Enable Javscript for better performance
9. மீடூ! மீடூ! மீடூ!- Dinamani

சுடச்சுட

  

  9. மீடூ! மீடூ! மீடூ!

  By ஜே.எஸ். ராகவன்.  |   Published on : 18th October 2018 10:00 AM  |   அ+அ அ-   |    |  

   

  பஞ்சாமிக்கு ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘சிவசாமி, சொல்லுடா? என்ன ஆச்சு? அந்தப் பொண்ணு என்ன சொல்லிச்சு? அவ பேரு புஷ்பாவோ? வெஸ்பாவோதானே? சீரியல் சம்பிரதாயப்படி, யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்னு, உங்கம்மா, அப்பா, அத்தை, தாத்தா, பாட்டின்னு அத்தனை பேர் தலைகளிலே அடிச்சு சத்தியம், கித்தியம் பண்ணிக் கொடுத்திருக்கியா?’

  ‘அண்ணா! அப்படி எல்லாம் சத்தியம் பண்ணமாட்டேன். புஷ்பா சமாசாரத்தை தாராளமா உங்ககிட்டே சொல்லலாம்’.

  ‘அடேய். அதுக்கு முன்னாடி மீ டூ, மீ டூ-ன்னு காதிலே விழுந்துண்டே இருக்கேடா? அது என்ன? இலக்கணப்படி மீ டூ சரியா? ஐ டூ சரியா? நம்மகிட்டே ஒரு ரென் அன்டு மார்ட்டின் கிராமர் புஸ்தகம் இருந்ததில்லே? ஷேக்ஸ்பியர்லேகூட ஏதோ இது மாதிரி வருமே?’

  ‘அண்ணா, அது மீ டூ இல்லே! யூ டூ. யூ டூ புரூட்டஸ்? செனட் படிகளிலே கத்தியால குத்தவந்த நண்பனைப் பார்த்து ஜூலியஸ் சீஸர் திகைத்துக் கேட்பார். ஆனா, இந்த மீ டூ வேற அண்ணா. லேடீஸ் சமாசாரம்’.

  ‘சிவசாமி, ஒரு ஜோஸ்யம் சொல்லட்டுமா? புஷ்பாவும் அதே சமாசாரம்தானே?’

  ‘அண்ணா! ஜில்லெட் பிளேடைவிட உங்க பிரெயின் ஷார்ப்பா இருக்கண்ணா. சரி, ‘மீ டூ’க்கு வரேன். மீ டூங்கிறது ஒரு மூவ்மெண்ட். ஒரு பெரிய புள்ளியின் பெயரைச் சொல்லி, கொஞ்சம் வருஷத்துக்கு முன்னே அவர் எங்கிட்டே பல்லை இளிச்சார்னு பறவையா சப்திக்கிறது. அதாவது, ட்வீட் பண்றது. பல்லை இளிச்சார்னு நான் ஆச்சாரமா சொன்னேன். அவ்விடத்திலே மேலே கிரகிச்சுக்க வேண்டியது!’

  ‘அந்த கிரகச்சாரம் எல்லாம் எதுக்குடா? அது சரி, அதை ஏன் ஆடி கழிச்ச அஞ்சாம் நாள் கோழி வெட்டிக் கும்பிட்ட கதையா, ஆற அமர அஞ்சு வருஷத்துக்கு முன்னே, ஆறு வருஷத்துக்கு முன்னேன்னு சொல்லுவானேன்’.

  ‘இப்பதான் தைரியம் வந்ததுன்னு அர்த்தம். மொத கல்லை ஒருத்தர் விட்டெறிஞ்சுட்டா அடுத்த கல்லை தெகிரியமா வீசற மாதிரின்னு வேணா வெச்சுக்கோங்களேன். சரி, புஷ்பா கதைக்கு வரேன். நேத்து, அவளை அயோத்யா மண்டபம் கிட்டே பாத்தபோது, எங்க ஹவுஸ் ஓனர் அண்ணாசாமியைப் பத்தி ஒரு முக்கியமான விஷயம் அப்படின்னா? அவருக்கென்னம்மா, வயசிலே பெரியவர். எப்பவுமே வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, புருவ ஜங்ஷனிலே விபூதிக் கீறலோட பளீர்னு இருப்பாரே. நல்லவராச்சேன்னேன். ‘த்தூ’ன்னு புஷ்பா துப்பினா. ஆம்பளைங்களுக்கு வேணா நல்லவரா இருப்பார். லேடீஸ்னா பொங்கின இட்லி மாவு மாதிரி. அப்படியே வழிவார். போன வருஷம் என்ன செஞ்சார் தெரியுமான்னு சில விஷயங்களைச் சொன்னாள். ஆனா, அதை உங்ககிட்டே சொல்லமாட்டேன். அதெல்லாம் ஆய்’.

  சிணுங்கலுடன் பஞ்சாமி, சிவசாமியைப் பார்த்தார்.

  ‘அண்ணா. நீங்க இவ்வளவு ஆவலா இருக்கிறதினாலே சொல்லிடறேன். அண்ணாசாமி வெள்ளையும் சொள்ளையுமா இருந்தாலும், மனசெல்லாம் ஊழலோடு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியாம். மூணு மணிக்கு ஸ்கூல் விட்டு சைக்கிளிலே வீடு திரும்பற ரெட்டை ஜடை மாணவிகளை ஆற அமரப் பார்த்துவிட்டுத்தான் மேலே நடையைக் கட்டுவாராம். வாடகை கேக்கற சாக்கில் புஷ்பாகிட்டே அநாவசியமா பேச்சு கொடுப்பாராம். சில்மிஷங்களைச் செய்வாராம். உன்னோட ஜாக்கெட்டெல்லாம் எங்கேம்மா தெக்கறே? அம்சமா அமைஞ்சிருக்குன்னு ஒருநாள் அவளைக் கேட்டாராம். அவ ஜாக்கெட்டை எங்கே தெச்சா இந்தக் கிழத்துக்கு என்ன வந்தது? புஷ்பாக்கு கையிலே விறகு கட்டையை எடுக்கணும்னு துறுதுறுத்ததாம்.

  பஞ்சாமி அதிர்ந்துபோனார். ‘இப்படி எல்லாம் ஒரு மனுஷன் ஒரு பொண்ணுக்கு இடைஞ்சல் தருவானா?’ என்று கேட்டார். சிவசாமி, இதைத் தட்டிக் கேக்கணும்டா. அண்ணாசாமி குடும்பஸ்தராச்சே. கௌரவமா இருக்க வேணாமா? ச்சே! பெருசுகளையே நம்பக் கூடாதுன்னு பொத்தாம் பொதுவா ஒரு அறிக்கை விடலாம்னு ஆரம்பிக்க இருந்தவர், தானும் ஒரு பெருசுதானே, எப்படி சேம் ஸைடிலே கோல் போடறதுன்னு வாயைப் பூட்டிக்கொண்டார்.

  இரண்டு வாரங்கள் கழித்து கொலு ஆரம்பித்த ஒரு நாள், ‘பெண்மை வாழ்கென்று என கூத்திடுவோமடா’ என்கிற பாரதி பாடலை முணுமுணுத்துக்கொண்டே, பஞ்சாமி செய்தித்தாளைப் படித்துக்கொண்டிருந்தார். அருகிலிருந்த சிவசாமி, ‘அண்ணா, ஆனால் அந்த முண்டாசுக் கவிஞர், இப்போ நாட்டையே கெடுக்கும் சீரியல் பெண்டிர்களின் நடை, உடை, பாவனை, செயல்பாடுகளைக் கவனிச்சா, அந்த வரிகளைத் திருத்தி எழுதினாலும் எழுதுவார் அண்ணா’ என்றான்.

  ‘ஏண்டா அப்படிச் சொல்றே. ஏதோ சில கிறுக்குகள் பணம் சம்பாதிக்க பெண்களை அப்படிச் சித்தரிச்சா, பெண்மையையே தூற்றணுமா என்ன?’

  ‘தெரியலே அண்ணா. ஆனா, மத்த மீ டூ மேட்டர்களை பத்தி தெரியாது. ஆனா, இந்த மீ டூ புஷ்பா மேட்டர் ஒரு வடிகட்டின பொய், பித்தலாட்டம். புஷ்பா ஒரு சூழ்ச்சியின் வடிவம். கிராதகி..’

  ‘என்னடா? என்ன ஆச்சு? அப்போ அண்ணாசாமி சார் வில்லன் இல்லியா? புஷ்பாதான் வில்லியா?’

  ‘ஆமாண்ணா. எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குன்னு தெரியறதே இல்லே. பாம்புகள் புத்துக்கு வெளியிலே கே. நாகராஜன்னு பிளாஸ்டிக்கிலே போர்டு போட்டு வெச்சிண்டு உள்ளே இருக்கிறதில்லே’.

  ‘அதென்னடா கே. நாகராஜன்? பாம்புக்கு இனிஷயில் உண்டான்ன?’

  ‘கே.ங்கிற சர்ப்பத்தோட இனிஷியல். கார்கோடகன்னு குடும்பப் பெயராக்கும். அதை விடுங்கண்ணா. புஷ்பா மேட்டரை பத்தி ரீ கேப் வேணுமா?’

  ‘மா-வா? சொல்லுடா. கேக்கக் காத்திண்டு இருக்கேன்’.

  ‘அண்ணா, இந்திரன் கெட்டதும் பெண்ணாலே. சந்திரன் கெட்டதும் பெண்ணாலேங்கிற மாதிரி, புஷ்பாங்கிற பொண்ணு கெட்டது இந்த சீரியல்களோட மகுடி மயக்கத்தாலே. எனக்கு எப்படித் தெரிய வந்ததுன்னு நீங்க கேக்கறதுக்கு முன்னாடியே சொல்லிடறேன். போன வாரம் அதிசயமா மீ டூ புகழ் அண்ணாசாமி வந்தார். ‘சார்? நீங்க இங்கே..’ன்னு இழுத்தேன். அதுக்கு. ‘சிவசாமி, சார். நீங்க புஷ்பா சைடு கதையைத்தான் இதுவரை கேட்டு என்னை ஒரு மாதிரியான ஆள்னு நினைச்சிண்டு இருந்திருப்பீங்க. ஆனா உங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். என்னோட ஒருநடை முப்பாத்தம்மன் கோவிலுக்கு வறீங்களா? அங்கே போய் பேசலாம்’ அப்படீன்னார். அதென்ன, முப்பாத்தம்மன் இந்த மாதிரி சந்தேகமெல்லாம் நிவர்த்தி செஞ்சு அருள்பாலிப்பாளான்னு குழம்பினேன்.

  ஏன் முப்பாத்தம்மன் சாட்சியாத்தான் பேசணுமா? இங்கே பேசக் கூடாதான்னு அவரைக் கேட்டேன். சார் வெள்ளிக்கிழமை இந்த நேரத்திலே புஷ்பா அங்கே இருப்பா. தயவு செய்து வரணும்னார். அவரைப் பார்க்கப் பரிதாபமா இருந்தது. சரின்னு அவர்கூட போனேன்.

  அங்கே நின்னுண்டு இருந்த புஷ்பா, எங்களைப் பார்த்து திகைத்தாள். அவள் நழுவுவதற்கு முன்னாடி, ‘புஷ்பா! நில்லு. நகரக் கூடாது. நீ செய்யறது மகா தப்பு. இந்த தெய்வ சன்னிதானத்திலே பொய் சொன்னா, அம்மன் உன்னைச் சும்மா விடமாட்டா. என்னைப் பத்தி நீ சிவசாமி சார், மத்தவங்ககிட்டே எல்லாம் சொன்னது நிஜமா? பொய்யா? பளிச்சுன்னு சொல்லணும்.’

  ‘அட! இதென்னடா டிரமாடிக்கா இருக்கு. நிறுத்தாம மேல போடா, சிவசாமி.’

  ‘அண்ணாசாமி பேசினதைக் கேட்டதும், புஷ்பா வெலவெலத்துப் போனாண்ணா. சொல்லு புஷ்பான்னு நானும் சாட்டையைச் சுழட்டினேன். அப்புறம்தான் விஷயம் வெளியிலே வந்தது அண்ணா’.

  ‘என்ன விஷயம்டா?’

  ‘சட்டுபுட்டுன்னு சொல்லிடறேன். ஏதோ சாலிவாகன சகாப்த காலத்திலேருந்து ‘சாகச சந்திரகாந்தா’ன்னு ஒரு சீரியல் நடக்கிறதாம். அதிலே வர சந்திரகாந்தா இப்படித்தானாம். ஒழுங்கா இருக்கிற ஒரு ஆணின் மேலே பழியைப் போட்டு, அவர் குடும்பத்தையே குலைத்து, சிதைத்து அவர் சொத்தை அடையணும்னு எபிசோடுக்கு மேல எபிசோடா மூச்சுவிடாம பிளான் பண்ணி அசத்தவராளாம். இந்த புஷ்பாவுக்கு அந்த சந்திரகாந்தாதான் ரோல் மாடலாம். ‘அம்மனுக்கு முன்னாலே இப்படி நடந்துக்கமாட்டேன்னு சூடத்தை அணைச்சு சத்தியம் பண்ணு. இல்லாட்டி பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் சூர்யகலாகிட்டே பிடிச்சுக் குடுத்திடுவேன்’னு மிரட்டினேன். ஒத்துண்டுட்டா. கோவிலிலே சாமியைத் தவிர யாருக்கும் நமஸ்காரம் பண்ணக் கூடாதுன்னு நான் தடுத்தும் எங்க ரெண்டு பேர் காலிலும் விழுந்தா. இதுதான் பின்கதைச் சுருக்கம், அண்ணா. சுபம்னு கார்டு போடலாம்னு நினைக்கிறேன்’.

  பஞ்சாமி மோவாயைத் தடவிக்கொண்டு கேட்டார். ‘ஏண்டா சிவசாமி, மீ டூன்னு பொம்மனாட்டிகளுக்கு இருக்கிற மாதிரி, ஆம்பளைகளுக்கு மீ டூன்னு ஒரு அமைப்பு இருந்தா, நான் மீன மேஷம் பாக்காம சேர்ந்துடுவேன். நீ?’

  ‘மீ டூ அண்ணா’ என்றான் சிவசாமி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai