"ஒரே பாரதம், உன்னத பாரதம்' - காசி தமிழ் சங்கத்தின் உணர்வு! பிரதமர் நரேந்திர மோடி
சோம்நாத் மீது 1026-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் சில நாள்களுக்கு முன் நடைபெற்ற சோம்நாத் சுயமரியாதை விழாவில் பங்கேற்க நான் புனித பூமியான சோம்நாத் சென்றிருந்தேன்.
இந்த நிகழ்ச்சியின்போது, சோம்நாத்துக்கு வந்திருந்த சிலரையும், காசி-தமிழ் சங்கமத்தின்போது காசிக்கு வந்திருந்த சிலரையும் நான் சந்தித்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அவர்கள் அளித்த பாராட்டு வார்த்தைகள் என்னை நெகிழச் செய்தன. எனவே, இந்த விஷயத்தில் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்.
தமிழ் கற்காமல் இருப்பது என் வாழ்க்கையின் மிகப் பெரிய வருத்தம் என்று மனதின் குரல் நிகழ்ச்சியின்போது நான் கூறியிருந்தேன். அதிருஷ்டவசமாக, கடந்த சில ஆண்டுகளில், இந்தியா முழுவதும் தமிழ் கலாசாரத்தை மேலும் பிரபலப்படுத்தவும், "ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை ஆழப்படுத்தவும் எங்கள் அரசுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அத்தகைய முயற்சிக்கு ஒரு சிறந்த உதாரணம் காசி-தமிழ் சங்கமம்.
நமது பண்பாட்டில், சங்கம் அல்லது சங்கமம் ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது. அத்தகைய சங்கமத்தை நடத்துவதற்குக் காசியை விட சிறந்த இடம் எதுவாக இருக்க முடியும்! பழங்காலத்திலிருந்தே நாகரிகத்தின் நங்கூரமாகத் திகழ்ந்துவரும் காசிக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அறிவையும், வாழ்க்கை அனுபவத்தையும், மோட்சத்தையும் தேடி வந்துள்ளனர்.
தமிழ் மக்களுடனும் கலாசாரத்துடனும் காசியின் தொடர்பு மிகவும் ஆழமானது. காசியில் உறைந்துள்ள பகவான் விஸ்வநாதர் தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் உறைகிறார். தமிழ்நாட்டில் உள்ள தென்காசி, தெற்கின் காசி அல்லது தட்சிண காசி என்று அழைக்கப்படுகிறது. துறவி குமரகுருபர சுவாமிகள் தனது ஆன்மிகம், புலமை மற்றும் நிறுவனக் கட்டுமானம் மூலம் காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நீடித்த தொடர்பை உருவாக்கினார். தமிழ்நாட்டின் மிகச் சிறந்த புதல்வர்களில் ஒருவரான மகாகவி சுப்பிரமணிய பாரதி, காசியில் அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஆன்மிக விழிப்புணர்வுக்கான இடத்தைக் கண்டார்.
காசி-தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு 2022-இல் நடைபெற்றது. அடுத்தடுத்த நிகழ்வுகளில் புதிய கருப்பொருள்கள், புதுமையான வடிவங்கள் மற்றும் ஆழமான ஈடுபாட்டை அறிமுகம் செய்வதே நோக்கமாக இருந்தது.
2025-இல் காசி தமிழ் சங்கமத்தின் 4-ஆம் ஆண்டு கருப்பொருளான "தமிழ் கற்கலாம்' காசியிலும் அருகில் உள்ள பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு இனிய தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.
தொல்காப்பியம், 4 இந்திய மொழிகளிலும் 6 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தென்காசியில் இருந்து காசிக்கு ஒரு தனித்துவமான நிகழ்வாக அகத்திய முனிவர் வாகனப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. வழியில், கண் மருத்துவ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முகாம்கள், எண்ம (டிஜிட்டல்) எழுத்தறிவு முகாம்கள் போன்ற பல்வேறு இயக்கங்கள் நடத்தப்பட்டன.
கலாசார ஒற்றுமையின் செய்தியைப் பரப்பிய பாண்டிய மன்னர் அதி வீர பராக்கிரம பாண்டியனுக்கு இந்தப் பேரணி அஞ்சலி செலுத்தியது. நமோ படித்துறையில் கண்காட்சிகள், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் கல்வி அமர்வுகள், கலாசார நிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற்றன.
காசி தமிழ் சங்கமத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த விஷயங்களில் ஒன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்பதாகும். நமது வேர்களுடன் தங்கள் தொடர்பை ஆழப்படுத்த வேண்டும் என்ற நமது இளைஞர் சக்தியின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. வாரணாசி மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான நான் இதில் பெருமைப்படாமல் இருக்க முடியாது!
இந்த முறை, காசி-தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. அதில் குடியரசு துணைத் தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைமிகு மைந்தருமான சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, இந்தியாவின் ஆன்மிக மகத்துவத்தையும் தேசிய ஒருங்கிணைப்பையும் இத்தகைய தளங்கள் எவ்வாறு ஆழப்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட்டு மிகவும் ஊக்கமளிக்கும் உரையை நிகழ்த்தினார்.
காசி - தமிழ் சங்கமம் கலாசார புரிதலை வலுப்படுத்தி, மக்களிடையே பரிமாற்றங்களை வளர்க்கிறது. அத்துடன் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே நிலையான பிணைப்புகளை உருவாக்குகிறது. மிக முக்கியமாக, இது "ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுவாக வளர்த்துள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு மிகவும் புனிதமான பண்டிகைக் காலமாகும். சூரியன், இயற்கை, விவசாயம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சங்கராந்தி, உத்தராயணம், பொங்கல், மாக பிஹு போன்ற பல்வேறு பண்டிகைகளை மக்கள் உற்சாகமாகக் கொண்டாடுகின்றனர். இந்தப் பண்டிகைகள் மக்களை ஒருங்கிணைத்து, நமது சமூகத்தில் நல்லிணக்க உணர்வை வலுப்படுத்துகின்றன.
இந்தப் பண்டிகைகளையொட்டி மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற பண்டிகைகள், நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தையும், கூட்டுப் பங்கேற்பையும், தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்தி, தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

