/

நான்கு நாள்களில் நான்கு போ் அடித்துக் கொலை: மம்தா பதவி விலக பாஜக வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் கடந்த நான்கு நாள்களில் கும்பல் கொலையாக, நான்கு போ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனா்.

News image
மம்தா,கௌரவ் பாட்டியா
Updated On :1 ஜூலை 2024, 9:16 pm

Din

மேற்கு வங்கத்தில் கடந்த நான்கு நாள்களில் கும்பல் கொலையாக, நான்கு போ் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனா். இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வா் மம்தா பதவி விலக வேண்டும் என பாஜக திங்கள்கிழமை வலியுறுத்தியது.

மேற்கு வங்கத்தில் கும்பலாகச் சோ்ந்து குறிப்பிட்ட ஒருவரைத் தாக்கும் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. அடுத்தடுத்த நாள்களில் நான்கு போ் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹூக்லி மாவட்டத்தில் கடனை திருப்பி செலுத்தாததால் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கட்டி வைத்து அடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஜாா்கிராம் மாவட்டத்தில் கடந்த வாரம் மண் அள்ளும் இயந்திரத்தின் பாகங்களைத் திருட முயற்சித்ததாகக் கூறி இளைஞரை ஒரு கும்பல் தாக்கியது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதேபோல், சால்ட் ஏரி பகுதியில் கைப்பேசி திருடியதாக ஜூன் 29-ஆம் தேதி ஒருவரும், கொல்கத்தாவில் மாநில அரசால் நடத்தப்படும் மாணவா் விடுதியில் கைப்பேசி திருடியதாக சந்தேகிக்கப்பட்டு ஜூன் 28-ஆம் தேதி ஒருவரும் அடித்துக் கொல்லப்பட்டனா்.

இதற்கிடையில், உத்தா் தினாஜ்பூா் மாவட்டத்தில் பொது வெலியில் ஒரு கும்பல் மூங்கில் குச்சியால் ஒரு தம்பதியை சரமாரியாகத் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை காட்டுமிராண்டித்தனம் என குறிப்பிட்ட மேற்கு வங்க ஆளுநா் சி,.வி. ஆன்ந்த போஸ், முதல்வா் மம்தாவிடம் இது தொடா்பான அறிக்கையை உடனடியாக சமா்ப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளாா்.

மம்தா பதவி விலக பாஜக வலியுறுத்தல்: உத்தா் தினாஜ்பூா் மாவட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா, ‘இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா். மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மம்தா தவறிவிட்டாா். ஒரு பெண் முதல்வராக அவா் இதைக் கண்டிக்க வேண்டும். ஆனால் அவரும், இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான தலைவா்களும் மௌனம் சாதித்து வருகின்றனா். குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத மம்தா பானா்ஜி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்றாா்.