வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன்! 11 வயதுச் சிறுமியின் முழக்கம்

'இந்தியாவின் கிரேட்டா தன்பெர்க்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ரிதிமாவிற்கு  பதினொன்று வயதுதான் ஆகிறது.
வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன்! 11 வயதுச் சிறுமியின் முழக்கம்

'பசுமைப் போராளி' கிரேட்டா தன்பெர்க்குடன் தோளோடு தோளாக நின்ற பதினாறு பேர்களில் இந்தியாவைச் சேர்ந்த ரிதிமா பாண்டேயையும் ஒருவர். 'இந்தியாவின் கிரேட்டா தன்பெர்க்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ரிதிமாவிற்கு  பதினொன்று வயதுதான் ஆகிறது.

நியூயார்க் நகரில்  கிரேட்டா தன்பெர்க்குடன் சேர்ந்து  போராட்டம்  நடத்த சென்ற மாத  கடைசி வாரத்தில் ரிதிமா  நியூயார்க்   சென்று வந்திருக்கிறார். 'சுற்றுப்புறச் சூழலைக் காக்கவும், பூமி வெப்பமாகாமல் பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து எடுக்க வேண்டும்' என்று ஐநா சபையிடம்  சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் கையொப்பமிட்டவர்களில் கிரேட்டா  உட்பட்ட பதினாறு  பேர்களில் ரிதிமாவும் ஒருவர். 

'நல்ல எதிர்காலம் வேண்டும்..  எல்லா குழந்தைகளின்,  வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தைப்  பாதுகாக்க விரும்புகிறேன்..' என்பதுதான் ரிதிமாவின் கோஷம்! குறிக்கோள்!

சென்ற மாதம் நியூயார்க்கில்  நடந்த  'ஐநா  பருவநிலை  நடவடிக்கைக் கூட்டத்திலும்   ரிதிமா கலந்து கொண்டார். யார்  எப்போது வேண்டுமானாலும் கலந்து கொள்ளக் கூடிய  கூட்டம் அல்ல அது.  பிறகு எப்படி  ரிதிமா இத்தனை சிறிய வயதில் கலந்து கொண்டார்?  கலந்து கொள்ளும் வாய்ப்பு எப்படி கிடைத்தது ?

ரிதிமாவே விளக்குகிறார்: 

'நார்வே நாட்டின்  ஒஸ்லோ  நகரத்தில் ஓர் அமைப்பு பருவ நிலை மாற்றம் குறித்த  புரிதலுள்ளவர்களை ஒன்று சேர்ப்பதில் முனைந்துள்ளது என்று அறிந்தேன். அந்த அமைப்புடன்  தொடர்பு கொண்டேன். அவர்கள் என்னை ஒரு நேர் காணல் செய்தார்கள். ஆகஸ்ட் மாதம்  அந்த நேர்காணல் நோய்டாவில் நடந்தது. அந்த  நேர்காணலில் பசுமையைக் காத்தல் குறித்த எனது ஆர்வம், பருவநிலை மாற்றம் குறித்த எனது புரிதல், மற்றும் அறிவு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்காக  நான் இதுவரை எடுத்த நடவடிக்கைகள், தொடுத்த வழக்குகள் குறித்து  விவரித்தேன். அவர்களுக்கு திருப்தி. இறுதியில் என்னைத் தெரிவு செய்தார்கள்.

வந்து போக வேண்டும். 'ஐ.நா'  பருவநிலை  நடவடிக்கைக் கூட்டத்தில்' கலந்து கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்கள். நான் அதன்படி  நியூயார்க் சென்று வந்தேன். கூட  அப்பாவும் வந்திருந்தார். நியூயார்க்கில் கிரேட்டாவைச் சந்தித்தேன். அளவளாவினேன். கிரேட்டாவுடன் நானும், மேலும் பல நாடுகளிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட  பதினான்கு  பசுமை ஆர்வலர்களுடன் சேர்ந்து  கோஷ  அட்டைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தோம்.  ஐநா கூட்டத்தில் கலந்து கொண்டோம். எங்களது எண்ணங்களை பதிவு செய்தோம்.

தொடர்ந்த ரிதிமாவின் தந்தை தினேஷ் பாண்டே கூறியதாவது: 'நியூயார்க் நகரில் நடந்த  ஐநா  நிகழ்வில் கலந்து  கொண்டதுடன்,  பருவநிலை மாற்றம் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால்  ரிதிமா  ஒரு சூப்பர் ஸ்டாராகி விட்டாள்'' என்றார்.

ரிதிமாவின் சொந்த மாநிலம் உத்தரகாண்ட். ஆறு ஆண்டுகளுக்கு முன் நைனிடாலிலிருந்து ஹரித்வாருக்கு  ரிதிமாவின் குடும்பத்தினர்  இடம் மாறினர். அந்த இடமாற்றம்தான் ரிதிமாவின்  சிறு வயதிலேயே ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்துள்ளது. சில வருடங்களாக இந்தப் பகுதியில் கோடை காலத்தில் அதிக வெப்பமும், குளிர் காலத்தில் அதிகக் குளிரும்  அனுபவிக்கப்படுகிறது. ரிதிமாவும்  இந்த காலமாற்றத்தை உணர்ந்திருக்கிறார். இந்த சுற்றுப்புறச் சூழல் மாற்றம் காரணமாக  கோடை காலத்தில் கங்கை நதியின்  நீர் மட்டம் குறைந்து வருகிறது. அதன் காரணமாக  'ஒவ்வொரு ஜுலை மாதமும்  நடைபெறும் 'கன்வர் யாத்திரை' என்ற சடங்கினை நிறைவேற்றுவதில் பல சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் இந்தச் சடங்கினை நடத்த முடியாமலும் போகலாம்'  என்பதையும் ரிதிமா புரிந்து கொண்டிருக்கிறார்.

மழைக் காலத்தில் அதிக மழை  பெய்து கங்கையில் நீர் பெருக்கெடுத்து வெள்ள அபாயம் ஏற்படுகிறது என்பதையும் அனுபவபூர்வமாக ரிதிமாவுக்குத்  தெரிய வந்தது. இவை அனைத்திற்கும் காரணம்,  சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதால்   ஏற்படும் பருவநிலையில் மாற்றங்கள்தான்' என்று ரிதிமாவுக்குப் புரிதல் வந்துவிட்டது. அது   ரிதிமாவை  பசுமை ஆர்வலராக  மாற்றியது. 

ரிதிமா அகில இந்திய அளவில் பிரபலமானது 2017 ஏப்ரல் மாதம்தான். பலவிதங்களில்  மாசு அடைந்து வரும் இந்திய சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க ஒரு திட்டத்தை உடனடியாக  தயாரிக்க  மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாணையத்தில் ரிதிமா  வழக்கு தொடுத்தார்.

ஏற்கெனவே  இந்த மாதிரியான பசுமைப் பிரச்னைகள்  'சுற்றுப்புறச் சூழல் பாதிப்பின் மதிப்பீட்டின் கீழ்' கொண்டு வரப்பட்டுள்ளதால் ரிதிமாவின் கோரிக்கையும் அந்த மதிப்பீட்டிற்குள்  வந்துவிடும்' என்று பசுமைத் தீர்ப்பாயம் ரிதிமாவின் மனுவின் மீது தீர்ப்பினை வழங்க, தீர்விற்காக ரிதிமா  உச்ச நீதிமன்றத்தை  அணுகியுள்ளார்.

அண்மையில் மும்பையில் 'ஆரே' காடுகள் அழிக்கப்படுவது குறித்தும்  தனது எதிர்ப்புக் குரலை ரிதிமா எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி நேரிடையாகத் தலையிட்டு  மரங்கள் வெட்டப்படுவதை நிறுத்துமாறு ரிதிமா கேட்டுக் 
கொண்டுள்ளார்.

வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள் அழிக்கப்படுகின்றன... இது  ஒரு கெட்ட செய்தி. இந்தியாவில் என்ன நடக்கிறதென்று  விளங்கமாட்டேன்கிறது.. பருவநிலை மாற்றம் அதிகம் பாதித்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பாதிப்புகளை  நாட்டு மக்கள்  வருடா வருடம் ஏதாவது ஒரு விதத்தில் அனுபவப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று  தனது உணர்வுகளை  ரிதிமா பதிவு செய்திருக்கிறார்.

மேலும், கங்கை நதியை சுத்தமாக்க கோடிகள் செலவு செய்யப்பட்டாலும்  இன்னமும் கங்கையில் குப்பை கூளங்கள் பிளாஸ்டிக் கழிவுகள், ஆலைக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. யாருக்கும் பொறுப்பில்லை. கங்கை மாசு படிந்ததாகவே பாய்ந்து கொண்டிருக்கிறது. வழிபாட்டு மற்றும் சுற்றுலா ஸ்தலமான  ஹரித்துவாரில்  காற்று மண்டலம் அதிகமாக மாசு  நிறைந்துள்ளது. ஹரித்துவாரில் வாழும் மக்களையும், நகருக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை இது பாதிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை நுகர்வோர்களாகிய நாம் நிறுத்தினால், பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்பவர்களும் பிளாஸ்டிக் தயாரிப்பதை  நிறுத்துவார்கள்' என்கிறார் ரிதிமா பாண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com