கர்நாடக பெண் அதிகாரி கொலை வழக்கில் என்னைக் குறிவைத்துள்ளனர்: பாஜக எம்.எல்.ஏ!

பெண் புவியியலாளர் கொலை வழக்கில் அரசியல் ரீதியாக தான் குறிவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் முனிரத்னா தெரிவித்தார்.
கர்நாடக பெண் அதிகாரி கொலை வழக்கில் என்னைக் குறிவைத்துள்ளனர்: பாஜக எம்.எல்.ஏ!

பெண் புவியியலாளர் கொலை வழக்கில் தான் தவறாக இணைக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான என்.முனிரத்னா தெரிவித்துள்ளார். 

புவியியலாளர் பிரதீமா கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இந்தக் கொலையில் முனிரத்னாவின் பங்கு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முனிரத்னா, “மக்களவை தேர்தலின்போது எனது இருப்பைக் காலி செய்வதற்காக, என்னை திஹார் சிறைக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்று கூறினார். 

“எனது வீட்டின் முன் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் கூட என் மீது பழி சுமத்துகிறார்கள். பிரதீமா கொலை வழக்கு குறித்து விசாரணை நடந்து வருவதால், அதுகுறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது. விசாரணை முடிந்ததும், அரசியல் ரீதியாக எனக்கு முடிவு கட்ட நினைத்தவர்களுக்கு பதில் கூறுவேன்.” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், சட்டப் பிரிவு செயலாளருமான சூர்ய முகுந்த்ராஜ், “இந்தக் கொலையில் எம்.எல்.ஏ. முனிரத்னாவின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். 

"உரிமம் எடுக்காமல், ஹுனசமரனஹள்ளியில் பாறைகள் தகர்க்கப்பட்டுள்ளன. பிரதீமா இதுபற்றி அறிக்கை தயாரித்து மாவட்ட ஆணையரிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும் இதுகுறித்து பெங்களூரு சிக்கஜாலா காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக எம்எல்ஏ முனிரத்னா உள்ளார். எனவே பிரதீமா கொலை குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, முனிரத்னாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என சூர்ய முகுந்த்ராஜ் வலியுறுத்தினார்.

சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் துணை இயக்குநரான பிரதீமா, தொட்டகல்லாசந்திராவில் உள்ள அவரது வீட்டில் கொல்லப்பட்ட ஒருநாள் கழித்து, அவரது முன்னாள் கார் டிரைவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறினர்.

பெங்களூரு ஊரக மாவட்டத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றிய மூத்த புவியியலாளர் பிரதீமா (45) ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அதையடுத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் மூவரைக் கைது செய்தனர். அம்மூவரில் ஒருவரான முன்னாள் ஓட்டுநர் கிரண்தான் கொலையாளி என்று கூறப்படுகிறது.

பிரதீமாவிடம் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணிபுரிந்துவந்த கிரண் கடந்த வாரம் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிகாரிகளின் முக்கியமான தகவல்கள் மற்றும் நகர்வுகளை கிரண் கசியவிட்டதாகவும், பிரதீமா அதுகுறித்து அவரைத் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், கிரண் தொடர்ந்து தகவல்களை கசியவிட்டதால், பிரதீமா அவரைப் பணிநீக்கம் செய்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கிரண் பிரதீமாவை கொல்ல முடிவு செய்துள்ளார். அவர் தனியாக வசித்து வருவதை ஏற்கனவே அறிந்திருந்த கிரண் சனிக்கிழமை இரவு, பிரதீமாவின் வீட்டினுள் புகுந்து, பதுங்கியிருந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com