குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெறுமா மம்தாவின் முயற்சி?

குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் சரத் பவார் முன்நிறுத்தப்பட்டால் ஆம் ஆத்மியின் ஆதரவைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆம் ஆத்மி என்ன செய்யவிருக்கிறது என்பது கேள்வியாக முன்நிற்கிறத
குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெறுமா மம்தாவின் முயற்சி?

நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் போதிய பெரும்பான்மையைப் பெற பாஜக முயன்றுவரும் நிலையில் எதிர்க்கட்சிகள் ஒரு குடையின் கீழ் வர மேற்கொண்டுள்ள முயற்சி அக்கட்சிக்கு மேலும் தலைவலியைக் கொடுத்துள்ளது. 

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. எனினும் குடியரசுத்தலைவருக்கான வேட்பாளர்களை முக்கிய அரசியல் கட்சி கூட்டணிகள் இதுவரை அறிவிக்கவில்லை. 

மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் மீது எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. ஆனால் பாஜகவை எதிர்க்கும் வலுவான கூட்டணியாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி இதுவரை அமையவில்லை. மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட காங்கிரஸை வீழ்த்தி பாஜக வெற்றிகளைப் பெற்றுவரும் நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போதிய பெரும்பான்மையைப் பெற அக்கட்சி முயன்று வருகிறது.  

இந்நிலையில் பாஜகவிற்கு எதிரான அணியை அமைப்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக இந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணியை ஏற்படுத்துவதில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஆர்வம் காட்டி வருகிறார். வலிமையான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முன்முயற்சி எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மம்தாவின் இந்த முயற்சி பலன் தருமா என கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

இதுதொடர்பாக 22 அரசியல் கட்சிகளுக்கு மம்தா எழுதிய கடிதமும் அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டமும் தற்போது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது. பாஜகவிற்கு எதிரான கூட்டணியின் அவசியத்தை வலியுறுத்தி அவர் எழுதியிருந்த கடிதத்தில் வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மம்தா கூட்டியுள்ள இந்தக் கூட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சி பங்கெடுப்பதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவ்விரு கட்சிகளும் மம்தாவின் அழைப்பை ஏற்று பங்கெடுத்தன. அதேசமயம் ஆத் ஆத்மி கட்சியும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சியும் கலந்துகொள்ளவில்லை.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக எதிர்க்கட்சிகளின் சார்பில் சரத் பவார் பொது வேட்பாளராக முன்மொழியப்பட்டதாகவும் ஆனால் அவர் இதனை மறுத்துள்ளதாகவும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி தெரிவித்தார். குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் சரத் பவார் முன்நிறுத்தப்பட்டால் ஆம் ஆத்மியின் ஆதரவைப் பெற முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆம் ஆத்மி என்ன செய்யவிருக்கிறது என்பது கேள்வியாக முன்நிற்கிறது. 

பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, சிரோமணி அகாலிதளம், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை வெளிப்படையாக இதுவரை தங்களது ஆதரவை அறிவிக்கவில்லை.  

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த நிதிஷ் குமார் கடந்த சில நாள்களாக பாஜகவிற்கு எதிரான கருத்துகளைக் வெளிப்படுத்தி வந்தாலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் பாஜகவையே ஆதரிப்பார் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முயற்சி முக்கியத்துவம் பெறுவதற்கு காரணமும் இருக்கிறது. நீதித்துறை, விசாரணை அமைப்புகள், ஊடகங்கள் என அனைத்து அமைப்புகளையும் பாஜக கைப்பற்றி விட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் தெரிவித்து வரும் நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் வெற்றி எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு நம்பிக்கையைத் தரலாம். 

வேளாண் சட்டங்கள், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை சட்டம் உள்ளிட்டவைகளுக்கு எதிராக தற்போதைய குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் முன்வைத்த புகார்கள் எதுவும் குறிப்பிடத்தக்க அரசியல் பலனைத் தரவில்லை. இந்நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முயன்று வருவது இன்றைய தேர்தலைக் கடந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் நம்பிக்கைக்குரிய கூட்டணிக்கு வழிசெய்ய வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com