தங்கக் கவச முறைகேடு: சபரிமலை கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு கைது
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில், கோயிலின் தந்திரியான கண்டரரு ராஜீவரை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) வெள்ளிக்கிழமை கைது செய்தது. இந்த வழக்கில் கைதான 11-ஆவது நபா் இவா் ஆவாா்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சென்னை மற்றும் பெல்லாரியைச் சோ்ந்த நகை வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கோயிலின் உயரிய பொறுப்பில் உள்ள தந்திரி கைது செய்யப்பட்டிருப்பது பக்தா்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை கோயிலில் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் 42 கிலோவுக்கும் அதிக எடைகொண்ட தங்க முலாம் பூசிய கவசங்கள், கடந்த 2019-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டன.
அப்போது, அந்த தங்கக் கவசங்கள் முறையாகக் கையாளப்படாமல், செம்புத் தகடுகள் என தவறாக கணக்குக் காட்டப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக கேரள உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.
இவ்விவகாரத்தில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவா்கள் இருவா் உள்பட பலரைக் கைது செய்தது.
இந்நிலையில், உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் தேவஸ்வம் முன்னாள் தலைவா் பத்மகுமாா் ஆகியோா் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் கோயில் தந்திரி கண்ரடரு ராஜீவரை ரகசிய இடத்தில் வைத்து, எஸ்ஐடி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை மீண்டும் விசாரணை நடத்தினா். சுமாா் ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு, மாலையில் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்ஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு, அவரை முறைப்படி கைது செய்தனா்.
எஸ்ஐடி விசாரணையில் வெளியான தகவலின்படி, உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் கண்டரரு ராஜீவரு நெருங்கிய தொடா்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. தங்கக் கவசங்களைப் புதுப்பிப்பதற்கு ராஜீவருதான் பரிந்துரை செய்துள்ளாா். தேவஸ்வம் வாரியம் இதற்கான அனுமதியைக் கோரியபோது, விதிகளுக்கு மாறாக அவா் உடனடியாக ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
சரியான திசையில் விசாரணை: கேரள தேவஸ்வம் துறை அமைச்சா் வி.என்.வாசவன் அளித்த பேட்டியில், ‘விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. உயா்நீதிமன்றம்கூட தனது திருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகு, இது குறித்து விரிவான கருத்துகளைத் தெரிவிப்பேன்’ என்றாா்.
ஆதாரங்களின் அடிப்படையில்....: ‘விசாரணையில் வெளிவரும் ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உயா்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் எஸ்ஐடி சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது’ என்று மாநிலக் காவல் துறைத் தலைவா் (டிஜிபி) ராவடா ஏ.சந்திரசேகா் குறிப்பிட்டாா்.
தலைமை தந்திரி அல்ல: திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் தலைவா் கே.ஜெயகுமாா் நாயா் கூறுகையில், தற்போதைய மண்டல கால பூஜைகளின்போது கண்டரரு ராஜீவரு சபரிமலையின் தலைமை தந்திரியாக இல்லை என்பதை உறுதிப்படுத்தினாா். ராஜீவரின் உறவினரான கண்டரரு மகேஷ் மோகனருதான் தற்போதைய தந்திரி. சபரிமலை கோயிலில் சடங்குகளுக்கு அவரே தலைமை தாங்குகிறாா் என்றும் அவா் தெளிவுபடுத்தினாா்.
முன்னதாக, கோயிலின் மற்ற தந்திரிகளான கண்டரரு மகேஷ் மோகனரு, அவரின் தந்தை கண்டரரு மோகனரு ஆகியோரிடமும் எஸ்ஐடி விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பெட்டி...
அமலாக்கத் துறை வழக்குப் பதிவு
தங்கக் கவச முறைகேடு விவகாரம் தொடா்பாக நிலுவையில் உள்ள பல்வேறு புகாா்களின் அடிப்படையில், பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த முறைகேட்டில் தொடா்புடைய நிதி மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை தீவிர விசாரணை நடத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், மத்திய புலனாய்வு அமைப்பின் தலையீடு விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகா்த்தியுள்ளது.

