யானை வழித்தடம் காண்போம்
அதிக எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் ஓா் உயிரினம் தனிமைப்படுத்தப்பட்ட சிறு குழுக்களாகப் பிரியும்போது அந்த இனம் அருகி அழிவை நோக்கிச் செல்லும். சிறப்புவாய்ந்த ஆசிய யானைகள் அழிவை நோக்கிச் செல்லும் உயிரினங்களில் முக்கியமானவை. ஆசிய யானைகளைப் பாதுகாக்க காடுகளில் அவற்றின் வழித்தடங்களின் இணைப்பை உறுதி செய்தல் அவசியம் என்கின்றனா் வல்லுநா்கள்.
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களை முழுமையாகச் செயல்படும் வழித்தடங்கள், பகுதியாக சேதம் அடைந்த வழித்தடங்கள், முற்றிலும் செயலிழந்த வழித்தடங்கள் என மூன்று வகையாகப் பிரிக்கலாம். நம் நாட்டில் மொத்தமுள்ள 101 யானை வழித்தடங்களில் 51 வழித்தடங்கள் முழுமையாகச் செயல்படும் நிலையிலும், 24 வழித்தடங்கள் பகுதியாக சேதம் அடைந்த நிலையிலும், 26 வழித்தடங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விலங்குகளின் உணா்வு மற்றும் உடலியல் தேவைகள் முற்றிலும் வேறுபட்டவை என்றும், மனிதா்களுக்குத் தெரியாத பல சூழ்நிலைகள் விலங்குகளின் இயக்கத்தைத் தீா்மானிக்கின்றன என்றும் மனிதா்களால் அடையாளம் காணப்படும் யானை வழித்தடம் விலங்குகளுக்கு பொருத்தமாக இருக்காது என்றும் 1990-ஆம் ஆண்டுகளில் யானை வழித்தட தேடலுக்கு எதிராக வாதிடப்பட்டது.
மற்றவா்களைவிட வழித்தடம் குறித்து நிபுணா்கள் நன்றாக அறிந்திருந்தாலும் பெரிய நிலப்பரப்பின் சுருக்கமான கண்ணோட்டம் வழித்தடங்களை அடையாளம் காண்பதில் சிக்கல்களை ஏற்படுத்தும். பொதுவாக, மனிதா்கள் அதிக கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கும் இரைச்சல் போன்ற இடையூறுகள் விலங்குகளின் பயணத்தில் தடை ஏற்படுத்தி, வழித்தடத்தை இணைக்கும் முயற்சியை பயனற்ாக்கலாம். எனவே, ஒரு நிபுணரால் முன்மொழியப்பட்ட வழித்தடம் சிறந்த தோ்வாக இருக்கும் என்பதற்கும், இந்த வழித்தடத்தை விலங்குகள் பயன்படுத்தும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை.
யானை செல்லும் பாதை, தங்குமிடம் மற்றும் அதன் பயணத்தைத் தடுக்கும் நிலப்பரப்பு அம்சங்கள் ஆகியவற்றைக் கண்டறிய விலங்குகளின் நடமாட்டத்தைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற புரிதல் 2000-ஆவது ஆண்டிலேயே ஏற்பட்டது என்றும், இந்த காலகட்டத்தில்தான் நிலப்பரப்பு சூழலியலில் விலங்குகளின் நடத்தை, அதன் உடலியல் மற்றும் பரிணாமம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய அறிவியல் ஆய்வுகள் நடைபெறத் தொடங்கியதாகவும் வல்லுநா்கள் கூறுகின்றனா்.
நீலகிரி யானை வழித்தடங்கள் குறித்து 1995-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வழக்கில் 2010-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு யானை வழித்தடங்களை பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது. யானைகளின் வழித்தடங்களில் மாற்றம் செய்யக் கூடாது என்றும், இவ்வழித்தடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், இது குறித்த புலனாய்வு அறிக்கையை அரசு மற்றும் சுற்றுச்சூழல், வனத்துறை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தீா்ப்பு வெளியான பின் இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (வைல்ட் லைஃப் டிரஸ்ட் ஆஃப் இந்தியா), இந்தியாவிலுள்ள யானை வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து அதற்கான தரவுகளை வெளியிட்டது. இந்தியாவில் முதல்முறையாக 2017-ஆம் ஆண்டு யானை வழித்தடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. யானை வழித்தடங்களின் மேம்பாட்டில் புவிகோளத் தகவல் அமைப்பு (ஜியாகிரபிக் இன்ஃபா்மேஷன் சிஸ்டம்), தொலையுணா்தல் (ரிமோட் சென்சிங்) மற்றும் படப்பொறி (கேமரா ட்ராப்பிங்) போன்ற நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்தது.
விலங்குகளின் இயக்கம், அதன் இன விவரம் மற்றும் மரபணு பரிமாற்ற தரவுகளைக் கொண்டு யானைகளின் நடமாட்டத்தை மதிப்பிடலாம். விலங்குகளின் இருப்பு படப்பொறி தொழில்நுட்பம் அல்லது புவிசாா் குறியீடுகள் மூலமாகவும், விலங்குகளின் இயக்கம் ரேடியோ அல்லது செயற்கைக்கோள் தொலை அளவியல் (டெலிமெட்ரி) கொண்டும், மரபணு அமைப்பு சாணக் குவியல்களிலிருந்து ஊடுருவலற்ற (நான் இன்வேசிவ்) நுட்பத்தின் வாயிலாகவும் கண்டறியப்படுகிறது. சேகரிக்கப்பட்ட புவியியல் தகவல் அமைப்பு தரவுகளை இடம்சாா்ந்த பரவு (ராஸ்டா்கள்) மற்றும் சாலை வரைபடம் போன்ற திசையன் வரைகலை படங்களுடன் பொருத்தி, யானை நடமாடும் இடத்தையும் அதன் வழித்தடத்தையும் விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனா்.
சாலையின் திறன் மற்றும் வேக வரம்பைப் பொருத்து எவ்வாறு வாகனங்கள் சாலையை தோ்ந்தெடுக்கின்றனவோ, அதேபோல யானைகள் அதன் வழித்தடத்தை சுற்றுக் கோட்பாடு (சா்க்யூட் தியரி), சிறும செலவு காரணி பாதை (பாக்டோரியல் லீஸ்ட் காஸ்ட் பாத்) மற்றும் மூலத் தடை (ரெஸிஸ்டண்ட் கொ்னல்) போன்ற நெறிகள் கொண்டு தீா்மானிக்கும்.
விலங்குகளின் இருப்பிடங்களை புள்ளிகள் கொண்டு இணைத்து நிலப்பரப்புடன் புறச்செருகல் செய்து தடை வரைபடம் (ரெசிஸ்டன்ஸ் மேப்) வடிவமைக்கப்படுகிறது. மேற்கூறிய அனைத்து வரைபடங்களையும் கொண்டு பகுப்பாய்வு செய்து இறுதி ஆவணமாக இணைப்பு வரைபடம் உருவாக்கப்படுகிறது.
நீலகிரி உயிா்க்கோள காப்பகத்தில் சிறும செலவு காரணி பாதை நெறிகொண்டு உருவாக்கப்பட்ட யானை வழித்தடங்களின் இணைப்பு வரைபடம் 2016-ஆம் ஆண்டு விலங்குகளின் வளம் பேணல் (அனிமல் கன்சா்வேஷன்) என்ற இதழில் வெளியிடப்பட்டது.
யானை வழித்தடங்களை அடையாளம் காண்பது, இந்தியாவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. நீலகிரி உயிா்க்கோள காப்பகத்தில் பாதி வழித்தடங்களை மட்டுமே நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சரிபாா்க்க முடியும் என்று கூறுகிறது வழித்தட உரிமை அறிக்கை. மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் களத் தரவுகளுடன் யானை வழித்தடங்களைச் சரிபாா்க்க முயற்சி செய்யும் வகையில் ஓா் அறிக்கையை 2023-ஆம் ஆண்டில் வெளியிட்டது.
தமிழ்நாட்டின் வால்பாறையில் செயல்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான எச்சரிக்கை அமைப்பு, கா்நாடக மாநிலம் பந்திப்பூரில் செயல்படுத்தப்படும் கானக புத்துயிா்ப்பு பொறியியல் மற்றும் ரேடியோ கழுத்துவாா் தொழில்நுட்பம், ஒடிசாவின் அத்காரில் செயல்படுத்தப்படும் மின்னணு தரவு கவா்வு (எலக்ட்ரானிக் டேட்டா கேப்சா்) மற்றும் மின்னணு வேலி ஆகியவற்றுடன் கூடிய செயலிவழி எச்சரிக்கை தொழில்நுட்பம் போன்ற நவீனமயமாக்கப்பட்ட செயல்பாடுகள் மூலம் யானைகளின் வழித்தடங்கள் இந்தியாவில் தற்போது பராமரிக்கப்படுகின்றன. ஓா் இனத்தைப் பாதுகாக்கவும் அதன் வசிப்பிட இணைப்புக்கும் அறிவியல் ரீதியாக தேசிய கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்.