தூண்டில் மீன்கள்!

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும்படி கணக்கற்ற கடிதங்கள் எழுதப்பட்டுவிட்டன. இப்போதும் ஒரு கடிதத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியிருக்கிறார்.
Updated on
2 min read

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தும்படி கணக்கற்ற கடிதங்கள் எழுதப்பட்டுவிட்டன. இப்போதும் ஒரு கடிதத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதியிருக்கிறார். ""புதுதில்லியில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளை அழைத்து கடுமையாக எச்சரிக்கை செய்யுங்கள்'' என்று கோரிக்கை வைத்துள்ளார். இதுவரை மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் பட்டியலிட்டுள்ளார்.

1974-இல் இந்தியா - இலங்கை இடையேயான கடல் எல்லை நிர்ணயிக்கப்பட்டது. 1983-ஆம் ஆண்டு வரை எல்லை குறித்த உணர்வே இல்லாமல் இரு நாட்டு மீனவர்களும் எந்தவிதமான சங்கடமோ தடையோ இல்லாமல் மீன் பிடித்து வந்தார்கள். அதன் பிறகு இலங்கையின் உள்நாட்டுப் போர் தொடங்கிய பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கியது. அதற்குப் பல காரணங்களை அவர்கள் முன்வைத்தனர். ஆனால், இப்போது உள்நாட்டுப் போர் முடிந்துபோன பிறகும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்கிறதே அதற்கு என்ன காரணம்?

இலங்கைக் கடல் எல்லை, தமிழகக் கடல் பகுதியிலிருந்து குறைந்தபட்சம் 18 கடல் மைல்கள், அதிகபட்சம் 45 கடல்மைல் தொலைவில் உள்ளது. மிக எளிதில் இலங்கைக் கடல் எல்லைக்குள் மீன்பிடிப் படகுகள் புகுந்துவிடவும் வெளியேறவும்கூட முடிகிறது.

மீன்வளத் துறையினர் மற்றும் மீனவ சமுதாயத்துடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களின் கூற்றுப்படி, இலங்கைக் கடற்படையிடம் சிக்கும் விசைப்படகுகள் (டிராலர்ஸ்) எண்ணிக்கை மிகமிகக் குறைவு. நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடித்துத் திரும்பிவிடுகின்றன. மிகச் சில படகுகள், மிக அரிதான தருணங்களில் சிக்கிக்கொள்கின்றன. மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. இவ்வளவு படகுகளும், ஆபத்தைக் காட்டிலும் "லாபம் அதிகம்' என்ற மனப்பான்மையுடன்தான் துணிச்சலாக, தெரிந்தே எல்லை தாண்டுகின்றன.

இப்போதைய பிரச்னைக்கு ஒரே தீர்வு: இரு நாடுகளும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் பொதுக்கடல் பகுதியை வரையறுத்தல், மீன்பிடி விசைப்படகுகளின் (டிராலர்கள்) எண்ணிக்கையை, குறிப்பாக இந்தியக் கடல்பகுதியிலிருந்து நுழையும் டிராலர்களின் எண்ணிக்கையை இந்திய அரசு கட்டுப்படுத்துதல், பொதுப்பகுதியில் மீன் பிடிக்க இந்திய, இலங்கை மீனவர்கள் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் பணம் செலுத்தி உரிமம் பெறுதல் (விசா பெறுவதைப்போன்று) ஆகியன மட்டுமே இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக இருக்க முடியும்.

ஆனால், இதை தமிழ்நாடு மட்டுமே செய்துவிட முடியாது. இந்திய அரசும் இலங்கை அரசும், தமிழக மீனவர்களையும், இலங்கையின் வடக்கு மாகாண மீனவர்களையும் இணைத்து கலந்து பேசி முடிவு செய்ய வேண்டிய விவகாரம் இது. மத்திய அரசுக்கு இது தெரிந்தும் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்துக் காலம் தாழ்த்திக்கொண்டு வருகிறது.

மத்திய அரசை நாம் குறை கூறுவது ஒருபுறம் இருக்க, இன்றைய மீனவர் பிரச்னைக்குத் தமிழக அரசியல்வாதிகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்பதை நாம் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னையையும் தமிழக மீனவர்கள் பிரச்னையையும் கலந்துவிடுவதுதான் இப்பிரச்னையில் மத்திய அரசு தலையிடாமல் காலம் தாழ்த்துவதன் பின்னணியாக இருக்கக்கூடும்.

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் வெளியுறவுத் துறைக்கு தமிழ்நாடு வேண்டுகோள் விடுக்கும் அதே வேளையில், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கிறோம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களுக்குத் தேவையான உதவிகளை அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் செய்து தர வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும் என்கிறோம்.

இரண்டு நோய்க்கும் ஒரு மருந்தில் தீர்வு காண முற்படுகிறோம். அதனால்தான், அப்படி ஒரு மருந்து இல்லை என்பதால் வாளாவிருக்கிறார்கள் அல்லது அப்படியொரு மருந்து கொடுத்துக்கொண்டிருப்பதாகக் கூறி காலம் தாழ்த்துகிறார்கள்.

இன்னொரு உண்மையையும் நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இந்தியக் கடல் எல்லையில் டிராலர்கள் (மீன்பிடி விசைப்படகுகள்) எண்ணிக்கை பல ஆயிரம் மடங்கு பெருகிவிட்டது. கடற்கரையிலிருந்து 12 கடல் மைல்களுக்குள் சாதாரணப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்போர் கடல் எல்லையைத் தாண்டும்போது அவர்களை இலங்கைக் கடற்படையோ, இலங்கை மீனவர்களோ தாக்குவதில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய-இலங்கைக் கடல் எல்லையில் பிரச்னையை ஏற்படுத்துபவை பெருமுதலாளிகளின் லாப நோக்கம். ஆனால் பாதிக்கப்படுவதோ, அதில் வேலைசெய்யும் மீனவர்கள்.

இந்திய அரசு இனியும் காலதாமதம் செய்யாமல், இலங்கை அரசுடனும், இந்திய மீனவர்கள், மீன்பிடி விசைப்படகுகளின் உரிமையாளர்களுடனும் கலந்து பேசி, இந்தியா இலங்கை இடையே மீன்பிடிக்க ஒரு பொதுவான கடல்எல்லையை அமைத்துக்கொள்ளவும், இங்கே மீன்பிடிக்க உரிமம் பெறவும் வகை செய்ய வேண்டும்.

பாவம் மீனவர்கள். அவர்களுக்காகக் குரல் கொடுக்க தமிழக நிலப்பரப்பில் யாரும் இல்லை. ஏனென்றால், மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் பாதிப்பு மீனவர்களுக்கு மட்டுமே. நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு அல்ல. பொது மக்களுக்குக் கடல்மீன் கிடைக்காவிட்டால், நன்னீர் மீன்கள் கிடைக்கும், இறைச்சியும் கிடைக்கும். மீனவர்கள் வேலைநிறுத்தம் நிலப்பரப்பில் வாழ்பவர்களை பாதிப்பதில்லை என்பதால் அவர்களது பிரச்னை கவனிக்கப்படுவது இல்லை. அதற்காக அரசும் மௌனம் காத்தால் எப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com