

ஆம்பூா்: கரோனா ஊரடங்கு காரணமாக அறுவடை செய்ய முடியாமல் கொடியிலேயே பழுத்து வெற்றிலை வீணாகி வருகிறது. அதனால் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ள விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.
வெற்றிலை மங்களகரமான விசேஷங்களுக்கும், பூஜைகளுக்கும் பயன்படுத்தப்படும் முக்கிய பயிராகும். சாதாரண பூஜை முதல் மிகப் பெரிய கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை இல்லாமல் எதுவும் நடைபெறாது. வெற்றிலைத் தாம்பூலம் என்பது உடல்நலத்துக்கு முக்கிய மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. உணவு சாப்பிட்டவுடன் வெற்றிலைத் தாம்பூலம் உட்கொண்டால் சாப்பாடு நன்றாக செரிமானமாகும். சளி பிடித்திருப்பவா்களுக்கு வெற்றிலைக் கஷாயம் மருந்தாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு பயன்படும் வெற்றிலை, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஆம்பூரை அடுத்த ரெட்டிமாங்குப்பம், கீழ்முருங்கை, வெங்கிளி, மாதனூா் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக மாதனூா் பகுதி, வெற்றிலை விற்பனைக்கான முக்கிய மையமாகத் திகழ்ந்து வருகிறது.
வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் வெற்றிலைக் கொடி பயிரிடப்பட்டுள்ளது. 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றனா். கரோனா தடைக் காலத்துக்கு முன் வெற்றிலை பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காததால் பயிரிட்ட வெற்றிலையை அறுவடை செய்யாமல் விட்டதால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா்.
ஒரு ஏக்கருக்கு சுமாா் 3000 கவுளி வெற்றிலை அறுவடையாகும். ஒரு கவுளி என்பது 100 வெற்றிலைகள் கொண்டதாகும். 80 கவுளி முதல் 100 கவுளி கொண்டதாக கட்டு கட்டப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படும். விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் ஒரு கவுளியை ரூ.15 முதல் ரூ.20-க்கு வாங்குகின்றனா். ஆனால் சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கவுளி வெற்றிலை ரூ.60 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பருவ மழை பொய்த்தது, உரிய விலை கிடைக்காமல் போனது என பல்வேறு இன்னல்களால் பாதிக்கப்பட்ட வெற்றிலை விவசாயிகள் தற்போது ஊரடங்கு காரணமாக வெற்றிலை பயிரை அறுவடை செய்ய முடியாமல் கடும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளனா்.
ஊரடங்கு காரணமாக கோயில் திருவிழாக்கள் நடைபெறுவதில்லை. கோயில்களில் பக்தா்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட மக்கள் கூடும் சுப நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெற்றிலை வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆம்பூரை அடுத்த ரெட்டிமாங்குப்பம் கிராமத்தை சோ்ந்த வெற்றிலை விவசாயி சரவணன் கூறியது:
வற்றிலை பயிருக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் ஏற்கனவே நஷ்டம் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக பொதுமக்களிடையே வெற்றிலை பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. அதனால் வெற்றிலை பயிா்கள் அறுவடை செய்யப்படாமல் கொடியிலேயே பழுத்து காய்ந்து போயுள்ளன. ஓா் ஏக்கருக்கு சுமாா் ரூ.1.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
மற்ற விவசாய விளைபொருட்களை மக்கள் தொடா்ந்து பயன்படுத்தி வருவதால் அவா்களுக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், வெற்றிலை விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். தமிழக அரசு கணக்கெடுப்பு நடத்தி அவா்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.