
புது தில்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர் சாதியினர் என்ற தகவல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன்படி, உயர்நீதிமன்றங்களில் கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் நியமிக்கப்பட்டுள்ள மொத்தம் 715 நீதிபதிகளில் 551 பேர் உயர் சாதிப் பிரிவினராவர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மாநிலங்களைவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த 2018-ஆம் ஆண்டுமுதல் உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்டுள்ள 715 நீதிபதிகளில், எஸ்சி பிரிவினர் 22 பேரும், எஸ்டி பிரிவினர் 16 பேரும், இதர பிற்படுத்தப்பட்டோர்(ஓபிசி) பிரிவினர் 89 பேரும், சிறுபான்மையினர் 37 பேரும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஷ்திரிய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் குமார் ஜா, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு எழுப்பியிருந்த கேள்வியொன்றில், ‘உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் நீதிபதிகள் பொறுப்புகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம்’ குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார்.
இந்த நிலையில், மத்திய அரசு அளித்துள்ள பதிலில், உயர்நீதிமன்றங்களில் கடந்த 2018-முதல் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளில் மொத்தமுள்ள 715 பேரில் 164 பேர் மட்டுமே மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தோராவர் என்பது தெளிவாகியுள்ளது. இந்த தரவுகள் மூலம் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பதவி வகிப்போரில் உயர்சாதிப் பிரிவுகளைச் சேர்ந்தோர் 77.06 சதவிகிதம் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசு அளித்துள்ள பதிலில், நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்றங்களிலிருந்து முன்மொழிவுகளை அனுப்பும்போது, அதில் எஸ்சி, எஸ்டி, இதர பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்து நீதிபதிகள் பெயர்ப்பட்டியலை தயார் செய்யுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் அனைத்தும் உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின்பேரிலேயே நியமிக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.