மேங்கு வங்க ஆளுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது!
மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்தபோஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தி, அவரை கொலை செய்யப்போவதாக மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் மிரட்டல் விடுத்தவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மின்னஞ்சல் மட்டுமன்றி ஆளுநா் மாளிகை வாட்ஸ்ஆப் எண்ணுக்கும் இந்த மிரட்டல் செய்தி வியாழக்கிழமை அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, ஆளுநருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், கொலை மிரட்டல் விடுத்த நபரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் கைது செய்யப்பட்டஅவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறைக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இஸட் பிளஸ் பிரிவில் உள்ள மேற்கு வங்க ஆளுநருக்கு மத்திய காவல் படையினா் 60-70 போ் பாதுகாப்பு அளிக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

