Enable Javscript for better performance
63. காற்று மறைப்பு- Dinamani

சுடச்சுட

  

  63. காற்று மறைப்பு

  By பா. ராகவன்  |   Published on : 13th June 2018 10:00 AM  |   அ+அ அ-   |  

   

  கொழுகொழுவென்று இரண்டு பெரிய கூழாங்கற்களை ஒன்றன் மீது ஒன்று நிறுத்திவைத்தாற்போல் இருந்தான் அவன். உயரம் நாலரை அடிகூட இருக்காது. தொப்பையைத் தூக்கிக்கொண்டு அவனால் வேகமாக நடக்கக்கூட முடியாது என்று வினய்க்குத் தோன்றியது. முழங்கால் தெரியும்படி லுங்கியை உயர்த்திக் கட்டியிருந்தான். லுங்கியில் பாதியை மறைக்கும் நீளத்துக்கு தொளதொளவென்று ஒரு ஜிப்பா அணிந்திருந்தான். கழுத்தில் கிடந்த கறுப்புக் கயிறில் ஒரு தாயத்து இருந்தது. தனது மிகச் சிறிய கண்களை அடிக்கடி சுருக்கிச் சுருக்கிப் பேசினான். அப்படிக் கண்ணைச் சுருக்கும்போது அவனது காது மடல்கள் விரிந்து அடங்குவதை வினய் கண்டான்.

  ஒரு பொருள். எள்ளுருண்டை. மார்த்தாண்டம் இசக்கியப்பனுக்கு விதிக்கப்பட்ட அதனை இந்த முகமது குட்டி ஏன் கேட்கிறான்? இத்தனைப் பேர் உலவும் இந்த நெடுஞ்சாலைத் தேநீர்க் கடை வளாகத்தில் மிகச் சரியாகத் தன்னிடம் வந்து இடுப்பில் இருப்பதை எடுத்துக் கொடு என்று கேட்கிற மனிதன் யாராக இருப்பான் என்று வினய்க்குப் புரியவில்லை. முகமது குட்டியை ஒரு சித்தனாக அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. சிவன் மனத்தில் உட்காராவிட்டால் சித்து வராது என்று சொரிமுத்து சொல்லியிருந்தான். ‘எல்லா கடவுளும் ஒண்ணில்லியா அப்போ?’ என்று வினய் கேட்டதற்கு, ‘பாலுந்தயிரும் ஒண்ணுன்னு சொன்னா என்னா உண்மையோ அதான் இதும்’ என்று பதில் சொன்னான். சரியான பதில்தான். ஒன்றாகவும் ஒன்றல்லதாகவும் உள்ளவையும் இருக்கத்தானே செய்கின்றன?

  ‘இதோ பாருங்கள். எனக்கு நீங்கள் யாரென்று தெரியாது. அது தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நீங்கள் என்னிடம் எதிர்பார்ப்பதை நான் இப்போது செய்யக்கூடிய சூழ்நிலையில் இல்லை. ஒருவேளை நீங்கள் இதை என்னிடமிருந்து பறித்துச் செல்லக்கூடிய வல்லமை கொண்டவராக இருக்கலாம். என்னால் உங்களைத் தடுக்க முடியாது போகலாம். அதுவல்ல பிரச்னை. இன்னொருவரின் பொருளுக்கு நீங்கள் ஆசைப்படுவது சரியல்ல’ என்று வினய் சொன்னான்.

  அவன் சிறிது நேரம் தனது தாடியைத் தடவிக்கொண்டிருந்துவிட்டு, ‘இல்லை. நான் எடுத்துத்தான் தீர வேண்டும்’ என்று சொன்னான்.

  வினய்க்கு அச்சமாகிவிட்டது. மீண்டும் மனத்துக்குள் சொரிமுத்துவை நினைத்தான். கிழவன் ஏன் இப்படிப் படுத்துகிறான்? எங்கே போய்த் தொலைந்திருப்பான்? இப்படி ஒரு நெருக்கடியில் உதவாமல் இவன் என்ன குருநாதர்? அவன் வேகவேகமாக யோசித்தான். பேருந்து கிளம்பிவிட்டது. சட்டென்று அதன் முன்பக்கம் ஓடி ஏறிக்கொண்டான். ‘டேய், டேய்’ என்று கத்தியபடியே முகமது குட்டி தன் தொப்பையைத் தூக்கிக்கொண்டு பின்னாலேயே துரத்தி வந்து அவனும் தொற்றிக்கொண்டான். இதற்குள் முன்புற வழியாக ஏறிய வினய் ஒரே ஓட்டமாகப் பாய்ந்து பேருந்தின் பின் வழியே வெளியே குதித்தான். திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஒரு வேட்டை நாயின் வேகத்தில் பாய்ந்து, கிளம்பிக்கொண்டிருந்த இன்னொரு பேருந்தில் அவன் ஏறி ஜன்னல் வழியே பார்த்தபோது, அவன் ஏற வேண்டிய பேருந்து நெடுஞ்சாலையை அடைந்து வேகமெடுத்துவிட்டிருந்தது. முகமது குட்டி அதில்தான் இருந்தான்.

  அவனுக்கு மிகுந்த பதற்றமாக இருந்தது. காலியாக இருந்த ஓர் இருக்கையில் உட்கார்ந்து சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டான். அந்தப் பேருந்து எங்கே போகிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. யாரிடமாவது கேட்கலாம். அது அவசியமா என்றும் தெரியவில்லை. கிளம்பும்போது சொரிமுத்து கொடுத்த பத்து ரூபாய்த் தாள் பாக்கெட்டில் பத்திரமாக இருந்தது. இடுப்பைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். எள்ளுருண்டையும் இருந்தது. நடத்துநரிடம் விவரம் சொல்லி டிக்கெட் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தான். ஆனால் எங்கே என்று கேட்பது?

  குழப்பத்தில் சில நிமிடங்கள் போனது. பிறகு ஒரு முடிவுடன் எழுந்து நடத்துநரிடம் சென்று ‘இந்த பஸ் எங்க போகுது?’ என்று கேட்டான். அவனை ஏற இறங்கப் பார்த்த நடத்துநர், ‘நீ எங்க போகணும்?’ என்று பதிலுக்குக் கேட்டார்.

  ‘நான் மார்த்தாண்டம் போகணும்.’

  ‘எங்க ஏறின?’

  ‘அங்க டீக்கடைல வண்டி நின்னப்ப..’

  ‘பஸ்ஸு மாறிட்ட தம்பி. இது மதுரை போற வண்டி. அடுத்த ஸ்டாப்புல இறங்கிக்க’ என்று நடத்துநர் சொன்னார்.

  ‘இல்லே. மதுரைக்கு டிக்கெட் எவ்ளோ?’

  நடத்துநர் அங்கேயே விசில் ஊதி வண்டியை நிறுத்தினார். ‘இறங்கிக்க’ என்று சொன்னார். அதற்குமேல் அவருடன் என்ன பேசுவதென்று வினய்க்குப் புரியவில்லை. வண்டி நின்ற இடத்தில் இறங்கிக்கொண்டான். பேருந்து வந்த வழியிலேயே திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

  முக்கால் மணி நேரம் நடந்தபின்பு அவனுக்கு மிகவும் களைப்பாகிப் போனது. சாலையோரம் ஒரு மரத்தடியில் அமர்ந்தான். குடிக்க நீர் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. தாகம் கொன்றுகொண்டிருந்தது. ஆனால் கண்ணில் பட்ட தூரத்தில் கடைகள் ஏதுமில்லை. நீர் நிலையும் எதுவும் தென்படவில்லை. ஆளற்ற நெடுஞ்சாலை ஓர் அசுரன் வீழ்ந்து கிடப்பது போல நீண்டு கிடந்தது. அவ்வப்போது சில வாகனங்கள் சத்தமுடன் கடந்து போனது தவிர, நடமாட்டம் ஏதுமின்றி வெறும் வெளியாக இருந்தது.

  இப்போது அவன் மீண்டும் கண்ணை மூடி சொரிமுத்துவை நினைத்தான். எண்ணி ஐந்து விநாடிகளில் சொரிமுத்து அவனுக்கு பதில் சொன்னான்.

  ‘எங்க போயிட்டிங்க நீங்க? எத்தன தடவை கூப்டுவேன்? காதுலயே விழலியா?’

  ‘கூப்ட்டியா? எப்ப?’

  ‘இப்ப ஒரு மணி நேரம் முன்ன. இங்க எனக்குப் பெரிய சிக்கல்.’

  ‘என்னாது?’ என்று சொரிமுத்து கேட்டான்.

  ‘முகமது குட்டின்னு ஒருத்தன் என்கிட்டே வந்து எள்ளுருண்டைய குடுன்னு கேட்டான்.’

  சொரிமுத்து சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு, ‘நீ என்ன சொன்ன?’

  ‘உங்கள கேக்காம அதெல்லாம் முடியாதுன்னு சொன்னேன்.’

  ‘ஒத்துக்கிட்டானா?’

  ‘என்னால அதை உன்கிட்டேருந்து எடுத்துக்க முடியும்னு சொன்னான். நான் பயந்தே போயிட்டேன். தப்பிச்சி ஓடி, இப்ப எங்கயோ இருக்கேன். எந்த இடம்னுகூடத் தெரியலை.’

  அவன் மீண்டும் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். வினய் மீண்டும் கேட்டான், ‘நான் கூப்ட்டப்ப நீங்க ஏன் வரலை?’

  ‘நீ கூப்ட்டது நெசம்னா, அது எனக்குக் கேக்கலைன்றதும் நெசம்.’

  ‘அது எப்படி கேக்காம போகும்?’

  ‘கேக்கலை. அதான் சங்கதி. நீ இருந்த இடத்துக் காத்து செஞ்ச சதி.’

  ‘புரியலை.’

  ‘காத்துதாண்டா எல்லாம். உன் எதிர்ல இருந்தவன் எப்படி இருந்தான்?’

  ‘ரொம்ப குள்ளம். ரொம்ப குண்டா இருந்தான். துலுக்கன். லுங்கி கட்டிண்டு, தாடி வெச்சிண்டு... பேர் கேட்டப்போ முகமது குட்டின்னு சொன்னான்.’

  ‘சரிவிடு. தப்பான ஆளு. அதான் தப்பான காத்து. உருண்ட பத்திரமா இருக்குதில்ல?’

  ‘ஆமா’ என்று இடுப்பைத் தொட்டுப் பார்த்தபடி சொன்னான்.

  ‘அப்பஞ்செரி. நாஞ்சொல்லுறத செய்யி. எங்க நிக்குற நீ?’

  ‘மெயின் ரோட்ல. பைபாஸ்.’

  ‘காலுங்கீழ என்ன மண்ணு இருக்குது?’

  அவன் குனிந்து பார்த்துவிட்டு, ‘செம்மண்’ என்று சொன்னான்.

  ‘ஒரு பிடி அள்ளு.’

  வினய் அவன் சொன்னதைப் போலச் செய்தான்.

  ‘எடுத்தியா?’

  ‘உம்.’

  ‘சரி. அத ரெண்டா பிரிச்சி பீச்சாங்கையில பாதிய போடு.’

  வினய் எடுத்த மண்ணை இரு கரங்களிலுமாகப் பிரித்துக்கொண்டான்.

  ‘செஞ்சியா?’

  ‘உம்.’

  ‘செரி. எண்பது செகிண்டு சும்மா இரு. நான் ஒண்ணு பண்றேன்’ என்று சொல்லிவிட்டு சொரிமுத்து அமைதியானான்.

  வினய் காத்திருந்தான். சொரிமுத்து அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்த தியான மந்திரங்களில் ஒன்றை மனத்துக்குள் உச்சாடனம் செய்யத் தொடங்கினான். கண்ணை மூடி நின்றபடி அவன் மந்திர உச்சாடனத்தில் ஈடுபடத் தொடங்கிய சில விநாடிகளில் அவனுக்கு உலகம் மறந்துபோனது. சட்டென்று யாரோ தன்னைத் தொடுவதுபோலிருக்க, மந்திரத்தைப் பாதியில் நிறுத்திவிட்டுக் கண்ணைத் திறந்தான்.

  எதிரே முகமது குட்டி நின்றிருந்தான். வினய் அலறிவிட்டான். அவன் கரங்களில் இருந்த மண் அவனையறியாமல் கீழே விழுந்தது. அரைக் கணமும் தாமதிக்காமல் அங்கிருந்து அவன் ஓடத் தொடங்கினான்.

  ‘டேய் ஓடாதே.. தம்பி டேய்’ என்றபடியே முகமது குட்டி அவன் பின்னால் ஓட்டமும் நடையுமாக வரத் தொடங்க, இதென்ன தொல்லை என்று வினய்க்கு எரிச்சலாக வந்தது. ஒரு கணம் யோசித்துவிட்டுச் சட்டென்று நின்றான். குனிந்து ஒரு கருங்கல்லை எடுத்தான்.

  ‘கிட்ட வந்தேன்னா தலையப் பொளந்துடுவேன்’ என்று முகமது குட்டியைப் பார்த்துக் கத்தினான்.

  துரத்திக்கொண்டு வந்த முகமது குட்டி இப்போது சிரித்தான். வினய் சட்டென்று கண்ணை மூடி மீண்டும் சொரிமுத்துவை அழைக்கப் பார்த்தான். பதில் வரவில்லை. ஐயோ என்று ஆகிவிட்டது அவனுக்கு. தனக்குத் தெரிந்த குறைந்த அளவு சித்து அறிவைக் கொண்டு இவனை ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்தான். ‘ஒனக்கு மந்திர ஜப வேகம் ரொம்பக் கம்மியா இருக்குதுடா. மனசு இன்னும் முழுசா குவியலை. கோடி, பத்து கோடி, நூறு கோடி உச்சாடனம் பண்ணி உருவேத்தி வெச்சவனுகல்லாம் இருக்கானுக. நீ இன்னும் நாப்பதாயிரம் தாண்டல பாரு. அதாங் கஸ்டப்படுற’ என்று சொரிமுத்து சொன்னது நினைவுக்கு வந்தது.

  இதற்குள் முகமது குட்டி அவன் அருகே வந்துவிட்டிருந்தான். சிரித்தான். ‘எள்ளுருண்ட தர்றியா?’ என்று மீண்டும் கேட்டான்.

  ‘முடியாது. போயிடு.’

  ‘அப்ப சரி’ என்று சொல்லிவிட்டு வினய் சற்றும் எதிர்பாராதவிதமாக அவன் திரும்பிச் செல்ல ஆரம்பித்தான். சிறிது நேரம் அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த வினய்க்கு சட்டென்று பயம் வந்து இடுப்பைத் தொட்டுப் பார்த்தான். முடிந்துவைத்த இடத்தில் அது இருந்தது. இருந்தாலும் சந்தேகம் தீர அவன் முடிப்பை அவிழ்த்து உருண்டையை எடுத்தான்.

  எள்ளுருண்டை இல்லை. ஒரு கமர்கட்டு இருந்தது.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai