Enable Javscript for better performance
80. பெரிதினும் பெரிது- Dinamani

சுடச்சுட

  

  80. பெரிதினும் பெரிது

  By ஜி. கௌதம்  |   Published on : 21st October 2019 12:00 AM  |   அ+அ அ-   |    |  

  guru-disciple

   

  ஆலயங்களுக்குச் சென்று கருவறையில் காத்திருக்கும் கடவுளைத் தரிசிப்பதில் எவ்வளவு பரவசமோ.. அதற்குக் குறைவில்லாத பெருமகிழ்ச்சி, கோயில் பிராகாரத்தில் சற்று நேரம் அமர்ந்து பேரமைதியை பருகிவருவதிலும் கிடைக்கும்.

  குருவுக்கும் சிஷ்யனுக்கும் அது எப்போதும் பிடிக்கும். அன்றும் அப்படித்தான், சிந்தனை எதுவுமின்றி கோயில் பிராகாரத்தில் அமர்ந்திருந்தனர் இருவரும்.

  கொடிமரத்தை தரையில் விழுந்து கும்பிட்டுவிட்டு, குரு - சிஷ்யன் அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே வந்து அமர்ந்தது ஒரு குடும்பம். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அழகாய் ஒரு பெண் குழந்தை, துறுதுறுவென ஒரு பெண் குழந்தை.. அதுதான் அந்தக் குடும்பம்.

  சற்றுத் தொலைவில்.. தள்ளாடி நடந்துவந்த வயதான மூதாட்டி ஒருவர் கோயில் சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். மூதாட்டியின் முகமும், முகத்தில் தவழ்ந்த துயரக் களையும், அவர் அமர்ந்திருந்த நிலையும் அவரது சூழலைச் சொல்லாமல் சொல்லியது. உறவுகளால் கைவிடப்பட்ட ஆதரவற்றவர் அவர் என்பது பளிச் என புரிந்தது.

  போக்கிடம் எதுவுமில்லாமல் கோயிலில் வந்து அமர்ந்திருந்தார் அந்த மூதாட்டி. பசி அவரது கண்களிலும் தெரிந்தது. யாரிடமாவது கையேந்தினால் அவமானமாக இருக்குமே என்ற கலக்கத்துடன் உட்கார்ந்திருப்பது போலவும் தோன்றியது.

  சிஷ்யன்தான் அந்த மூதாட்டியை முதலில் கவனித்தான். குருவிடம் பேசினான்.

  “குருவே.. அந்த மூதாட்டியைப் பார்த்தால் மிகவும் பசியுடன் இருப்பது தெரிகிறது.. நான் சென்று உதவட்டுமா..” என்றான் சிஷ்யன்.

  “ஒரு நிமிடம் பொறு..” என்றார் குரு. சிஷ்யனுக்கு சாடை காட்டினார். அவர் காட்டிய திசைக்குத் திரும்பினான் சிஷ்யன்.

  அந்தக் குடும்பத்தில் இருந்த சிறுவன், மூதாட்டியை தன் அம்மாவுக்குச் சுட்டிக்காட்டியபடியே ஏதோ பேச ஆரம்பித்தான்.

  “அம்மா.. அந்தப் பாட்டியைப் பார்த்தால் பாவமாக இருக்கு..” என்றான் அவன்.

  அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பெண் குழந்தை.. அத்தனை பேரும் ஒரே நேரத்தில் அந்த மூதாட்டியைப் பார்த்தார்கள்.

  “ஆமாம்ப்பா.. உதவிக்கு யாரும் இல்லை போலிருக்கு.. பாவம்தான்..” என்றாள் அம்மா.

  “நாம ஏதாச்சும் உதவி செய்யலாமாம்மா..” என்று ஆர்வத்துடன் கேட்டான் சிறுவன்.

  “பணப்பையை கோயிலுக்கு எடுத்து வரலைப்பா. அடுத்த முறை வர்றப்ப, அந்தப் பாட்டி இங்கே இருந்தா நிறைய பணம் கொடுத்து உதவி செய்யலாம்..” என்று சொன்னாள் அம்மா.

  “காசு பணமெல்லாம் கொடுக்கக் கூடாது. நல்ல சாப்பாடு வாங்கிக் கொடுக்கணும். வயிறாறச் சாப்பிடட்டும். உங்களையெல்லாம் வீட்டில் விட்டுவிட்டு, நல்ல கடையில் உணவு வாங்கிக் கொண்டுவந்து, அந்தப் பாட்டியிடம் நானே கொடுக்கிறேன்..” என்றார் அப்பா.

  “நான் வேண்டுமானால் நாம் வாங்கியிருக்கும் இந்த ஆலயப் பிரசாதத்தை அந்த மூதாட்டிக்குக் கொடுக்கட்டுமா?” என்று கேட்டார் அந்தக் குடும்பத்தலைவரின் அம்மா.

  “வேண்டாம். இந்தக் கோயிலின் அறங்காவலர் குழுவில் இருக்கும் என் பள்ளி நண்பனிடம் பேசி, தினமும் இவருக்கு இங்கே தயாராகும் பிரசாதத்தை இலவசமாகக் கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் நான்..” என்றார் குடும்பத்துப் பெரியவர்.

  என்ன சொல்வது.. என்ன செய்வதென அந்தச் சின்னஞ் சிறுவனுக்கு விளங்கவில்லை. திரும்பித் திரும்பி அந்த மூதாட்டியையே பார்த்தபடி இருந்தான்.

  அனைத்தையும் கவனித்தபடியே இருந்த சிஷ்யன், குருவின் பக்கம் திரும்பினான். அப்போது அவர், மறுபடியும் அந்தக் குடும்பத்தைக் கவனிக்கும்படி சாடை காட்டினார்.

  அங்கே.. ஒரு அற்புதம் நிகழ்ந்துகொண்டிருந்தது!

  குடும்பத்தினருடன் இருந்த பெண் குழந்தை யார் பேசியதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. குடுகுடுவென ஓடினாள் அந்த மூதாட்டியை நோக்கி.

  தன் கையில் வைத்திருந்த இனிப்புத் தின்பண்டம் ஒன்றை அந்த மூதாட்டியின் கையில் திணித்தாள். “சாப்பிடுங்க பாட்டி.. நல்லா இருக்கும்..” என்று சொல்லிவிட்டு, திரும்ப ஓடிவந்தாள்.

  அந்தக் குழந்தை ஓடிய திசையை நோக்கிக் கும்பிட்டாள் அந்த மூதாட்டி.

  குரு, சிஷ்யனை நோக்கிப் பேசலானார்.. “செய்யும் செயல் பெரிதாகத்தான் இருக்க வேண்டும் என்பது இரண்டாம்பட்சம். சிறிய செயலாக இருப்பினும் அதை அன்புடன் உடனடியாகச் செய்வதுதான் சாலச் சிறந்தது. அதைத்தான் அந்தக் குழந்தை செய்திருக்கிறது..” என்றார்.

  குழந்தை கொடுத்துச் சென்ற தின்பண்டத்தை மகிழ்ச்சியோடு சாப்பிடத் தொடங்கினாள் அந்த மூதாட்டி.

  “அந்த சிறிய உணவால் அந்த மூதாட்டியின் காய்ந்த வயிறு நிரம்பிவிடப்போவதில்லைதான். ஆனால்.. அந்த உண்மையை அந்தக் குழந்தை அறியாது. தான் சாப்பிடுவதற்காக ஆசையோடு வாங்கி வைத்திருந்த ஒரு பொருளை அந்த நிமிடமே எடுத்துக்கொடுத்த அந்தக் குழந்தையின் செயலே பெரிதினும் பெரிதானது..” என்ற குரு, தன் மடியில் முடிந்துவைத்திருந்த நாணயங்களை எடுத்து சிஷ்யனின் கைகளில் கொடுத்தார் குரு.

  “இதைக் கொண்டு ஏதாவது உணவுப் பொருள் வாங்கி, அந்த மூதாட்டிக்குக் கொடுத்துவிட்டு வா..” என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai