
சபரிமலையில் இன்று மாலை (ஜன. 14) மகர ஜோதி தெரிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பொன்னம்பல மேட்டில் 3 முறை ஜோதி தெரிந்தபோது சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சபரிமலையில் முக்கிய நிகழ்வான மகர ஜோதி விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.
சபரிமலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. இன்று மகரவிளக்கு பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடைபெற்றது.
மகர விளக்கு பூஜையில் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
மகரஜோதியை தரிசிப்பதற்காக பாண்டித்தாவளம், அப்பாச்சி மேடு, சரங்குத்தி, புல்மேடு உள்பட பல்வேறு இடங்களில் குடில்கள் கட்டி பக்தர்கள் தங்கியிருந்தனர். சுமார் ஒன்றரை லட்சம் பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர்.
ஐயப்பனுக்கு எடுத்துவரப்பட்ட திருவாபரணம் சரங்குத்தியை அடைந்த பின்னரே பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மகரஜோதி நிகழ்வையொட்டி 5 ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் வசதிக்காக குடிநீர், உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இதையும் படிக்க: சபரிமலை கோயிலில் மகர ஜோதி தரிசனம் - புகைப்படங்கள்