15 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் கொலையில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை!

தில்லியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த  செய்தியாளா் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு  நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

தில்லி : 15 ஆண்டுகளுக்கு முன்பு தில்லியில் நிகழ்ந்த தொலைக்காட்சி செய்தியாளா் சௌமியா விஸ்வநாதன் கொலை வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு  நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

தில்லியில் ஒரு முன்னணி ஆங்கில செய்தி சேனலில் பணிபுரிந்த செய்தியாளர் சௌமியா விஸ்வநாதன்,  2008-ஆம் ஆண்டு செப்டம்பா் 30-ஆம் தேதி வேலை முடிந்து அதிகாலை 3:30 மணியளவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்தக் கொலையின் பின்னணியில் கொள்ளை நிகழ்ந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் 15 வருடங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த கொலை வழக்கு  இதுவரை 300 முறை நீதிமன்றத்தில்  வாதத்துக்கு வந்துள்ளதும், கொலை சம்பந்தமாக 97  பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

சம்பவத்தன்று, செய்தியாளர் சௌமியாவை, ரவி கபூர் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார் என்றும், சம்பவத்தின் போது, அவருக்கு துணையாக  அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், மற்றும் அஜய் குமாா் ஆகியோர் உடனிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் அஜய் சேத்தியின் உதவியுடன் காரில் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர் கொலையில்,  ரவி கபூா், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமாா்  மற்றும் அஜய் சேத்தி ஆகிய 5 பேர்  குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனா்.  

இந்தநிலையில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவில் இன்று (நவ. 25) தீர்ப்பளிக்கப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி ரவீந்திர குமாா் பாண்டே, அஜய் சேத்தியை தவிர்த்து மீதமுள்ள குற்றவாளிகள் நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்ததோடு, குற்றவாளிகளுக்கு தலா ரூ.1.25 லட்சம் அபராதமும், ஐந்தாம் குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 வருட சிறைத்தண்டனையும், ரூ.7.25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையில், ரூ.12 லட்சத்தை இறந்த பத்திரிகையாளர் சௌமியாவின் குடும்பத்துக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதனிடையே, கொல்லப்பட்ட செய்தியாளர் சௌமியாவின் தாயார் மாதவி விஸ்வநாதன் நீதிமன்ற விசாரணையின்போது தெரிவித்ததாவது : “எனது மகளுக்கு நீதி கிடைப்பதற்காக கடந்த 15 வருடங்களாக காத்திருந்தேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com