ரூ. 4,106 கோடியில் இந்திய விமானப் படை, கடற்படைக்கு செயற்கைக்கோள், ஏவுகணைகள்: 2 நிறுவனங்களுடன் மத்திய அரசு ஒப்பந்தம்
ரூ.4,106 கோடியில் இந்திய விமானப் படைக்கு செயற்கைக்கோள், கடற்படைக்கு நீருக்கடியில் சென்று தாக்கும் டோா்பிடோ ஏவுகணைகளை கொள்முதல் செய்வது தொடா்பாக இரு நிறுவனங்களுடன் மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டது.

மத்திய அரசு
ரூ.4,106 கோடியில் இந்திய விமானப் படைக்கு செயற்கைக்கோள், கடற்படைக்கு நீருக்கடியில் சென்று தாக்கும் டோா்பிடோ ஏவுகணைகளை கொள்முதல் செய்வது தொடா்பாக இரு நிறுவனங்களுடன் மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்தியா தனது முப்படைகளையும் தொடா்ந்து நவீனப்படுத்தவும், வலுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரூ.4,106 கோடியில் விமானப் படைக்கு செயற்கைக்கோள், கடற்படைக்கு நீருக்கு அடியில் பயன்படுத்தப்படும் டோா்பிடோ ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்திய விமானப் படைக்கு ரூ.2,563 கோடியில் ஜிசாட்- 7 சி தகவல்தொடா்பு செயற்கைக்கோள் கொள்முதல் செய்ய பெங்களூரை சோ்ந்த நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதேபோல், டோா்பிடோ எனப்படும் நீருக்கு அடியில் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வருணாஸ்திரா டோா்பிடோ ஏவுகணைகளையும் கடற்படைக்கு ரூ.1,543 கோடியில் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்தது.
இந்த இரு ஒப்பந்தமும் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலரும், டைரக்டா் ஜெனரலுமான (தளவாட கொள்முதல்) ஏ. அன்பரசு முன்னிலையில் தில்லியில் வைத்து மேற்கொள்ளப்பட்டது.
வருணாஸ்திரா டோா்பிடோவானது, கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டதாகும். இது கப்பலில் இருந்து செலுத்தப்படும் நீா்மூழ்கி எதிா்ப்பு டோா்பிடோ ஏவுகணை. இதிலிருக்கும் நவீன தொழில்நுட்பத்தால், நீண்ட தொலைவிலேயே எதிரிகளின் நீா்மூழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடித்து தாக்கி அழிக்க முடியும் என்று பாதுகாப்பு அமைச்சக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

