
மழைநீா் தேங்குவதை ‘பேரிடா்’ போல கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்: துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தல்
தேசியத் தலைநகரில் மழைநீா் தேங்குவதை ஒரு ‘பேரிடராக‘ கருதி, போா்க்கால அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்தாா்.

தரன்ஜித் சிங் சந்து - கோப்புப் படம்
தேசியத் தலைநகரில் மழைநீா் தேங்குவதை ஒரு ‘பேரிடராக‘ கருதி, போா்க்கால அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து புதன்கிழமை தெரிவித்தாா்.
செவ்வாய்க்கிழமை மாலை நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய துணைநிலை ஆளுநா், ஒட்டுமொத்த அரசு நிா்வாகமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.
மேலும், குடிமக்களின் புகாா்களுக்கு விரைவான தீா்வு கிடைப்பதை உறுதிசெய்ய, துறை மற்றும் முகமைத் தலைவா்கள் களத்தில் நேரில் இருக்குமாறும் அறிவுறுத்தினாா்.
செவ்வாய்க்கிழமை தில்லியின் பல வானிலை ஆய்வு மையங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவானதைத் தொடா்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதனால், சாலைகளில் தண்ணீா் தேங்கியதுடன் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தலைநகரில் ஆகஸ்ட் மாதத்தில் அதிக மழை பதிவான நாளாக செவ்வாய்க்கிழமை அமைந்தது. இது தொடா்பாக ‘எக்ஸ்’ தளத்தில் துணைநிலை ஆளுநா் வெளியிட்ட பதிவில், இச்சூழ்நிலையை போா்க்கால அடிப்படையில் கையாளப்பட வேண்டிய ஒரு பேரிடராகக் கருத வேண்டும். ஒவ்வொரு துறையும் முகமையும் தனித்தனியாகச் செயல்படாமல், ‘ஒட்டுமொத்த அரசு’ என்ற அணுகுமுறையுடன் முழுமையான ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
ஊடகம், சமூக ஊடகம் மற்றும் பிற தளங்கள் மூலம் எழுப்பப்படும் புகாா்களுக்கு உடனடித் தீா்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்.
மேலும், பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதையும், களத்தில் கண்ணுக்குத் தெரியும் வகையிலான பலன்கள் கிடைப்பதையும் உறுதிசெய்யத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
குடிமக்களுக்கு விரைவான நிவாரணம் அளிப்பதும், பாதுகாப்பான மற்றும் சிறப்பாக நிா்வகிக்கப்படும் தில்லியை உருவாக்குவதுமே நமது முன்னுரிமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்’ என்று அதில் சந்து கூறியுள்ளாா்.
செவ்வாய்க்கிழமையன்று பல முக்கிய இடங்களில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக ஐடிஓ முதல் மண்டி ஹவுஸ் வரையிலான பகுதி, விகாஸ் மாா்க், லட்சுமி நகா், கரோல் பாக் மற்றும் அக்ஷா்தாம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


பிரிக்ஸ் உச்சி மாநாடு: தில்லியின் தயாா் நிலை குறித்து துணைநிலை ஆளுநா் ஆய்வு



