தீர்ப்பு தீர்வல்லவே!

சென்னை மதுரவாயல் காவல்நிலையத்துக்கு நாள்தோறும் நான்கு பேருக்கு, மூன்று வேளை உணவு இலவசமாகத் தர மறுத்த ஓட்டல்காரர்கள் ஐந்து பேரை அடித்து உதைத்து, பொய் வழக்கு போட்ட காவல்துறையினர் இருவருக்கு (ஆய்வர் மற்றும் தலைமைக் காவலர்) 6 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை கிடைத்திருக்கிறது.
Updated on
2 min read

சென்னை மதுரவாயல் காவல்நிலையத்துக்கு நாள்தோறும் நான்கு பேருக்கு, மூன்று வேளை உணவு இலவசமாகத் தர மறுத்த ஓட்டல்காரர்கள் ஐந்து பேரை அடித்து உதைத்து, பொய் வழக்கு போட்ட காவல்துறையினர் இருவருக்கு (ஆய்வர் மற்றும் தலைமைக் காவலர்) 6 ஆண்டுகளுக்குப் பிறகு தண்டனை கிடைத்திருக்கிறது.

தமிழக மாநில மனித உரிமை ஆணையம் இந்த காவல்துறையினருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து துறை நடவடிக்கைக்குப் பரிந்துரைத்துள்ளது.

இந்தத் தீர்ப்பைப் பத்திரிகைகளில் படித்தோருக்கும் ஊடகங்களில் பார்த்தோருக்கும் ஏதோ நீதி கிடைத்துவிட்டதாக, நியாயம் நிலைநாட்டப்பட்டதாக ஒரு மாயத்திருப்தி ஏற்படும். ஆனால், மனித உரிமை ஆணையம் அளிக்கும் தீர்ப்புகள் பலவும் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்படுபவை என்பதுதான் உண்மை.

மாநில மனித உரிமை ஆணையம் என்பது சிவில் கோர்ட்டுக்கு இணையானது என்றாலும், இந்த ஆணையம் தனது அதிகார வரம்புக்குள் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கான தண்டனையையும், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டையும் மாநில அரசுக்குப் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். சில நேர்வுகளில், இந்த வழக்கை நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பி, தீர்ப்பு வழங்க வைக்கலாம். பெரும்பாலும், இந்த ஆணையம், அரசுக்குப் பரிந்துரை செய்வதோடு சரி.

மனித உரிமை ஆணையத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் காவல்துறையால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். காவல்நிலையங்களின் அத்துமீறலால், அராஜகத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு நியாயம் கேட்போர் மனித உரிமை ஆணையத்தை நாடுகின்றனர். காவல்துறை, இன்னொரு காவல்துறை அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்வது முயலுக்குக் கொம்பு முளைப்பது போன்றது என்பதுதான் காரணம்.

ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் பேசப்படும் விவகாரமாக மாறிவிட்டால், தவிர்க்க முடியாத நேர்வுகளில், காவல்துறை அதிகாரி தப்பிக்கின்ற அல்லது மிகச் சிறு அபராதத்துடன் விடுபடுகிற வகையில் வழக்குப் பதிவு செய்வதுதான் துறை நண்பர்களுக்குக் காட்டப்படும் விசுவாசமாக இருக்கிறது. ஆகவே பல வழக்குகள், தண்டனையோ அபராதமோ இல்லாமலேயே போகின்றன.

இந்த ஓட்டல் வழக்கிலும்கூட, நான்கு பேருக்கு மூன்றுவேளை உணவு இலவசமாகத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதற்கான தண்டனை அல்ல இந்தத் தீர்ப்பு. ஓட்டல் உரிமையாளர்களில் ஒருவரைத் தாக்கியபோது ஏற்பட்ட தலைக்காயத்துக்கான மருத்துவச் சான்று, வாகனத்தைப் பறிமுதல் செய்ய காவல்துறைக்கு அதிகாரம் இல்லாதது, வாகனச்சோதனையை ஒரு தலைமைக்காவலர் தனது தலைமையில் நடத்த இயலாது என்கின்ற காரணங்களால் பூந்தமல்லி நீதிமன்றத்தில், இந்த ஓட்டல்காரர்கள் மீது காவல்துறை பதிவு செய்த பொய் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதால்தான், தற்போது மனித உரிமை ஆணையத்தால் இழப்பீடு வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மாமூல் கொடுக்க மறுக்கும் ஒருவர் மீது காவல்துறை பொய் வழக்குப் பதிவு செய்தால் எல்லா வழக்குகளும் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகுமா என்பது சந்தேகம்தான். ஆகவேதான் சாதாரண மக்கள் இவர்கள் மீது வழக்கு தொடுக்க அச்சப்படுகிறார்கள். புகார் கொடுப்பதில்லை. அந்தத் துணிவில்தான் தெருவோர காய்கறி, பழம், பூ வியாபாரிகளிலிருந்து, தள்ளுவண்டி இட்லிக்கடைவரை காவல்துறையினருக்கு மாமூல் கொடுக்க வற்புறுத்தப்படுகிறார்கள்.

கூச்சமே இல்லாமல் "ஓசி உணவு' பெறுதல், காவல்துறையின் அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரையிலும் இருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரிகள் பெருநகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் குடும்பத்துடன் சாப்பிட்டு வெளியேறினால், ஓட்டல் மேலாளரால் அன்புடன் வழியனுப்பப்படுகின்றனர். தள்ளுவண்டி உணவுக்கடைகள், பழ வியாபாரிகள் போன்றவர்களின் வயிறு எரிய போலீஸ்காரர்கள் அதிகார மிடுக்குடன் அதட்டி வாங்கிச் செல்கின்றனர். இதுதான் வித்தியாசம்.

அவ்வப்போது சில காவல்துறை அதிகாரிகள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள். வருவாய்த் துறை அலுவலர்கள் லஞ்சம் வாங்கும்போது பிடிபடுகிறார்கள். ஆனால், எத்தனைபேர் தண்டிக்கப்பட்டார்கள் என்று பார்த்தால், இதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்பது தெரியவரும்.

ஆண்டுதோறும் லஞ்சம் வாங்கியதாகக் கைது செய்யப்பட்ட நபர்கள் எத்தனை பேர், மனித உரிமை ஆணையத்தால் அபராதம் மற்றும் துறை நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர், இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் சாசனமாக அறிவிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

பத்திரிகைகளில் அரசின் சாதனைகளை விளக்குவதைப் போலவே, இந்த விவரங்கள் முழுவதையும் இணையதளத்தில் வெளியிடுவதோடு ஆண்டுதோறும் ஒரு நாள் விளம்பரமாக வெளியிட்டாலும் சாதாரண மக்கள் அறிந்துகொள்ள உதவும். காவல்துறையினரின் வரம்புமீறல்களுக்கு அது கடிவாளமாக இருக்கக்கூடும்.

நீதிமன்றக் கண்டனத்துக்குள்ளானவர்களும், மனித உரிமை ஆணையத்தின் கண்டனத்துக்கும், தண்டனைக்கும் உட்பட்டவர்களும் காவல்துறை விருதுக்கோ, பதவி உயர்வுக்கோ, ஏனைய பதக்கங்களுக்கோ தகுதியற்றவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டால், காவல்துறையின் அத்துமீறல் கணிசமாகக் குறைய வாய்ப்புண்டு. அந்தத் துணிவு இந்தியாவிலுள்ள எந்த மாநில அரசுக்காவது இருக்கிறதா என்றால் இல்லையே, என்ன செய்ய?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com