மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் வெற்றி: இபிஎஸ் நன்றி

‘மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கோவையில் தொடங்கிய முதல்கட்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு...
AIADMK Edappadi palanisamy
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிENS
Published on
Updated on
3 min read

‘மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கோவையில் தொடங்கிய முதல்கட்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்கிற உயரிய லட்சியத்துடன், மக்கள் விரோத ஸ்டாலினின் தோல்வி மாடல் ஆட்சியை அகற்ற கோவையில் ஜூலை 7 ஆம் தேதி தொடங்கிய எழுச்சிப் பயணத்திற்கு இமாலய வெற்றியை தொடர்ந்து வழங்கி வரும் தமிழக மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

"மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்கிற எனது முதற்கட்ட புரட்சிப் பயணத்தை, மக்கள் எழுச்சிப் பயணமாக மாற்றி, அதை இமாலய வெற்றிப் பயணமாக்கியதில் முழு பங்கும் தமிழக மக்களாகிய உங்கள் அனைவரையுமே சாரும். உங்கள் அனைவருக்குமே தெரியும், எனது முதற்கட்டமான இந்த எழுச்சிப் பயணத்தை ஜூலை 7 ஆம் தேதி கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆரம்பித்து, நேற்று ஜுலை 19 ஆம் தேதி அன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வரை பிரச்சாரப் பயணத்தை தொடர்ந்து வருகிறேன்.

கோவை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 31 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றிகரமாக சுமார் 12.5 லட்சம் மக்களை சந்தித்திருக்கிறேன். நான் சென்ற இடங்களில் எல்லாம் என்னை ஆர்வமுடன் சந்தித்த விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள், வேலையில்லாப் பட்டதாரிகள், குடியிருப்போர் நலச் சங்கத்தினர், வியாபாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறு - குறு தொழில் முனைவோர், மருத்துவர்கள், பாட்டாளி வர்க்கத்தினர், மாணவர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் என்று அனைவருமே, 52 மாத கால மக்கள் விரோத ஸ்டாலினின் தோல்வி மாடல் ஆட்சியில், அவர்கள் சந்தித்து வந்த வேதனைகளை எடுத்துரைத்தனர்.

இவர்கள் எல்லோரும், "நீங்கள் எங்கள் வீட்டுப் பிள்ளை, உங்களைச் சந்தித்ததில் ஆறுதல் அடைகிறோம். எங்கள் வேதனைகளுக்கு எல்லாம் விடிவு காலம் வந்துவிட்டது" என தங்களின் வலிகளை மறைத்துக்கொண்டு, உளமார வரவேற்று என்னை அன்பில் நெகிழச் செய்தார்கள். மக்களின் ஆற்றல் மிக்க ஆதரவில் மூழ்கிப்போனேன். குறிப்பாக விழுப்புரத்தில் ஒரு தாய் தழுதழுத்த குரலில் "அண்ணா, நீங்க மீண்டும் எப்ப முதல்வரா வருவீங்க?" என கூட்டத்தில் இருந்து என்னைப் பார்த்துக் கேட்டபோது, 2026-ல் அனைத்திந்திய அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவே உணர்ந்தேன்.

எம்.ஜி.ஆர் தோற்றுவித்த, ஜெயலலிதா வளர்த்த 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்கிற மாபெரும் ஜனநாயக இயக்கம், தமிழக மக்களின் நாடி நரம்புகளில் ரத்தவோட்டமாகக் கலந்திருப்பதை மீண்டும் ஒருமுறை அனுபவப் பூர்வமாகக் கண்டு மகிழ்ந்தேன். "மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்கிற இந்த எழுச்சிப் பயணம் எனக்கும், என்னைப் போன்ற கோடிக் கணக்கான அதிமுக ரத்தத்தின் ரத்தங்களுக்கும் உணர்த்தியது ஒன்றே ஒன்றுதான்.

அது என்னவென்றால்...

* ஆட்சிக்கு வந்த இந்த 52 மாதங்களில் மக்கள் விரோத ஸ்டாலின் தோல்வி மாடல் ஆட்சி, பல பொய்களை மட்டுமே கூறி மக்களை மடைமாற்றம் செய்து, வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது.

* "உங்களுடன் நான் - எங்களுடன் நீங்கள்"’ என்றெல்லாம் வெற்று விளம்பரங்கள் மட்டுமே செய்து, இந்த மக்கள் விரோத ஸ்டாலின் தோல்வி மாடல் ஆட்சி, தன்னுடைய பித்தலாட்டத்தை தொடர்கிறது.

* தங்களின் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்கள் நலத்தை தள்ளிவைத்துவிட்டு, தமிழ் நாட்டைக் கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் பொம்மை முதல்வர் ஸ்டாலினும், அவரது அமைச்சரவை சகாக்களும்.

* நகராட்சி சொத்துக்களை கொள்ளையடிக்கும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, நமது எழுச்சிப் பயணத்தை தவறாக சித்தரித்து - சம்மந்தியை மீட்போம், சம்பாதித்த பணத்தைக் காப்போம், மக்களை மறப்போம், தமிழ் நாட்டை விற்போம், மகனைக் காப்போம் என என் மீது அவதூறு பரப்பி இருக்கிறார்.

* ஆனால், உண்மை என்னவென்றால், ‘மந்தி தனது குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்றார்போல், ஸ்டாலின், அமைச்சர் நேருவை விட்டு அறிக்கை என்ற பெயரில் ஆழம் பார்த்திருக்கிறார். அதாவது, நேருவின் ஆழ்மனதில் ஸ்டாலினைப் பற்றி உள்ள - ‘மருமகனைக் காப்போம் - மகனைக் காப்போம், ரியல் எஸ்டேட் மூலமாக தமிழ் நாட்டை கூறுபோட்டு விற்போம்,

* மக்களை மறப்போம், போதைப் பழக்கத்தை பரப்புவோம், இயற்கை வளங்களை சுரண்டுவோம், பல்லாயிரம் கோடிக்கணக்கில் கொள்ளை அடிப்போம், சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்து ஊழல் பணத்தை தமிழ் நாட்டிற்கு கொண்டு வருவோம்’ என்ற அவர்களின் எண்ணத்தைக் கூறும் விதமாகவே அமைச்சர் நேருவின் பேச்சு உள்ளது.

* பொம்மை முதல்வர் ஸ்டாலினுடைய பொய்யான வாக்குறுதிகளையும், திறனற்ற ஆட்சியையும் கண்டு, உண்மை முகத்தை அறிந்து உங்கள் மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் அனைவரும் உறுதி ஏற்றுவிட்டார்கள். தமிழக மக்களின் உள்ளம் திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட்டுவிட்டது. அவர்கள் அடைந்திருக்கும் தாழ்வைப் போக்க சபதமேற்றுவிட்டது.

* "மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்" என்கிற என்னுடைய முதற்கட்ட எழுச்சிப் பயணத்தின் மூலம், நான் உணர்ந்ததை, உங்கள் தோல்வி மாடல் அரசுக்கு ஒரு குறள் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு"

இவற்றை எல்லாம் நீங்கள் தமிழகத்துக்குச் செய்யவில்லை என்பதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் குற்றச்சாட்டு!

நீங்கள் என்ன மடைமாற்றம் செய்தாலும் சரி, எனது எழுச்சிப் பயணம் தொடரும். மக்கள் ஆதரவு இன்னும் பெருகும். 2026-இல் அதிமுக அமோக வெற்றி பெற்று, அனைத்து மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் நல் ஆட்சியை வழங்குவோம்.

தவறு செய்த தற்போதைய ஆட்சியாளர்கள் அனைவரும் அதற்கு தக்க பதில் சொல்ல வேண்டிய நிலை வரும். மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்! மக்கள் விரோத ஸ்டாலின் தோல்வி மாடல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்! என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com