மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி

மகா கும்ப மேளா மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.
மகா கும்பமேளா 'மரண' கும்பமேளாவாக மாறிவிட்டது! - மமதா பானர்ஜி
Published on
Updated on
2 min read

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை உத்தர பிரதேச அரசு மறைக்கிறது; உயிர்பலி சம்பவங்கள் தொடர்வதால் மகா கும்ப மேளா மரண கும்பமேளாவாக மாறிவிட்டது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கடந்த மாதம் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கிடையே இரு நாள்களுக்கு முன்பு தில்லி ரயில்வே நிலையத்தில் கும்ப மேளாவுக்குச் செல்லும் ரயில்களைப் பிடிப்பதற்காக ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பக்தர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து மேற்குவங்க சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

கும்ப மேளாவில் கூட்ட நெரிசலின்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; இறந்தவர்களின் எண்ணிக்கையை உத்தர பிரதேச அரசு மறைக்கிறது. பாஜக தலைமையிலான அரசு நடத்தும் மகா கும்பமேளா தற்போது மரண கும்பமேளாவாக மாறிவிட்டது. நெரிசலில் உயிரிழப்புகள் நிகழ்ந்த சம்பவம் மிகவும் மனவேதனைக்குரியது.

பக்தர்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறந்த திட்டமிடுதலும் மேலாண்மையும் அவசியம். இதுபோன்ற மோசமான உயிர்பலி சம்பங்கள் குடிமக்களை பாதுகாப்பதில் ஆழ்ந்து திட்டமிடுதலின் அவசியத்தை உணர்த்துகின்றன. கும்பமேளாவையொட்டி முறையான ஏற்பாடுகளை செய்வதை விடுத்து உத்தர பிரதேச அரசு, வெறுமனே கும்ப மேளாவை மட்டும் மிகைப்படுத்தி வருகிறது.

கும்பமேளாவுக்கு சென்று உயிரிழந்த மேற்கு வங்க பக்தர்களின் உடல்கள் முறையான ஆவணங்கள் இன்றி அனுப்பிவைக்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அரசின் நிவாரணங்களைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் இறப்பு சான்றிதழ் பெற மேற்குவங்க அரசே உடல்களை பிரேத பரிசோதனை மேற்கொண்டது.

இந்த கும்பமேளா வி.ஐ.பி.க்களுக்கான மேளாவாகத்தான் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகவே நான் கும்பமேளாவில் நீராடுவதைத் தவிர்த்தேன். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியான பிறகும் அதுபற்றி விசாரிக்க உத்தர பிரதேச அரசு, விசாரணைக் குழு அமைக்கவில்லை. ஆனால், மேற்குவங்க அரசு விசாரணைக் குழு அமைத்தது என்றார்.

நாடுதிரும்புவோரின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்: அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் கைவிலங்கிட்டு நாடுகடத்தப்படுவது வெட்கக்கேடு; அங்கிருந்து தாயகம் திருப்பி அனுப்பி வைக்கப்படுபவர்களின் கண்ணியத்தை காக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

நாடு கடத்தப்பட்டவர்களுக்கு நேர்ந்த மனிதாபிமானமற்ற செயல் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்தியர்கள் கைவிலங்கிட்டு நாடு கடத்தப்படுவது வெட்கக்கேடாகும். இதுபோன்ற நிலையைத் தவிர்த்து நாடு கடத்தப்படுபவர்களின் போக்குவரத்து வசதிக்குத் தேவையான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருக்க வேண்டும். மரியாதைக்குரிய பிரதமர் இதற்கு பொறுப்பேற்பாரா? அலுவலக ரீதியாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து நாடுகடத்தப்படும் இந்தியர்கள் விஷயத்தில் அவர்கள் எங்கள் குடிமகன்கள், அவர்களை நாங்கள் திருப்பி அழைத்துக் கொள்கிறோம் என்று கூறியிருக்க வேண்டும். ஆனால், அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்திய குடிமகன்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com