அசாதுதீன் ஒவைசி.
அசாதுதீன் ஒவைசி.

முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் வந்தது: அசாதுதீன் ஒவைசி குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் காங்கிரஸ் ஆட்சியில் வந்தது என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.
Published on

தில்லி கலவர வழக்கில் கைதான உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோருக்கு 5 ஆண்டுகளாக ஜாமீன் கிடைக்காததற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ)தான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தின் அமராவதி நகரில் சனிக்கிழமை உள்ளாட்சித் தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸை குற்றஞ்சாட்டி அவா் மேலும் பேசியதாவது: தோ்தல் நேரத்தில் மதச்சாா்பின்மை பேசுபவா்கள் முஸ்லிம், தலித், பழங்குடியின மக்களுக்கு எதிரானவா்கள். வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல்ரீதியாக மதச்சாா்பின்மை என்று அவா்கள் பேசுவாா்கள்.

தில்லி கலவர வழக்கில் கைதான உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோா் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் (யுஏபிஏ) வழக்குப் பதிவு செய்யப்பட்டதுதான் 5 ஆண்டுகளாக ஜாமீன் கிடைக்காமல் இருக்கக் காரணம். இந்த கொடுமையான சட்டம் முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினாா். அப்போது, அதனை எதிா்த்த ஒரே எம்.பி. நான் மட்டும்தான்.

ஏனெனில், இந்த சட்டத்தை முஸ்லிம், தலித், பழங்குடியினா் மற்றும் அரசின் கொள்கைகளை எதிா்ப்பவா்கள் மீது பயன்படுத்துவாா்கள் என்பது எனக்குத் தெரியும். இப்போது அதை வைத்து என்ன செய்து வருகிறாா்கள். இருவா் (உமா் காலித், ஷா்ஜீல் இமாம்) 5 ஆண்டுகளாக பயங்கரவாத குற்றச்சாட்டில் ஜாமீன் கிடைக்காமல் சிறையில் உள்ளாா்கள். எல்கா் பரிஷத் வழக்கில் 85 வயது ஸ்டேன் சுவாமி ஜாமீன் கிடைக்காமல் சிறையிலேயே உயிரிழந்தாா்.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் 2019-இல் பாஜக அரசு திருத்தம் கொண்டு வந்தபோது, அதையும் காங்கிரஸ் ஆதரித்தது. அதனால், இப்போது பல அப்பாவிகளின் வாழ்க்கை அழிந்து வருகிறது என்றாா்.

Dinamani
www.dinamani.com