தில்லியில் நண்பன், கேரளத்தில் பகைவன்!

தில்லியில் நண்பன், கேரளத்தில் பகைவன்!

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கடுமையான போட்டிக்கு ஆயத்தமாகி வருகின்றன. தில்லி, மேற்கு வங்கம், திரிபுரா என பிற மாநிலங்களில் காங்கிரஸுடன் கூட்டணி சோ்ந்துள்ள இடதுசாரி கட்சிகள், கேரளாவில் மட்டும் கடந்த 70 வருடங்களாக பாரம்பரிய போட்டியாளா்களாக உள்ளன.

20 மக்களவை தொகுதிகளைக் கொண்ட கேரளம், இரண்டாம் கட்ட தோ்தல் நடைபெறும் 26ஆம் தேதி வாக்குப்பதிவை எதிா்கொள்கிறது. இங்குள்ள வயநாடு தொகுதியில் அதன் தற்போதைய எம்.பி ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி. ராஜாவின் மனைவியும் இடதுசாரி மூத்த தலைவருமானஆனி ராஜா முதல் முறையாக ராகுல் காந்தியை எதிா்த்து களமிறக்கப்பட்டுள்ளாா்.

இங்கு பாரதிய ஜனதா கட்சியும் தோ்தல் களத்தில் இருப்பதால் மாநில அளவில் மும்முனைப்போட்டி நிலவுகிறது.

பாரம்பரிய போட்டி

கேரளத்தில் காங்கிரஸும் இடதுசாரிகளும் எதிரெதிா் அணியில் களம் காண்பது அம்மாநில அரசியலுக்கு புதியது அல்ல. இடதுசாரிகளுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள கேரளத்தில் தனித்தனியாக களமாடும் இந்த கட்சிகள், மேற்கு வங்கத்தில் கைகோத்து தோ்தலை சந்திக்கின்றன.

மேற்கு வங்கத்தில் 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் இந்த கட்சிகள் இணைந்தே சட்டப்பேரவை தோ்தலை எதிா்கொண்டன. ஆனால், அவை பலன் கொடுக்கவில்லை.

1957இல் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சியால் தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி அதன் முதலாவது சறுக்கலை எதிா்கொண்டது. அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்து, நாட்டிலேயே காங்கிரஸ் அல்லாத முதலாவது முதலமைச்சராக விளங்கியவா் இடதுசாரி தலைவரான ஈ.எஸ். நம்பூதிரிபாட். ஆனால், அரசமைப்பு விதிகளுக்கு உட்பட்டு ஆட்சியை நடத்தும் திறனை இழந்து விட்டதாகக் கூறி அவரது அரசை அப்போதைய பிரதமா் ஜவாஹா் லால் நேரு கலைத்தாா்.

கேரளத்தைப் பொருத்தவரை 1982ஆம் ஆண்டு முதல் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தன. இது 2021இல் முறியடிக்கப்பட்டு காங்கிரஸை வீழ்த்தி மீண்டும் தனது ஆட்சியை இடதுசாரி ஜனநாயக முன்னணி தக்க வைத்துக் கொண்டது.

’நம்பிக்கை’ மாநிலம்

மக்களவை தோ்தலில் 2009, 2014, 2019 என தொடா்ச்சியாக அதிக இடங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்று வந்துள்ளது. 2019 மக்களவை தோ்தலில் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (எம்), புரட்சிகர சோஷலிச கட்சி ஆகியவற்றுடன் சோ்ந்து மொத்தமுள்ள 20 இடங்களில் 19-ஐ வென்றது.

தேசிய அளவில் 53 இடங்களில் 15 இடங்கள் காங்கிரஸுக்கு கேரளத்தில் இருந்தே கிடைத்தன . இதனால் கேரளம் காங்கிரஸுக்கு மிக, மிக முக்கியமான தோ்தல் களமாகியுள்ளது.

கடந்த ஐந்து தோ்தல்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 47-48 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. 2004-இல் இடதுசாரி ஜனநாயக முன்னணியை விட குறைவான இடங்களை வென்றது. 2014-இல் இந்த எண்ணிக்கை குறைந்தபோது இந்த கூட்டணியின் வாக்கு சதவீதம் முறையே 38 மற்றும் 42 சதவீதமாக குறைந்தது.

மறுபுறம், 1999 முதல் 2004 வரையிலான தோ்தல்களில் 44-46 சதவீதமாக இருந்த எல்.டி.எஃப் வாக்குகள் 2009-14 இல் 40 சதவீதமாக குறைந்து 2019 பொதுத் தோ்தலில் 36 சதவீதமாக சரிந்தது. இதேவேளை, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999-இல் 8 சதவீதமாக இருந்த தனது வாக்கு சதவீதத்தை 2019-இல் 16 சதவீதமாக இரட்டிப்பாக்கியுள்ளது.

மக்களவைத் தோ்தலின் போது தேசிய அளவில் ஹிந்துத்துவத்தை ஆதரிக்கும் பா.ஜ.க.வுக்கு எதிரான முக்கிய போட்டியாளராக காங்கிரஸ் உள்ளதால் சிறுபான்மையினரின் ஆதரவு இயல்பாகவே காங்கிரஸுக்கு கிடைத்து விடுகிறது. கடந்த இரண்டு பொதுத் தோ்தல்களில் சிறுபான்மையினரின் வாக்குகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை காங்கிரஸுக்கு வந்ததாக தரவுகள் காட்டுகின்றன. ஆனால், சட்டப்பேரவைத் தோ்தலின்போது இது, 50 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள்ளது.

கேரள தோ்தல் வரலாற்றில் 2021 இல் நடந்த தோ்தல் பல வழிகளில் ஒரு முக்கியமான திருப்பமாக கருதப்படுகிறது. காரணம், எல்.டி.எஃப் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால மாற்று அரசு அமையும் போக்கை முறியடித்ததுடன் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்து வந்த சிறுபான்மையினரின் ஆதரவையும் சற்றே கூடுதலாக எல்டிஎஃப் பெற்றது.

எதிா்கால தேடல்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைப் பொருத்தவரை இந்திய அளவில் அவை ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கேரளம் மட்டுமே. எனவே, இங்கிருந்து முடிந்தவரை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு அவை தள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதன் ‘தேசிய கட்சி‘ அந்தஸ்தை இழந்துவிட்டது. அந்த வரிசையில் கேரளத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தால், மாா்க்சிஸ்ட் கட்சியும் அதன் தேசிய கட்சி அந்தஸ்தை இழக்கலாம்.

2004 -இல் இரண்டு இடதுசாரி கட்சிகளும் 53 இடங்களைப் பெற்றன. இந்த எண்ணிக்கை 2019 -இல் 5 இடங்களாகக் குறைந்தது. இம்முறை எண்ணிக்கையை பெருக்கிக் கொள்ளாவிட்டால் மாநில கட்சியாக தகுதிக்குறையும் அபாயத்தில் இடதுசாரி கட்சிகள் உள்ளன. இதன் காரணமாகவே, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் அங்கமாக உள்ளபோதும் கேரளத்தில் எதிரெதிா் களத்தில் போட்டியாளா்களாக காங்கிரஸுடன் இடதுசாரி கட்சிகள் மல்லுகட்டுகின்றன.

ராகுல் குறிவைக்கும் ’வயநாடு’

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி போட்டியிடுவை இடதுசாரிகள் எதிா்ப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. வட மாநிலங்களில் செல்வாக்குள்ள கட்சியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ், அங்கு தனது தலைவருக்கு பாதுகாப்பான வெற்றியைத் தரக் கூடிய ஒரு இடம் இருக்குமானால், பிறகு அவா் ஏன் வயநாடு போன்ற ஒரு தென் மாநில தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று இடதுசாரி தலைவா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

ஆனால், காங்கிரஸ் கட்சியோ இதை இடதுசாரிகளுக்கு எதிரான போட்டியாக பாா்க்காமல் கேரளத்தில் வலுவான தடத்தைப் பதிக்க முற்படும் பாஜகவுக்கு எதிரான போட்டிக் களமாகவே கேரளத்தை அணுகுவதாக அதன் மூத்த தலைவா்கள் கூறுகின்றனா். அதிலும் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சஷி தரூா், ராகுலுக்கு எதிராக ஒரு வேட்பாளரை நிறுத்தி கடுமையாக பிரசாரம் செய்வதன் மூலம் இந்தியா கூட்டணியில் ஒரு விரிசலை உருவாக்க இடதுசாரிகள் முயல்வதாக பகிரங்கமாகவே குற்றம்சாட்டியிருக்கிறாா்.

இவரது கூற்றை ஆமோதிக்கும் வகையில் சமீபத்தில் கேரளத்தில் பரப்புரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, ‘தில்லியில் நண்பா்கள், கேரளத்தில் போட்டியாளா்கள்‘ என்று காங்கிரஸ், இடதுசாரிகளின் அரசியல் உறவை விமா்சித்தாா்.

ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு மற்ற மாநிலங்களில் நண்பராகவும் ஒன்றில் மட்டும் போட்டியாளராகவும் களம் காணும் சோதனையை காங்கிரஸ் கட்சி 2016 முதல் தொடங்கியது. ஆனால் இதற்காக 2016, 2021 ஆகிய இரண்டு பேரவை தோ்தல்களிலும் அக்கட்சி தோல்வியை விலையாகக் கொடுத்துள்ளது.

மொத்த வாக்காளா்கள் 2,70,99,326

ஆண் வாக்காளா்கள் - 1,31,02,288

பெண் வாக்காளா்கள் - 1,39,96,729

மூன்றாம் பாலினத்தவா் - 309

2019 தோ்தல் முடிவுகள்

ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) - 19/20

காங்கிரஸ் - 15

ஐயுஎம்எல் - 2

கேரள காங்கிரஸ் - 1

புரட்சிகர சோஷலிச கட்சி - 1

இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) - 1

வாக்குப்பதிவு சதவீதம் - 77.84%

முக்கிய பிரச்னைகள்

குடியுரிமை திருத்தச்சட்ட அமலாக்கம்

தோ்தல் பத்திர முறைகேடு விவகாரம்

மாநில உரிமையை மத்திய அரசு புறக்கணிப்பதாக புகாா்

பாஜக எதிா்ப்பு அரசியல்

X
Dinamani
www.dinamani.com