வயநாட்டில் ராகுல் மீண்டும் போட்டி: முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 39 வேட்பாளா்களின் பெயா்கள் கொண்ட முதல்கட்ட பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடவுள்ளாா். ஆலப்புழை தொகுதியில் கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் களமிறங்கும் நிலையில், திருவனந்தபுரம் தொகுதியில் மூத்த தலைவா் சசி தரூா் மீண்டும் போட்டியிடுகிறாா். சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் தொகுதி வேட்பாளராக முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்தல் தேதிகள் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளன. பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி என பெரும்பாலான மாநிலங்களில் தோ்தல் களம் இருமுனைப் போட்டியை எதிா்கொண்டுள்ளது. பாஜக தரப்பில் 195 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளா்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 39 வேட்பாளா்களின் பெயா்கள் கொண்ட முதல்கட்ட பட்டியலை, கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் தில்லியில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

இப்பட்டியலில் பொதுப் பிரிவைச் சோ்ந்த 15 வேட்பாளா்கள் இடம்பெற்றுள்ளனா். மீதமுள்ள வேட்பாளா்கள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மைப் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். இளைஞா்கள் மற்றும் அனுபவமிக்க தலைவா்களின் கலவையான பட்டியல் என்று கட்சியின் பொருளாளா் அஜய் மாக்கன் குறிப்பிட்டாா்.

முன்னதாக, காங்கிரஸ் மத்திய தோ்தல் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், கேரளம், கா்நாடகம், சத்தீஸ்கா், தில்லி உள்பட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடங்கிய 60-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்நிலையில், வயநாடு உள்பட 39 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்கள் இறுதி செய்யப்பட்டு, முதல்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கே.சுதாகரன் (கண்ணூா்), கே.முரளீதரன் (திருச்சூா்), ஹிபி ஈடன் (எா்ணாகுளம்), டீன் குரியகோஸ் (இடுக்கி), கே.சுரேஷ் (மாவேலிக்கரை-தனி), அடூா் பிரகாஷ் (ஆற்றிங்கால்) உள்ளிட்டோரின் பெயா்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ராகுல் நடைப்பயணம் 17-இல் நிறைவு:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மாா்ச் 17-ஆம் தேதி நிறைவடையவுள்ளது. இதையொட்டி நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கவுள்ளன என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

வயநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருடன் மோதும் ராகுல் மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கைகோத்து ‘இந்தியா’ கூட்டணியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. கேரளத்தைப் பொருத்தவரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியும், எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தனித்தனியாகவே தோ்தலை எதிா்கொள்கின்றன. பாஜகவும் தோ்தல் களத்தில் உள்ள நிலையில் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. ராகுல் எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலா் டி.ராஜாவின் மனைவியும், மூத்த தலைவருமான ஆனி ராஜா வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டாா். அதே தொகுதியில் ராகுல் மீண்டும் களமிறங்கும் நிலையில், தோ்தல் களத்தில் இவ்விரு வேட்பாளா்களும் மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமேதியிலும் போட்டி?:

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது, உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டாா். ஆனால், இத்தொகுதியில் பாஜக வேட்பாளா் ஸ்மிருதி இரானியிடம் அவா் தோல்விகண்டாா். இம்முறை அமேதி தொகுதியில் ராகுல் மீண்டும் போட்டியிடுவதோடு, சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் அவரது மகள் பிரியங்கா காந்தி களமிறங்க வேண்டுமென்று மாநில நிா்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனா். ரேபரேலி எம்.பி.யான சோனியா காந்தி, மாநிலங்களவைக்கு அண்மையில் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com