முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

அமைதியாக நடந்து முடிந்தது முதல்கட்ட மக்களவைத் தேர்தல்!
முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!
படம் | ஏஎன்ஐ

முதல்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 102 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. ஒரு சில வாக்குச்சாவடிகளைத் தவிர்த்து பொதுவாக வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்ற பெருமைக்குரிய இந்திய மக்களவைத் தேர்தலில் முதல்கட்டமாக இன்று தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் அடங்கிய இத்தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.

தமிழகம், புதுச்சேரி, அருணாசலம், உத்தரகண்ட், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், நாகலாந்து, அந்தமான்-நிகோபார், உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவைத் தேர்தல் முழுமையாக நிறைவுபெற்றது.

மணிப்பூர், மேற்கு வங்கத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளைத் தவிர, பொதுவாகவே வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. முதல் முறை வாக்காளர்களும், முதியவர்களும் தவறாமல் வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

முதல்கட்ட தேர்தல் களத்தில் 1,600க்கும் அதிகமான வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களின் வெற்றி - தோல்வியை தீர்மானிக்கும் வகையில் 16.63 கோடி வாக்காளர்கள் இன்று வாக்களித்துள்ளனர்.

வரும் ஜூன் மாதம், தற்போதைய 17வது மக்களவையின் பதவிக்காலம் நிறைவடையவிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக, 18வது மக்களவை தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியம்.இதையடுத்து மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாலை 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 77.57 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவில் 76.1 சதவிகிதமும், புதுச்சேரியில் 72.84 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவாகின.

உத்தர பிரதேசம் 57.54%, உத்தரகாண்ட் 53.56%, ராஜஸ்தான் 50.27%, மத்திய பிரதேசம் 63.25%, மகாராஷ்டிரம் 54.85%, பிகார் 46.32%, சத்தீஸ்கர் 63.41%, ஜம்மு காஷ்மீர் 65.08%, அருணாசல் பிரதேசம் 63.44%, அந்தமான் நிகோபார் 56.87%, அஸ்ஸாம் 70.77%, லட்சத்தீவு 59.02%, மணிப்பூர் 67.66%, மேகாலயா 69.91%, மிஸோரம் 52.73%, நாகாலாந்து 55.79%, சிக்கிம் 68.06%, திரிபுரா 76.10% வாக்குகள் பதிவாகின.

நாகாலாந்து

மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நாகலாந்து மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில், தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு சார்பில் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின.

இதையடுத்து, தேர்தல் நடைமுறையில் குறுக்கீடு செய்ததாக, தேர்தல் ஆணையம் அந்த அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

அந்தமான் - நிகோபார்

அந்தமான் - நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடியின மக்கள் இன்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர்.

மேகாலயம்

மேகாலயத்தின் ஷில்லாங் மற்றும் துரா என இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. காலை முதலே, விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

மணிப்பூர்

ஒரு சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் உள்பட மணிப்பூரில் மாலை நான்கு மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெற்று, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தீவைத்துக் கொளுத்தியது.

அருணாசலம்

அருணாசலப் பிரதேசத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிக்கும் 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

பாமெங் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடியில் இருவேறு கட்சித் தொண்டர்களுக்கு இடையே நடந்த மோதலால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மகாராஷ்டிரம்

நாக்பூர், சந்திரபூர் உள்ளிட்ட ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக அமைதியான முறையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com