'சாதனைக்கு வறுமை தடையில்லை': 1330 குறள்களைக் கூறும் சிறுவன்!

தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர் குகனுக்கு சிறு வயது முதலே நினைவுத் திறன் அதிகம் இருந்துள்ளது. இவர் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது 1,330 குறள்களையும் ஒப்புவித்து சாதனை படைத்தார்.
வீட்டு வாசலில் கரும்பலகையில் திருக்குறள் எழுதிப்போடும் குகன்.
வீட்டு வாசலில் கரும்பலகையில் திருக்குறள் எழுதிப்போடும் குகன்.

திருக்குறள் குறித்த விழிப்புணர்வும், அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் தற்போது குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடமும் 1,330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் ஆர்வம் பரவலாகியுள்ளது.

எனினும், வசதி படைத்த மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த குழந்தைகளால் மட்டுமே இச்சாதனையைப் படைக்க முடிகிறது என்ற நிலையும் இருக்கிறது.

இந்நிலையில், இச்சாதனைப் படைப்பதற்கு வறுமை ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் தஞ்சாவூர் மேல வீதி பாலோபா சந்தைச் சேர்ந்த ஜெ.குகன். பதிமூன்று வயதுடைய இவரது தாய்-தந்தை இருவரும் மாற்றுத் திறனாளிகள். 

தனது பெற்றோர் ஜெயக்குமார்- ராஜலட்சுமியுடன் குகன்
தனது பெற்றோர் ஜெயக்குமார்- ராஜலட்சுமியுடன் குகன்

தந்தை ஜெயகுமார் வாய் பேச இயலாத, காது கேளாத, கால் ஊனமுடைய மாற்றுத் திறனாளி. இச்சூழ்நிலையிலும் தையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். தாய் ராஜலட்சுமிக்கும் கால் ஊனமாக இருந்தாலும், தூய்மைப் பணி செய்து குடும்ப வருவாய்க்கு உதவியாக இருக்கிறார்.

இவர்களது இரண்டாவது மகன்தான் குகன். தற்போது ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் குகனுக்கு சிறு வயது முதல் நினைவாற்றல் திறன் அதிகம் இருக்கிறது. இத்திறன் அவருக்கு இருப்பதை அவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தாயார் கண்டறிந்துள்ளார். விளையாட்டின்போது திருக்குறளைச் சொல்லிக் கொடுத்தார். குகனும் ஒவ்வொரு குறளையும் விரைவாக மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் காட்டி வந்தார். 

தாய் ராஜலட்சுமியுடன் குகன்
தாய் ராஜலட்சுமியுடன் குகன்

இவர் ஒன்றாம் வகுப்பு முதல் தஞ்சாவூர் அரண்மனை பகுதியிலுள்ள டி.கே.ஆர். நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தார். அப்பள்ளி ஆசிரியை அன்பரசியிடம் குகனுக்கு உள்ள நினைவாற்றல் திறனையும், திருக்குறள் படித்து ஒப்புவிப்பதையும் தாய் ராஜலட்சுமி கூறியுள்ளார்.

அப்போது, குகனுக்கு நாள்தோறும் 10 திருக்குறள்களைச் சொல்லிக் கொடுத்து வருமாறு ராஜலட்சுமியிடம் அன்பரசி கூறினார். இதன்படி, ராஜலட்சுமி நாள்தோறும் சொல்லிக் கொடுத்த 10 திருக்குறள்களைக் குகன் மனப்பாடம் செய்து ஒப்புவித்து வந்தார். மேலும், வீட்டில் மனப்பாடம் செய்த திருக்குறளைப் பள்ளியில் காலையில் நடைபெறும் இறை வணக்கத்துக்குப் பிறகு மாணவர்கள் மத்தியில் ஒப்புவிக்கச் செய்தார் ஆசிரியை அன்பரசி.

இதுபோல, நாள்தோறும் குகன் ஒப்பித்து வந்த நிலையில், அவர் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது 1,330 குறள்களையும் மனப்பாடம் செய்தார். இதுகுறித்து தஞ்சாவூரிலுள்ள உலகத் திருக்குறள் பேரவையைச் சேர்ந்த கோபிசிங், கந்தசாமி, சோமசுந்தரம், பழ. மாறவர்மன் ஆகியோரிடம் அன்பரசி கூறினார். இதைத்தொடர்ந்து, ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது 1,330 குறள்களையும் ஒப்புவித்து சாதனை படைத்தார் குகன்.

கரும்பலகையில் திருக்குறள் எழுதிப்போடும் குகன்.
கரும்பலகையில் திருக்குறள் எழுதிப்போடும் குகன்.

எந்தவித பின்புலமும் இல்லாமல் வறுமையிலும் இச்சாதனைப் படைத்த இவருக்கு பாராட்டுகள் குவிந்தன. சாதனைக்கு வறுமை தடையில்லை என்பதை நிருபித்துக் காட்டியுள்ள குகனுக்கு அவரது திறனையும், நிலைமையும் அறிந்த உலகத் திருக்குறள் பேரவை, கல்விச் செலவுக்காக மாதந்தோறும் ரூ. 5,000 வழங்கி வருகிறது.

திருக்குறள் பலகை:

தற்போது தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9 ஆம் வகுப்புப் படித்து வரும் இவர், தனது வீட்டு வாசலில் அறிவிப்புப் பலகை போன்று வைத்து, அதில் நாள்தோறும் ஒரு குறளை எழுதி, அது குறித்த விளக்கவுரையையும் எழுதி வருகிறார். இதை அவ்வழியே செல்லும் பலரும் நின்று படித்துவிட்டுச் செல்கின்றனர். இப்பணியை கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாகச் செய்து வருகிறார். இதன் மூலம், அக்கம்பக்கத்தினரிடமும் திருக்குறள் மீதான ஈடுபாடு அதிகரித்து வருகிறது.

மேலும், இதைத் மொபைல்போனில் புகைப்படம் எடுத்து, உலகத் திருக்குறள் பேரவையைச் சார்ந்த வாட்ஸ் ஆப்பிலும் பகிர்ந்து வருகிறார். ஏராளமான வாட்ஸ் அப் குழுக்களுக்கும் இந்த செய்தி செல்கிறது. நம்மூர் மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் போகிறது.

மக்களிடையே திருக்குறள் நெறியையும், சிந்தனையையும் பரப்ப வேண்டும் என்ற அடிப்படையில் இப்பணியைச் செய்து வருவதாகக் கூறும் இவர் தற்போது பேச்சாற்றலிலும் வளர்ச்சியடைந்து வருகிறார். வருங்காலத்தில் ஐ.ஏ.எஸ். படித்து ஆட்சியராவதே லட்சியம் என்கிறார் குகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com