
அதிக சாலை விபத்துகள் காரணமாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம் தடை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நெடுஞ்சாலை விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருசக்கர வாகனங்களுக்கானத் தடையானது, பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையின் கர்நாடகத்திற்குட்பட்ட பகுதிக்கு மட்டும் பொருந்தும் என்றும் பின்னர் இது விரிவுபடுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட பங்கார்பேட் பகுதியில் பெங்களூருவில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசுக் கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மீதியது.
இதில் காரில் பயணம் செய்த இரண்டு வயது குழந்தை உள்பட மூன்று பேரும், இருசக்கர வாகனத்தில் வந்தவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சொகுசுக் காரில் பயணித்தவர்களில் படுகாயங்களுடன் உயிர் பிழைத்த 4 பேர் கோலார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்த விபத்து நடந்த தேசிய நெடுஞ்சாலையானது கடந்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் 48 கிலோ மீட்டருக்கான நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. இச்சாலை முழுவதும் கர்நாடக மாநிலத்திற்குட்பட்டது.
எஞ்சிய 260 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை ஆந்திரம் வழியாக தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நிறைவு பெறுகிறது. இச்சாலையில் 120 கி.மீ. வேகத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரூ. 17,900 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தென்னிந்தியாவின் முதல் பசுமைவழிச் சாலை இது எனக் கூறப்பட்டது. இதன்மூலம் 7 மணிநேரப் பயணமானது மணிநேரமாகக் குறைந்துள்ளது.
நாளொன்றுக்கு 1600 முதல் 2000 வாகனங்கள் இச்சாலை வழியாகச் செல்வதாக தரவுகள் கூறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.