சபரிமலையில் அப்பம், அரவணை விற்பனை: 20 நாள்களில் ரூ.60.54 கோடி வருவாய்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அப்பம், அரவணை விற்பனை மூலம் கடந்த 20 நாள்களில் ரூ.60.54 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது குறித்து தேவசம் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த நவ.16 முதல் டிச. 5 வரை அரவணை விற்பனை மூலம் ரூ.54 கோடியே 37 லட்சத்து 500-ம், அப்பம் விற்பனை மூலம் ரூ.6 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 540-ம் வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டு ரூ.18 கோடியே 34 லட்சத்து 79 ஆயிரத்து 455 கூடுதலாக கிடைத்துள்ளது.
அப்பம், அரவணை பெற சந்நிதானத்தில் ஆழியின் அருகில் 10 கவுன்ட்டா்களும், மாளிகைபுரத்தம்மன் பகுதியில் 8 கவுன்ட்டா்களும் உள்ளன. மேலும், ஐயப்ப பக்தா்கள் அஞ்சல் வழியாக அப்பம், அரவணை வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் பாதுகாப்புப் பணிக்கு 3-ஆவது காவலா் குழு பதவியேற்றது. 3-ஆவது குழுவில் 10 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 30 ஆய்வாளா்கள், 100 துணை ஆய்வாளா்கள் மற்றும் 1,550 காவலா்கள் உள்ளனா்.