இந்திராதிகாரம் பிறந்த கதை! - 12 :  ஜூன் 22, 1975 - ஒத்துழைப்பை உறுதிப்படுத்த எதிர்க்கட்சிகள் முடிவு

1975 நெருக்கடி நிலை அறிவிப்புக்கு முன் நிகழ்ந்தவை என்னென்ன? வரலாற்றின் பக்கங்களிலிருந்து... எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உறுதிப்பட, நீதிமன்றத் தீர்ப்பை நினைக்கத் தொடங்கிவிட்டார் இந்திரா காந்தி
இந்திரா காந்தி (கோப்புப் படம்)
இந்திரா காந்தி (கோப்புப் படம்)

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருந்தாலும் பிரதமர் பதவியிலிருந்து இந்திரா காந்தி விலக வேண்டும் என்று நெருக்குதலைத் தரும் வகையில்  மக்களிடம் விளக்கவும் மக்கள் கருத்தைத் திரட்டவும் திட்டமொன்றை வகுப்பதென ஐந்து எதிர்க்கட்சிகளின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஏற்கெனவே நேற்று இந்தக் கட்சிகள் கூடிப் பேசி அமைக்கப்பட்ட உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டம், தில்லியில் பழைய காங்கிரஸ் தலைவர் மொரார்ஜி தேசாய் தலைமையில் இன்று காலையிலும் மாலையிலுமாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணும் கலந்துகொண்டிருக்க வேண்டும். என்றாலும் பாட்னாவில் அவர் புறப்படவிருந்த விமானம் எதிர்பாராமல் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் அவரால் தில்லிக்கு வர இயலவில்லை. ரயிலில் புறப்படும் அவர், அடுத்தநாள் தில்லி வந்துசேருவார் என எதிர்பார்த்தனர். ஜெயப்பிரகாஷ் நாராயணுடன் கலந்துபேசிய பிறகு செயல் திட்டம் இறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

கறை படிந்த ஒருவர் பிரதமரா?

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடன் ஜனசங்கத் தலைவர் எல்.கே. அத்வானியும் பழைய காங்கிரஸ் தலைவர் எஸ்.என். மிஸ்ரவும் பேசினர்:

"கறை படிந்த ஒருவர் பிரதமராக நீடிக்கக் கூடாது என்று இன்றைய கூட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவருமே கருதினர்.

"இந்திரா காந்தி பதவி விலக வேண்டும் என்பதுதான் அரசியல் தார்மிக நெறி. இது வெறும் சட்டப் பிரச்சினை அல்ல. முக்கியமான ஓர் அரசியல் மற்றும் தார்மிகப் பிரச்சினை.

"இந்திரா காந்தி கறை படிந்தவராக இருக்கிறார். அவர் பொய் சொன்னதாக உயர் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

"நாளை உச்ச நீதிமன்றம் எடுக்கும் முடிவால் இந்தக் களங்கம் நீங்கிவிடாது. உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரும் வரைக்கும் இந்தக் களங்கம் தொடரும்" என்றார்கள் அவர்கள்.

இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவது பற்றியும் அந்த ஒற்றுமை எந்த வடிவில் அமைவது என்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. முன்னெப்போதையும்விட இப்போது இந்த ஐந்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுக்கொன்று நெருங்கிவந்துள்ளன என்பதில் திருப்தி நிலவியது.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்துவிடுவதா, அல்லது குஜராத்  பாணியில் ஜனதா முன்னணி திட்டத்தைப் பின்பற்றுவதா என்பதில் மாற்றுக் கருத்துகள் நிலவின.

எதிர்க்கட்சிகள் இணைந்துவிட வேண்டும் என்று பாரதிய லோகதள தலைவர் சரண்சிங் வலியுறுத்தினார். இவ்விஷயத்தில் ஒருவேளை நாளை பொதுக்கருத்து ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

பிகார், குஜராத் பாணியில் கூட்டு இயக்கம் அல்லது கிளர்ச்சி பற்றிப் பிற கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. நாடாளுமன்றக் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

நாட்டின் நிலைமை மிகவும் அபாயகரமானது

தில்லியில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தின. இந்தக் கூட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயணும் பேசுவதாக இருந்தது. ஆனால், அவரால் தில்லி வந்துசேர முடியாததால் கலந்துகொள்ளவில்லை. மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, ராஜ்நாராயண், மது லிமயே, விஜயகுமார் மல்ஹோத்ரா, எஸ்.என். மிஸ்ர ஆகியோர் பேசினர்.

மொரார்ஜி தேசாய்: "நாட்டின் தற்போதைய நிலவரம் மிகவும் அபாயகரமானது. இந்த நிலைமையில் நாட்டுக்கு எவ்வாறு சேவை செய்வதென மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களுடைய போராட்டத்தில் வன்முறை அணுகுமுறை கூடாது. போராட்டம் அமைதியாகவும் வன்முறை தவிர்த்ததாகவும் இருக்க வேண்டும்.

"நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி புதியதொரு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காகவே  அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை பெறப்பட்டது. ஆனால், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியோ புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்காமல் இந்திரா காந்தியையே மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

"மாநிலங்களின் முதல்வர்கள், எம்.பி.க்கள், கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களைத் தம்மிடம் நம்பிக்கை கொண்டிருக்குமாறு செய்கிறார் இந்திரா காந்தி. இது அந்தக்  கட்சிக்குள் பீதி நிலவுவதையே காட்டுகிறது. மக்கள் தம்முடன் இல்லை என்பதை இந்திரா காந்தி நன்றாக அறிவார்".

மொரார்ஜி தேசாய் பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து இந்திரா ஒழிக என்று சிலர் முழக்கமிட்டனர். உடனடியாக அவர்களைக் கடிந்துகொண்ட தேசாய், "இந்திரா காந்தி ஆயுள் நீடித்திருக்க வேண்டும். ஆனால், அவர் பதவியிலிருந்து விலக வேண்டும். உடனடியாக அவர் விலகாவிட்டால் அமைதியான சத்தியாக்கிரகத்தைத் தொடங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள்" என்றார்.

அசோக் மேத்தா: "இந்திரா காந்தி பிரதமராக நீடிப்பது நாட்டின் ஜனநாயக அமைப்புக்கும் அரசியல் சட்டத்துக்கும் ஒரு சவால். நீதித்துறைத் தீர்ப்புகளின் புனிதத் தன்மையைப் பேணிக் காக்க எல்லாவிதமான தியாகங்களுக்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும்.

"தன் அமைச்சரவை சகாக்களுக்கு எதிராகத் தீர்ப்புகள் வந்தபோது பதவி விலகச்  செய்திருக்கிறார் இந்திரா காந்தி. ஆனால், இந்த நிலையான முன்னுதாரணங்களையும் மரபுகளையும் இப்போது அவர் பின்பற்றவில்லை. இந்த நாட்டின் சட்டத்துக்கு அப்பாற்பட்டவரா அவர்?"

பாரதிய லோகதளத் தலைவர் பிலுமோடி: "அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு பதவியில் நீடிக்க இந்திரா காந்திக்கு தார்மிக அடிப்படை எதுவும் கிடையாது."  

ராஜ்நாராயண் மேடை மீது ஏறியபோது கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஊழலின் உறைவிடம் இந்திரா காந்தி என்று குறிப்பிட்ட அவர், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னரும் அவர் ராஜிநாமா செய்யாததன் மூலம் மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குலைத்துக்கொண்டுவிட்டார் என்றார்.

எல்.கே. அத்வானி: "இந்தத் தீர்ப்புக்குப் பிறகு இந்திரா காந்தியை நம்ப முடியாது. குஜராத்தில் மக்கள் அளித்த தீர்ப்பு ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு கட்டம்".

மது லிமயே: "முதலாளிகளுடன் இந்திரா காந்தி சேர்ந்துகொண்டிருக்கிறார். இந்திரா காந்தி பதவியில் நீடிப்பது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. அவர் பதவியில் நீடிப்பது முதலாளிகள், சுரண்டல்காரர்கள், கள்ளக்கடத்தல்காரர்கள் ஆகியோரின் நலனுக்குதான் உகந்தது.

"கிராம அளவில் போராட்டங்களைத் தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. பதவி விலக வேண்டும் என்று இந்திரா காந்தியை மக்கள் எச்சரிக்க வேண்டும்".

ஆர்ப்பாட்டம் வேண்டாம்

அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தத் தடை விதிக்குமாறு தொடரப்பட்ட மனு விசாரணைக்கு வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் எதுவும் நடத்த வேண்டாம் என்று பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக்கொண்டார்.

வழக்கம்போல அவருடைய இல்லத்துக்கு வெளியே தொண்டர்களிடையே அன்று மட்டும் ஏறத்தாழ எட்டு முறை பேசினார்:

"நீங்கள் நீதிமன்றத்துக்குச் சென்று எவ்வித ரகளையையும் ஏற்படுத்திவிடக் கூடாது. ஒற்றுமையையும் நிலைத் தன்மையையும் பேணிக் காத்தாலன்றி நாட்டின் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

"இந்த அரசு எடுத்துள்ள தீவிர நடவடிக்கைகள் எந்தத் தனிநபருக்கோ அல்லது கட்சிக்கோ எதிரானதல்ல. பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்டது. ஏழைகளைப் பணக்காரர்கள் மேலும் ஒடுக்குவதை இந்த அரசு விரும்பவில்லை. கடந்த சில ஆண்டுகளில் வறுமை பெருகியிருப்பதாகக் கூறப்படுவது தவறு.

"நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் வலுவான மத்திய அரசினால் மட்டுமே அரசியல் நிலைத்தன்மையை ஏற்படுத்த முடியும், நாட்டை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்."

மற்றொரு முறை பேசியபோது:

"தில்லியில் காங்கிரஸ் நடத்திய பேரணி உலகில் இதுவரை நடந்த மிகப் பெரிய பேரணிகளில் ஒன்று. ஆனால், பேரணியில் 80 ஆயிரம் பேர் மட்டுமே பங்குகொண்டதாக சில பத்திரிகைகளும் சில நபர்களும் கூறுகின்றனர். இதுதான் இவர்களுடைய நிலை என்றால் தார்மிக நெறிகளை வளர்ப்பது பற்றியெல்லாம் பிரசாரம் செய்ய இவர்களுக்கு அருகதையில்லை.

"என்னுடைய உயிருக்கு ஆபத்து விளைவிக்கப் போவதாக அச்சுறுத்துவது பற்றி நான் பயமோ அல்லது கவலையோ படவில்லை. பிரச்சினை ஒரு தனிநபரைப் பற்றியதோ இந்திரா காந்தி என்பவரைப் பற்றியதோ அல்ல, நாட்டைப் பற்றியது.

"பொய்ப் பிரசாரங்களால் மக்கள் ஏமாந்துவிடக் கூடாது. ஒற்றுமை இல்லாவிட்டால் நாட்டின் பலம் குன்றிவிடும். எனவே, ஒற்றுமையை நிலைநிறுத்த வேண்டும்" என்றார் இந்திரா காந்தி.

மழைக்காலக் கூட்டத் தொடரா?

நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் எப்போது கூட்டப்படும் எனத் தனக்குத் தெரியாது என்று குறிப்பிட்டார் மக்களவைத் தலைவர் ஜி.எஸ். தில்லான்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தபோது, எதிர்க்கட்சித் தலைவர்கள் தம்மைச் சந்தித்த பிறகு அரசுடன் இதுபற்றிப் பேசியதாகவும் தன்னால் இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் தில்லான் குறிப்பிட்டார்.

நிரந்தரத் தடைக்கு எதிர்ப்பு

அலாகாபாத் நீதிமன்றத் தீர்ப்பின் அமலுக்கு நிபந்தனையற்ற தடை விதிக்க வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தியின் கோரிக்கையைக் கடுமையாக எதிர்த்தார் ராஜ்நாராயண்.

இந்திரா காந்தி தரப்பு மேல் முறையீட்டுக்குப் பதிலளித்து தாக்கல் செய்துள்ள மனுவில், இத்தகைய வழக்குகளின் தீர்ப்பின் அமலுக்கு முழுத் தடையைக் கடந்த 20 ஆண்டுகளில் எப்போதும் உச்ச நீதிமன்றம் அளித்ததில்லை; இது ஒரே சீராகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ள நடைமுறை என்றும் ராஜ்நாராயண் தெரிவித்தார்.

மனுவை ராஜ்நாராயணுக்காக அவருடைய வழக்கறிஞர் ஜே.பி. கோயல் தாக்கல் செய்தார்.

"ஒருவர் ஊழல் குற்றத்தைப் புரிந்துள்ளதாக ஒரு நீதிமன்றம், குறிப்பாக உயர் நீதிமன்றம் போன்ற பெரிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தால், அந்த நபர் மீது அந்தத் தீர்ப்பு நீடிக்கும் வரை அவர் பொது வாழ்வில் உயர்ந்த பதவியை வகிக்க அனுமதிப்பது மக்கள் நலனுக்கு உகந்ததல்ல என்ற கோட்பாட்டின்  அடிப்படையிலேயே  இந்த நடைமுறையை (முழு மற்றும் நிபந்தனையற்ற தடை விதிப்பதில்லை என்ற நடைமுறையை) உச்ச நீதிமன்றம் பின்பற்றி வந்திருக்கிறது.

"பிரமாணம் எடுத்துக்கொண்டு சாட்சியம் அளித்த வாக்குமூலம் நம்பத் தக்கதாயில்லை என்று உயர் நீதிமன்றத்தால் கூறப்பட்டுள்ள ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை மூலம் பிரதமர் பதவியில் செயல்பட அனுமதிக்காமலிருப்பது நீதியின் நலனையும் பொதுமக்கள் நலனையும் கருதி அவசியமாகும்.

"உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோதிலும், முன்னாள் மத்திய அமைச்சர் சென்னா ரெட்டியும் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் டி.பி. மிஸ்ரவும் தேர்தல்களில் ஊழல் நடைமுறைகளைக் கையாண்டதாக உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் அடிப்படையில் பதவிகளிலிருந்து விலக நேர்ந்தது.

"பிரதமர் பதவிப் பொறுப்புகளை நிறைவேற்றத் தகுதியான நபர் வேறு எவரும் தன்னுடைய கட்சியில் இல்லை என்று நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி கூறுவதை என்னவென்று எடுத்துக் கொள்வது?

"இதற்கு முன்னர் எப்போதாவது ஒரு பிரதமர் இல்லாமலிருந்தால் உடனே தற்காலிக பிரதமர் ஒருவர் பதவியேற்று, பின்னர், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி முறையாக ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

"மேல் முறையீடு செய்துள்ளவர் நாட்டுக்குப் பணிபுரிய விரும்பினால் வேறு வழிகளில் அவ்வாறு செய்யலாம். பிரதமர் பதவியில் இருப்பதால் மட்டுமே நாட்டுக்கு சேவை செய்ய முடியும் என்றில்லை."

வேட்பாளர்களின் தேர்தல்கள் செல்லாது என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அமலுக்கு நிபந்தனையற்ற முழுத் தடை விதிக்கக் கூடாது என்ற வாதத்துக்கு ஆதரவாக 1959-க்கும் 1975-க்கும் இடையே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள 19 உத்தரவுகளும் மனுவுடன் இணைக்கப்பட்டிருந்தன.

இதற்கொரு பதில் மனுவை இந்திரா காந்தி சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவில், எந்த வழக்கிலும் நிபந்தனையற்ற முழுத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. தேர்தல் வழக்குகளில் வரம்புக்குள்பட்டே தடை விதிக்கும் பழக்கத்தை நீதிமன்றம் பின்பற்றி வந்திருப்பதாகக் கூறுவது தவறு என்றும் கூறப்பட்டிருந்தது.

தீர்ப்பின் மீதும் மேல் முறையீடு

இதுவன்றி அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தும் மேல் முறையீடு தாக்கல் செய்யப் போவதாக ராஜ்நாராயண் அறிவித்துள்ளார்.

வழக்கில் இந்திரா காந்திக்கு எதிராகப் பல ஊழல் புகார்களை ராஜ்நாராயண் கூறியிருந்தார்.

1. ஹிந்துக்களில் ஒருசிலரின் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் தேர்தலில் மற்றொருவரைப் போட்டியிடச் செய்ய இந்திரா காந்தியோ அல்லது அவரது தேர்தல் முகவரோ ஒருவருக்கு ரூ. 50 ஆயிரம் கொடுத்தார்கள்.

2. வாக்காளர்களிடையே வேஷ்டிகள், படுக்கைகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை வ்ழங்க இந்திரா காந்தி ஏற்பாடு செய்தார்.

3. ராய் பரேலி செல்வதற்காகத் தில்லியிலிருந்து லக்னௌ பயணம் செய்ய விமானப் படை விமானங்களை இந்திரா காந்தி பயன்படுத்தினார். இவ்வாறு செய்ததன் மூலம் தமது தேர்தல் வாய்ப்புகளைப் பெருக்கிக்கொள்ள  ராணுவப் படையினரின் உதவியை இந்திரா காந்தி பெற்றிருக்கிறார்.

4. இந்திரா காந்தி தனது தேர்தல் பணிக்காகக் குறைந்தபட்சம் 23 வாகனங்களைப் பயன்படுத்தினார். ஆனால், அவருடைய தேர்தல் செலவுகள் பற்றி அவர் தந்துள்ள கணக்குகளில் இந்த வாகனங்களுக்கான செலவுகளை அவர் காட்டவில்லை.

5. இந்திரா காந்தியின் தேர்தல் கூட்டங்களுக்கான மேடைகளை ராய் பரேலி மாவட்ட ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் அமைக்கச் செய்தார்கள். இவ்வாறு உத்தரப் பிரதேச அரசு அலுவலர்களின் சேவைகளைத் தமது தேர்தல் வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள இந்திரா காந்தி பயன்படுத்தினார்.

6. யஷ்பால் கபூர் அரசு ஊழியராக இருந்த நேரத்திலேயே அவரது சேவையைத் தனது தேர்தல் பணிக்கு இந்திரா காந்தி பயன்படுத்தினார்...

போன்ற மேலும் பல புகார்களை நீதிமன்றத்தில் ராஜ்நாராயண் தெரிவித்திருந்தார்.

இவற்றில் கடைசி இரு புகார்களை மட்டுமே அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொண்டார். பிற புகார்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டார்.

நீதிபதி சின்ஹ நிராகரித்த அனைத்தையும் தம் மேல் முறையீட்டில் ராஜ்நாராயண் சேர்ப்பாரா, அல்லது சில விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்வாரா என்று தெரியவில்லை.

ஆனால், நிலைமை என்னவோ ஒவ்வொரு நாளும் தீவிரமடைந்துகொண்டிருந்தது.

[வரலாற்றின் பக்கங்களிலிருந்து - தொடரும்]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com