கர்நாடக அரசியல் தலைவர்களின் தொலைபேசி பேச்சுக்களை ஆளும் குமாரசாமி அரசு ஒட்டுக் கேட்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
ஆளும் கூட்டணியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்கள், ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் ராஜிநாமா செய்துவிடுவார்கள் என்ற பயத்தில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் பாஜக கூறியுள்ளது.
கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏ-க்களில் சிலர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் உள்ள அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கட்சி தாவும் நோக்கில் பாஜகவுடன் பேசி வருவதாகவும், அவர்களது ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கக் கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பாஜக மாநில பொதுச்செயலாளர் சி.டி.ரவி பெங்களூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியை (பாஜக) சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் தொலைபேசி பேச்சுக்களை அரசும், காவல்துறையினரும் ஒட்டுக் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பாஜகவுக்கு அரசை கவிழ்க்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஏனெனில், அதற்கான முயற்சிகளை ஆளும் கூட்டணி தலைவர்களே தொடங்கிவிட்டனர். குறிப்பாக, காங்கிரஸில் உள்ள தலைவர்கள், வெளியேறும் மனநிலையில் உள்ளனர்.
மாநிலத்தில் நாள் கூலி பெறுபவர்களைப் போன்ற அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் அனைவரும் அந்தந்த நாள்களின் சுய லாபங்கள் குறித்து மட்டுமே கவலைப்படுகின்றனர் என்றார் அவர்.
அரசு கவிழ்ந்தால், அடுத்து அரசு அமைப்பதில் பாஜக தலையிடுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்தச் சூழ்நிலை வருகையில் நாங்கள் அந்தப் பாலத்தை கடந்து செல்வோம் என்றார்.