அஸ்ஸாமியர்களை மிரட்டிக் கொண்டிருக்கும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ சர்ச்சை!

இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல அல்லாது, வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, அங்கு வாழும் மக்களுக்கு இந்த NRC லிஸ்டில் பெயர் இடம்பெற வேண்டுமென்பது வாழ்வின் அச்சுறுத்தக்கூடிய அச்சங்களில் ஒன்றாகி
அஸ்ஸாமியர்களை மிரட்டிக் கொண்டிருக்கும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ சர்ச்சை!

இந்தியாவின் பிற மாநிலங்களைப் போல அல்லாது, வட கிழக்கு மாநிலங்களைப் பொறுத்தவரை, அங்கு வாழும் மக்களுக்கு இந்த NRC லிஸ்டில் பெயர் இடம்பெற வேண்டுமென்பது வாழ்வின் அச்சுறுத்தக்கூடிய அச்சங்களில் ஒன்றாகி இருக்கிறது. இதில் பெயர் இல்லையென்றால் அவர் இந்தியக் குடிமக்களுள் ஒருவராகக் கருதப்பட வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு இந்தியாவில் வசிக்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது. லிஸ்டில் பெயர் இல்லை என்று அறிவிக்கப்படுபவர்கள் தீர்ப்பாயத்தின் முடிவுக்குப் பின் சிறையில் அறைக்கப்படுவது வாடிக்கை. 

பொதுவாக இந்த விதமான நடைமுறை மேற்கொள்ளப்படுவதின் அடிப்படை காரணம் இந்தியாவின் எல்லைப்புற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் புலம்பெயரும் அண்டை நாட்டுக்காரர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்த போதும், இதன் செயல்பாடுகள் சொந்த நாட்டுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ச்சியை மேற்கொள்ளும் மக்களுக்கே  ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகத் தான் இருக்கிறது.

தேசிய குடிமக்கள் பதிவேடு என்றால் என்ன?

தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அஸ்ஸாமில் உள்ள இந்திய குடிமக்களின் பட்டியல். இது முதன்முதலில் 1951-ல் தயாரிக்கப்பட்டது. 1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் பின்னர் இந்த
பதிவேட்டை  அஸ்ஸாம் அரசு உருவாக்கியது.

அஸ்ஸாம் மாநிலத்தில் வாழ்பவர்களில், இந்த பதிவேட்டில் உள்ளவர்கள் மட்டுமே இந்திய குடிமக்களாக கருதப்படுவார்கள். மற்றவர்கள் அனைவரும் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரெல்லாம் தகுதியானவர்கள்?

1951-ல் வெளியான தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளவர்களும், 1971 தேர்தலின் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களும் 2018-க்கான  தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம் பெற தகுதியானவர்கள்.

இந்த இரு பட்டியலிலும் இல்லாதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

ஏன் இந்தப் பதிவேடு இப்போது மீண்டும் தயாரிக்கப்பட்டது?

2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் விதித்த ஆணையைத் தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு 2018 தயாரிக்கப்பட்டது. குடிமக்கள் சட்டம் 1955-ன் படியும், அஸ்ஸாம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படியும், வங்கதேசம் மற்றும் அருகில் உள்ள நாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பான முறையில் இடம்பெயர்ந்து அஸ்ஸாமில் வாழ்பவர்களைக் கண்டறியவும், இதுபோன்ற நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும் தேசிய குடிமக்கள் பதிவேடு 2018 தயாரிக்கப்பட்டுள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு எப்படி தயாரிக்கப்பட்டது?

2018-க்கான தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி 2015 மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முடிந்தது. இதற்கு 3.29 கோடி மக்கள் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்தவர்கள் அனைவரையும்
ஒவ்வொரு வீடாகச் சென்று அதிகாரிகள் கள ஆய்வு செய்து, பெயர்களை சரிபார்த்து, சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப வம்சாவழியை ஆய்வு செய்து  இந்த பதிவேட்டை தயார் செய்திருக்கின்றனர்.

யாருடைய பெயரெல்லாம் விடுபட்டிருக்கிறது?

விடுபட்டுள்ள 40.07 லட்சம் பேர்களில் 2.48 லட்சம் பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் அஸ்ஸாம் அரசு போலி வாக்காளர்கள் (டி-வோட்டர்ஸ்) என்று சந்தேகிக்கும் நபர்களும் அடங்குவார்கள். அது மட்டுமல்லாமல் இந்த டி-வோட்டர்ஸின் வம்சாவழியினரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து மற்றவர்களின் பெயர்கள் காத்திருப்போர்
பட்டியலில் ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு அஸ்ஸாம் அரசு எந்த காரணங்களும் தெரிவிக்கவில்லை.

அடுத்து என்ன?

ஆகஸ்ட் 30-ம் தேதியிலிருந்து பெயர் விடுபட்டவர்கள் மறுவிண்ணப்பம் செய்யலாம். பெயர் விடுபட்டவர்கள் ‘வெளிநாட்டவர்கள்’ என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் இதில் குறிப்பிடப்பட
வேண்டிய விஷயம் என்னவென்றால் 2015-ம் ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே மறுவிண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள்.

சில நாட்களுக்கு முன்பு சிறுமி தற்கொலைச் சம்பவம் போன்றே இன்னொரு அதிர்ச்சிக்குரிய சம்பவமும் அஸ்ஸாமில் அரங்கேறியிருக்கிறது.

அமிலா ஷா என்ற நடுத்தர வயதுப் பெண்மணியை அவர் வெளிநாட்டுக்காரர் என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது அஸ்ஸாம் காவல்துறை. காரணம் அவரது பெயரும் NRC லிஸ்டில் இல்லை. ஆனால், அவரது பிள்ளைகள் மற்றும் உறவினரின் பெயர்கள் லிஸ்டில் இடம்பெற்றிருந்தன. இந்தியாவின் பிகார் மாநிலத்தில் பிறந்த அமலா ஷா தற்போது தனது குடும்பத்தினருடன் அஸ்ஸாமில் வசித்து வருகிறார். அவர் தன் வாழ்க்கையில் மேற்கொண்ட இடப்பெயர்ச்சி என்பது பிகார் முதல் அஸ்ஸாம் வரை மட்டுமே, அப்படி இருக்கையில் அவரை அயல்நாட்டுக்காரர் என்று குற்றம் சுமத்தில் சிறையில் அடைத்தது எவ்வகையில் நியாயம் எனப் போராடி வருகின்றனர் அவரது குடும்பத்தினர். 

NRC குளறுபடியால் நேர்ந்த உயிர்ப்பலி!

14 வயதுச் சிறுமி தற்கொலை, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமியின் பெயர், மாநில அரசு தற்போது வெளியிட்டு வரும் குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டில்(NRC LIST) இல்லை எனும் காரணத்துக்காக தன் சுடிதார் துப்பட்டாவில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் செய்தி.

அவளது தற்கொலைக்கு சமீபத்தில் வெளியான  National Register of Citizens (NRC) தான் காரணம் என்கிறார்கள் அவளது உற்றாரும், உறவினரும். உண்மையில் நடந்தது என்ன? ஆஃப்டர் ஆல் NRC... அதில் ஒருமுறை பெயர் இடம்பெறவில்லையென்றால் என்ன நஷ்டமாகி விடப்போகிறது... தகவல் சேகரிப்பு மற்றும் பதிவுப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின்  கவனக்குறைவால் சிலரது பெயர் இப்படி விடுபடுவது வாடிக்கை தான், சம்மந்தப்பட்டவர்கள் தங்களது பிறப்பு மற்றும் இருப்பை உறுதி செய்யும் சான்றிதழ்களை அளித்தால் மீண்டும் அதில் பெயர் இணைத்துக் கொள்ளப் போகிறார்கள். இதற்குப் போய் தற்கொலை செய்து கொள்வதெல்லாம் மிகப்பெரிய முட்டாள் தனம் என்று தான் பலருக்கும் தோன்றக்கூடும்.

ஆனால் வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் வட இந்தியாவின் சில பின்தங்கிய மாநில அரசுகளின் செயல்பாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு வாழும் ஏழை எளிய மற்றும் மைனாரிட்டி மக்களுக்கு இத்தகைய பதிவேடுகளில் பெயர் இடம் பெறுவதின் அடிப்படையில் தான் அவர்கள் இந்தியக் குடிமக்களாகவே கருதப்படுவார்கள் என்பதோடு இதன் அடிப்படையில் தான் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளோ அல்லது அரசின் இட ஒதுக்கீடுகளோ கூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது எனும் போது, அந்தச் சிறுமி தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டதின் அனர்த்தம் நமக்கு ஓரளவுக்கேனும் நமக்கு புரிய வேண்டும்.

அஸ்ஸாம் மாநிலம் தாரங் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி நூர் நஹர் பேகமின் பெயர் அஸ்ஸாம் அரசு கடந்தாண்டு வெளியிட்டிருந்த NRC வரைவுப் பதிவேட்டில் இடம்பெற்றிருந்தது. அதனால் இறுதியாக வெளியிடப்படும் லிஸ்டிலும் தன் பெயர் இருக்குமென்று அந்தச் சிறுமி உறுதியாக நம்பிக் கொண்டிருந்த வேளையில் சமீபத்தில் அஸ்ஸாம் அரசு வெளியிட்ட கூடுதல் வரைவுப் பட்டியலில் சிறுமியின் பெயர் இல்லை. அரசு வெளியிட்ட லிஸ்டில் தன் குடும்பத்தினரின் பெயர் இருக்கிறதா என்பதைச் சோதிக்கச் சென்றிருந்த நூரின் அப்பா, அதில் அவளது பெயரைக் காணாததால் மகளை அலைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்ட மாத்திரத்தில் தான் அச்சிறுமி இப்படி ஒரு பைத்தியக்காரத் தனமான முடிவெடுத்திருக்கிறாள்.

சொல்லப்போனால் இது அரசு வெளியிட்ட இறுதிப்பட்டியல் அல்ல. ஜூலை 31 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. இந்தப் பட்டியலில் பெயர் இல்லா விட்டால் இறுதிப் பட்டியலில் நிச்சயம் பெயரைச் சேர்த்தாக வேண்டும் என்பது தான் நியதி. ஆனால், அதெல்லாம் அந்தச் சிறுமிக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்துடன் மாநில அரசு ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முன் அது குறித்தான் போதிய விளம்பரங்களை வெளியிட்டு மக்களிடையே அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இருக்க வேண்டும். NRC லிஸ்டைப் பொருத்தவரை அதைச் செய்யத் தவறி விட்டது மாநில அரசு. அதனால் நிகழ்ந்த தற்கொலை தான் இது. சிறுமியின் கொலைக்கு மாநில அரசின் மெத்தனத்தைத் தான் குற்றம் கூறியாக வேண்டும். என்கிறார் சிறுமியின் தற்கொலைச் செய்தி அறிந்து அவளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற அஸ்ஸாம் சிறுபான்மை மாணவர் சங்கத்தின் (AAMSU) தலைவர் அப்துல் ஹாய்.

நிலைமை இவ்வாறிருக்க, சிறுமியின் தற்கொலை NRC யுடன் தொடர்புடையது என்ற கூற்றை மறுத்த தாரங் காவல்துறை கண்காணிப்பாளர் அமிர்த் புயான், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய காவல்துறை விசாரணை நடந்து வருவதாகக் கூறியதோடு;

"NRC காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக இதுவரை எனக்கு எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை. இருப்பினும், எங்கள் விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது," என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு NRC லிஸ்டில் 102,462 நபர்களின் பெயர்களைக் கொண்ட கூடுதல் வரைவு விலக்கு பட்டியலை அஸ்ஸாம் அரசு புதன்கிழமை வெளியிட்டது, ஆனால் பின்னர் வேறுபட்ட காரணங்களால் அந்த லிஸ்ட் தகுதியற்றதெனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com