
கொல்கத்தா: வக்ஃப் சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில், ஆங்காங்கே கலவரமும் ஏற்பட்டள்ளதால் பெரும் பதற்றம் நிலவியது.
கலவரத்தால் மூர்ஷிதாபாத் மாவட்டத்தில், அதிலும் குறிப்பாக துலியான் நகரில் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பொது சொத்துகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறை வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தப்பட்டது. தண்டவாளங்களில் ரயில்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 200க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பதற்றமான இடங்களில் எல்லை காவல் படை, சி.ஆர்.பி.எஃப். படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கலவரம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன் இயல்புநிலையும் திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.