ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தைக் கொண்டாடும் விதமாக, ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் 5-ம் திருநாளான ஆகஸ்டு 1-ம் தேதி காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது. அப்போது ஆடிப்பூர பந்தலுக்கு ஸ்ரீபெரியாழ்வார் எழுந்தருளி ஸ்ரீபெரியபெருமாள், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீஸ்ரீநிவாஸப் பெருமாள், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன், ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகள் ஆகியோருக்கு மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் இரவு ஐந்து கெருட சேவை நடைபெற்றது. ஏழாம் திருநாளான புதன்கிழமை இரவு கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருநாளான வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்று, தனித்தனி தோளுக்கினியான்களில் புறப்பாடு நடைபெற்று திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேரை நான்கு ரத வீதிகளின் வழியே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
தேர் நிலைக்கு 11.20 மணிக்கு வந்தடைந்தது. வரலாறு காணாத பாதுகாப்பு: தேரோட்டத்தையொட்டி வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக 3 மிரட்டல் கடிதங்கள் வந்தது. இதனையடுத்து தேரோட்டம் நடைபெறும் ரத வீதிகள், முக்கிய இடங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீஸார் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம், கடந்த இரு நாட்களாக ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டு அவரது நேரடி மேற்பார்வையில் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் சிறப்பாக செய்திருந்தார்.
தேரோட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி முத்துராஜ், அதிமுக மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் ஏ.மீராதனலட்சுமி முருகன், மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா, வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவி கனகுஅம்மாள் சுப்புராஜ், கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், தென்மண்டல காவல் துறைத் தலைவர் முருகன், துணைத் தலைவர் ஆனந்தகுமார் சோமானி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாலா, கோகுல்தாஸ், மாவட்ட நீதிபதி ரா.தாரணி, முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அரசு போக்குவரத்துக் கழகம் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகளை இயக்கியது.ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சி.சின்னையா தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...