கல்வி நிலையங்களே நாற்றங்கால்கள்

தமிழகம் முழுவதும் இப்போது கல்வி நிலையங்களில் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. பெரும்பாலான
Updated on
3 min read

தமிழகம் முழுவதும் இப்போது கல்வி நிலையங்களில் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்தப்படுவதே இல்லை.

 பொதுவாக தேர்ச்சி விகிதங்கள் அதிகரிப்பதற்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தருவதற்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்குக் கொடுக்கப்படுவதில்லை.

 சமீபத்தில் கோவையில் கம்பன் கழகத்தார் நடத்திய விழாவில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களின் ஆற்றொழுக்கான உரை அனைவருக்குமே இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. கொஞ்சம் ஆர்வமும் ஈடுபாடும் இயல்பாக அமையப்பெற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி பயிற்சியும் கொடுத்து வாய்ப்பும் வழங்கினால் எந்த அளவுக்கு அவர்கள் சிறந்து விளங்குவார்கள் என்பதற்கு அந்நிகழ்ச்சி உதாரணமாக இருந்தது.

 ஒரு தனியார் அமைப்பு, அதுவும் மிக மூத்தவர்களைப் பொறுப்பாளர்களாகக் கொண்ட அமைப்பு, மாணவர்களின் திறன்களைக் கண்டறிவதற்கும் வளர்ப்பதற்கும் சிறிது முயற்சியெடுத்தாலே இந்த அளவு வெற்றி காண முடியுமென்றால் தமிழகத்தில் ஒட்டுமொத்த கல்வித்துறையே உணர்வுபூர்வமாக முழு முயற்சியெடுத்தால் எந்த அளவுக்கு அடுத்த தலைமுறையை நன்நெறிகளுக்கு உட்பட்ட தனித்திறமையாளர்களாக உருவாக்கலாம் என்ற சிந்தனை நம்மை வட்டமிடுகிறது.

 படிக்க வைப்பது என்பது ஒரு கலை. ஒரு காலத்தில் விவரமும் விழிப்புணர்வும் இல்லாத சூழலில் மாணவர்களைப் படிக்க வைப்பதற்கு கரடுமுரடான அணுகுமுறையைக்கூட கையாண்டு இருக்கலாம். அறிவும் அன்பும் பண்பும் சரிவிகிதமாகக் கலந்த அணுகுமுறையைத்தான் இப்போதைய மாணவர்கள் ஏற்பார்கள். பள்ளிக்கூடத்தையும் வகுப்பறையையும் மகிழ்ச்சி நிறைந்த இடமாக மாற்றுவதற்கும், மாணவர்கள் விரும்பி வருகிற பகுதிகளாக உருவாக்குவதற்கும் என்னென்ன செய்யலாம் என்று அரசும் ஆசிரியர்களும் சமூகமும் சேர்ந்து யோசிக்க வேண்டும்.

 பாடதிட்டம், தேர்வுமுறை, அணுகுமுறை என்று பல அம்சங்களில் தனித்தனிக் கவனம் செலுத்தி அவற்றில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சியெடுப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

 மதிப்பெண்களைப் பெறவைப்பது நாணயத்தின் ஒரு பகுதிதான். வாழ்வின் மதிப்புகளை மாணவர்களுக்குக் கற்றுத் தருவதுதான் அந்நாணயத்தின் மறு பகுதி. இரண்டு பகுதிகளும் இருக்க வேண்டிய விதத்தில் இருந்தால் மட்டுமே அந்நாணயம் செல்லத்தக்கதாகக் கருதப்படும். அதுபோலவே மதிப்பெண்களும் வாழ்வின் மதிப்புகளும் ஒருங்கே அமையப்பெற்ற மாணவர்களே முழுமை பெற்றவர்கள்.

 ஒவ்வொரு மாணவனுக்கும் ஒன்றோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட தனித்திறமைகளோ இயற்கையாக அமைந்திருக்கும். ஒரு திறமையுமே இல்லாத மாணவன் என்று யாரும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது விதிவிலக்காகத்தான் இருக்க முடியும். அத்தகைய திறமையைக் கண்டுபிடிக்கிற திறமைதான் அம்மாணவனுக்கோ பெற்றோருக்கோ ஆசிரியர்களுக்கோ தேவைப்படுகிறது.

  பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியம், வினாடி-வினா, நடிப்பு, நடனம் போன்ற மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கப் பயன்படும் ஏராளமான போட்டிகள் உள்ளன.  அதேபோன்று ஓட்டப்பந்தயம், உயரத்தாண்டல், நீளத்தாண்டல், குண்டெறிதல் என்றும் கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து போன்ற உடலினையும் உள்ளத்தையும் உறுதி செய்யும் பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் இருக்கின்றன.

 இவற்றில் ஆர்வமும் திறமையும் உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஈடுபாட்டையும் பயிற்சியையும் வளர்க்கும் பணியை கல்வி நிலையங்கள்தான் மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மணிமகுடமாக விளங்குவது கல்வி நிலையங்களின் ஆண்டுவிழாக்கள்தான். 

 வருடக் கடைசியில் ஆண்டுவிழா நடத்தினால் படிப்பு கெட்டுவிடும், மதிப்பெண்கள் குறைந்துவிடும் என்று எண்ணி சில நிறுவனங்களில் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே ஆண்டு விழாவை நடத்தி முடித்து விடுகின்றனர்.

 இவற்றையெல்லாம் தமிழக அரசும் கல்வித்துறையும் கணக்கிலெடுத்து சில நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.

 அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஆண்டு விழாக்களை அவசியம் நடத்த வேண்டும் என்று ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்த விழா எந்தக் காலகட்டத்தில் நடத்த வேண்டும், அதன் அடிப்படை எவ்வாறு இருக்க வேண்டும் என்று பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை  வழங்க வேண்டும்.

 சிறந்த கல்வியாளர்கள், உயர்நிலைக் கல்வி அலுவலர்கள், சிந்தனையாளர்கள், உளவியல் நிபுணர்கள், கல்வி நிறுவனங்களை நடத்துவோர், ஆர்வம் மிக்க ஆசிரியர்கள், ஈடுபாடு மிக்க மாணவர்கள், பெற்றோர் பிரதிநிதிகள் இத்துறையில் அனுபவம் மிக்க சமூக ஆர்வலர்கள் போன்றோரைக் கொண்ட உயிரோட்டமான குழுவை அமைத்து அவர்களிடம் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்று அரசு அத்தகைய வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கலாம்.

 பல ஆண்டு விழாக்களில் திரைப்படப் பாடல்களின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது.   அதுவும் சில பள்ளிகளில் குருத்துபோல் இருக்கிற ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்களும் கூட திரைப்படப் பாடல்களுக்கு ஆடவைக்கப்படுகிறார்கள்.

 இத்தகைய விஷயங்களில் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் சமூகப் பொறுப்புள்ளதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 கல்வியில் சிறந்து விளங்குகிற மாணவர்கள், கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் தனித்திறன்களோடு திகழ்கிற மாணவர்கள், விளையாட்டு, நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய சேவை அணி, பசுமைப்படை, செஞ்சிலுவைச்சங்கம் போன்ற அமைப்புகளில் இணைந்து நாட்டுப்பற்றையும் சேவை மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்ள விரும்பும் மாணவர்கள், நூலகங்களை முழுமையாகப் பயன்படுத்தி பொது அறிவை வளர்க்க முயற்சிக்கும் மாணவர்கள், தலைமைத் தகுதியை வளர்த்துக் கொண்டு முழு ஆளுமையோடு விளங்க விரும்பும் மாணவர்கள் என்று எல்லாத்தரப்பு மாணவர்களையும் ஊக்குவிக்கவும் உற்சாகப்படுத்தவும் மேலும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்குகிற பொது விழாவாக ஆண்டு விழாக்கள் திகழ வேண்டும்.

 மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிதல், அதனை வளர்த்திட தக்க பயிற்சியளித்தல், அவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை அங்கீகரித்தல் ஆகிய அனைத்து அம்சங்களோடு இத்தகைய மாணவர்களுக்கு சமூக அக்கறை, பொறுப்புணர்வு ஆகிய நற்பண்புகளையும் ஊடுபாவோட்டமாக அவர்களின் தனித்திறன்களோடு கலந்திருக்கச் செய்தலும் அவசியமாகும்.

 விரல்விட்டு எண்ணத்தக்க சில மாணவர்கள் மட்டும் அந்நிறுவனத்தின் செல்லப்பிள்ளைகள் போலவும் மீதமுள்ள பெரும்பான்மையான மாணவர்கள் சவலைக் குழந்தைகள் போலவும் நடத்தப்படுவதும் சில இடங்களில் நடக்கிறது.

  இந்த நடைமுறை தவிர்க்கப்பட்டு இத்தகைய முயற்சிகள் பரவலாக்கப்படுவதோடு ஜனநாயகப்படுத்தப்படவும் வேண்டும்.  மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை உருவாவதற்கும் வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்துவதற்கும் சமூகம் சார்ந்த வாழ்க்கை முறையைக் கற்றுத் தருவதற்கும்தான் மாணவர்கள் இத்தகைய செயல்களிலும் பயிற்சிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.  மொத்தத்தில் இவையெல்லாம் சிறந்த குடிமக்களை உருவாக்குவதற்கான அடித்தளங்களேயாகும்.

 இந்த முயற்சிகள் நடைபெறுகிற அதே காலகட்டத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கும் தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் பாதுகாப்பது முக்கியமாகும். அவர்களின் திறன்களைக் கண்டறிவதற்கான சிறப்பு முயற்சிகளும் அவ்வாறான திறன்கள் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு திறனை அவர்களுக்கும் எப்படியேனும் உருவாக்கி உற்சாகப்படுத்துகிற பணியினை ஆசிரியர்கள்தான் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து மேற்கொள்ள வேண்டும்.

 ஆண்டுக்கொருமுறை நடைபெறுகிற ஆண்டுவிழாக்களால் மட்டும் மாணவர்களுக்கு உணர்வூட்டிவிட முடியாது. ஆண்டு முழுவதும் இலக்கிய மன்றச் செயல்பாடுகளும் கவின்கலை மன்றம் இன்னும் இதுபோன்ற பிறமன்றச் செயல்பாடுகளும் சிறப்பானதாகவும் வித்தியாசமானதாகவும் இருந்தால் மட்டுமே ஆண்டுவிழா அர்த்தமுள்ளதாகவும், உயிரோட்டமுள்ளதாகவும் திகழும்.

  சிறந்த கல்வியையும் மிகச்சிறந்த பண்பு நலன்களையும் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு சமூகப் பார்வையோடு கூடிய ஆற்றல்மிகு சிறந்த குடிமக்களை உருவாக்கிடும் உலைக்களன்களே கல்வி நிலையங்கள்; ஆம்.... சமூகத்தின் நாற்றங்கால்கள் கல்வி நிலையங்களே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com