. ஷெட்யூல்டு - பழங்குடி நலனுக்கு அவர்களுடைய நிலத்தில் 6 லட்சம் ஹெக்டேர் அளவில் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சாதனைகள் நிஜமாயிருந்தால் விவசாய உற்பத்தியில் உலகிலேயே இந்தியா முதலிடம் பெற்றிருக்க வேண்டும். ரூபாய் மதிப்பு உயர்ந்திருக்க வேண்டும். பணவீக்கம் பஞ்சாய்ப் பறந்து நமது ரூபாய்கள் டாலரை ஒரு மிதி மிதித்திருக்கும். எனினும் மேற்படி புள்ளிவிவரங்களை மத்திய அரசின் கிராமிய வளர்ச்சி அமைச்சரகம் நிஜம் என்று நம்பச் சொல்வதால் நம்ப வேண்டியது நமது கடமை. எனினும், சில நிஜங்களை நாம் ஆதாரத்துடன் பேச வேண்டியதும் நம் கடமை.
ஒரு கண்மாய்க்கு நீர்வரத்துக் கால்வாய் இருக்கும். நீர் வந்து சேரும் கால்வாயைச் சுத்தப்படுத்தாமல் கண்மாயைச் சுத்தப்படுத்தியிருப்பார்கள். பணி முடிந்துவிட்ட கணக்கில் கண்மாய் சேர்ந்துவிடும்.
கிராமிய வளர்ச்சி அமைச்சரகம் நிறைவேற்றிவிட்டதாகச் சொல்லப்படும் குளத்து வேலைத் திட்டத்தில் மேற்கூறிய நிஜ உதாரணங்கள் நிறைய இருக்கலாம். அதேசமயம், அமைச்சரகமே நிறைவேற்றப்படாத குளத்து வேலைத் திட்டப்பணிகளின் புள்ளிவிவரங்களையும் வழங்கியுள்ளது.
2007-08-ல் திட்டமிட்டபடி சுமார் ஒரு லட்சம் குளத்து வேலைப் பணி நிறைவேறவில்லையாம். 2010-11-ம் ஆண்டுக்கு வரும்போது ஆண்டுக்கு ஆண்டு லட்சங்கள் பெருகி இன்றைய நிலையில் சுமார் ஏழு லட்சம் குளத்து வேலைத் திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியவில்லை என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நிறைவேற்றப்படாத ஏழு லட்சம் குளத்து வேலைத் திட்டங்களுக்கும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.
முதலாவதாக, நூறு நாள் குளத்து வேலைத் திட்டத்தின்கீழ் சராசரியாக 47 நாள்கள்தான் வேலைகள் வழங்கப்படுகின்றன. இந்த 47 நாள்களிலும் வேலைக்கே வராதவர்களும் வந்தவர்களாகக் கணக்கில் இருக்க வாய்ப்புண்டு. ஒரு குளத்து வேலையைத் தொடங்குவதற்கு முன் மேஸ்திரியைப் போல் ஒருவர் நோட்டுடன் நிற்பார். அவரிடம் ஆஜர் சொல்லிவிட்டு வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்கும் மங்கையர் திலகங்கள் நிறைய உண்டு. அதை மறந்துவிட்டு கவனித்தால் குறைந்தது ஆறு மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும். ""நீ கொடுக்கற 70 ரூபாய் காசுக்கு எவ்வளவு வேலை வாங்கிற'' என்று அலுத்துக்கொண்டு, வேலை செய்வார்கள். மாலை சுமார் ஐந்து மணிக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சி உண்டு. தலையில் சும்மாடு, உடை, மண்வெட்டி சகிதம் வேலை செய்த களைப்பே இல்லாமல் பெண்கள் கூட்டமாகத் திரும்புவதை விஷயம் தெரியாதவர்கள் கவனித்தால் ""ஐயோ, பாவம்'' என்று கூட எண்ணலாம். திட்டமிட்டபடி வேலை முடியவில்லையென்றால் வேலை நாள்கள் குறைவு என்பதும் அதைவிட வேலை செய்வதில் உள்ள மெத்தனமும் முக்கியக் காரணம்.
இரண்டாவதாக, இயந்திரங்களைப் பயன்படுத்துவதில் உள்ள தடை. முட்புதர்களை அகற்றுவதற்கு டோசர் வேண்டும். ஆழமாகத் தோண்டவும் டோசர் வேண்டும்.
நிஜமாகவே ஏரி, குளங்களை ஆழப்படுத்தவும், கரைகளைப் பலப்படுத்தவும், நீர்வரத்துக் கால்வாய் வெட்டவும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலமே திட்டமிட்டபடி குளத்து வேலைகளை நிறைவேற்ற முடியும். கிராமங்களில் உழைப்புக்கு நல்ல தேவை உள்ளதால் இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏழைகள் பட்டினி கிடப்பார்கள் என்று நினைப்பது மதியீனம்.
சாலைப் பணிகளுக்கு எவ்வாறு ஜே.சி.பி., டோசர் அனுமதிக்கப்படுகிறதோ அவ்வாறே குளத்து வேலைகளுக்கும் அனுமதிக்கப்படுவது நன்று. சாலை வேலைக்கும், விவசாய வேலைக்கும் அனுமதிக்கப்படும் இயந்திரங்கள் குளத்து வேலைக்கு மட்டும் அனுமதியை மறுப்பதால் காந்தியம் காப்பாற்றப்பட்டுவிடாது. உழைப்பில் உற்பத்தித்திறன் வேண்டும்.
எனினும், நிறைவேற்றப்பட்ட குளத்து வேலைத் திட்டத்தால் பாசன நீர் பெருகி ஓடியும் விவசாய உற்பத்தி கணிசமாக ஏன் உயரவில்லை? இந்தக் கேள்விக்குரிய பதில் அண்ணா ஹசாரே உருவாக்கிய ராலேகான் சித்திக்கும் ஹிவாரே பஜாரும் பதில் சொல்லும். நிறைவேற்றப்பட்ட குளத்துப் பணிகளில் அவற்றின் பயன்பாடு பற்றிய திட்டமோ யோசனையோ இல்லை. சொல்லப்போனால், மகாத்மா காந்தி குளத்து வேலைத் திட்டமே ராலேகான் சித்திக் கிராமத்தில் அண்ணா ஹசாரே பெற்ற வெற்றியால் ஊக்கம் பெற்றுள்ளது.
மேற்படி வெற்றி கிராமங்களில் நன்கு திட்டமிடப்பட்டு விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கிராமிய அளவில் திட்டமிடும்போது, வனத்துறை, கால்நடைத் துறை, வேளாண்மைத் துறை அலுவலர்களையும் பங்கேற்க வைத்து நீர் வடிப்பகுதி கட்டுமானப் பொறியாளர்கள், விவசாயிகள் செயல்பட்டனர். குளத்து வேலைத் திட்டத்தில் நீர் வரத்துக் கால்வாய்கள் சீர்செய்யப்பட்டன. மேய்ச்சல் நிலம் ஒதுக்கப்பட்டது. மரநடவுக்குரிய நிலம் ஒதுக்கப்பட்டது.
விவசாய நிலம் ஒதுக்கப்பட்டு என்ன பயிர் வைக்கலாம் என்ற அளவில் யோசிக்கப்பட்டது. நீர் வரும் பாதை, நீர் நிரம்பியதும் வாய்மடை மூலம் வயலுக்குள் நீர் பாயும் வாய்க்கால் வரை குளத்து வேலைத் திட்டம் முழுமையாகச் செயல்பட்டது. கறவைப்பசு, தீவனப்புல் சாகுபடி, பால் உற்பத்தி, வெங்காய உற்பத்தி, புஞ்சை தானியம், பருப்பு வகை சாகுபடி, பழமரங்கள் என்று கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் அண்ணா ஹசாரே கிராமங்களில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.
மேற்கூறிய முறையில் குளத்து வேலைத் திட்டம் ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப செயல்பட்டால்தான் விவசாயம் செழிக்கும். நிஜமான நடப்பு வேறு. வந்த பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதே ஊராட்சி லட்சியம். உருப்படியான திட்டமில்லாமல் வழங்கப்பட்ட பணத்தில் பொய்க்கணக்கு எழுதிச் சுருட்டியது போக மீதியில், ஊரில் உள்ள குளங்களில் உள்ள புற்களை மேலோட்டமாக வெட்டுவார்கள். நீர்ப்படுகையில் உள்ள மூலைகளில் சற்று மண் அகற்றப்பட்டு வேலை நடந்து முடிந்ததுபோல் பாவ்லா காட்டப்படும்.
இவை எல்லாவற்றையும் மீறி ஒரு சில ஊர்களில் மக்களின் ஒத்துழைப்பால் குளத்து வேலைத் திட்டம் சிறப்புடன் நடப்பதும் உண்டு. ஆனால், தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்யும் ஆர்வம் இல்லாமல் தேக்கப்பட்ட நீர் பயனாவது இல்லை. விவசாயம் செய்து விளைந்து அதை விற்று என்ன லாபம் கிடைக்கப் போகிறது என்ற பயத்தில் விவசாயிகள் கூலி வேலைக்குச் சென்று விடுவதும் நிகழ்கிறது.
பாரம்பரியமாக ஆற்று நீர்ப்பாசனம் உள்ள வயல்களிலும், பெரிய ஏரிப்பாசனம் உள்ள வயல்களிலும், சேற்று நிலங்களிலும் நெல், கரும்பு தொடர்ந்து பயிராகலாம். மற்றபடி புஞ்சை நிலப் பயிர்கள் பூஞ்சையாகவும், பூஜ்ஜியமாகவும் மாறி வருகிறது. இது ஒரு பக்கத்துக் காட்சி.
ஒட்டுமொத்தமாகக் கவனித்தால் "மழைநீர் சேமிப்பு', "நீர்வடிப்பகுதி மேம்பாடு' என்ற திட்டமெல்லாம் கருணா மூர்த்தி காந்தி மகாத்மா - அகிம்சா தர்மாத்மாவின் பெயரில் குளத்து வேலைகளாக மாறி மாபெரும் ஊழல் திட்டங்களாகக் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. வாய்மடை கட்டாமல் கண்மாய்கள் கண்கலங்கி அழுகின்றன. நீர்வரத்து இல்லாமல் கண்மாய்கள் அழுகின்றன. மகாத்மாவின் பெயரைச் சொல்லி இயங்கும் இந்த நாட்டின் குளத்து வேலைத் திட்டத்தில் மக்களை உழைக்காமலேயே ஊதியம் பெற வைக்கும் வசதியை காந்தியும் மன்னிக்க மாட்டார். காரல் மார்க்ஸýம் மன்னிக்க மாட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...