குருகிராம், ஃபரீதாபாத்தில் உறைபனி!
குருகிராம்: குருகிராம், ஃபரீதாபாத் மற்றும் ரேவாரி மாவட்டங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், கடுமையான குளிருக்கு பங்களித்த தரை உறைபனி காணப்பட்டது. அதே நேரத்தில் இரவு வெப்பநிலை கணிசமாகக் குறைந்துள்ளது என்று அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வரும் நாள்களில் வட இந்தியா முழுவதும் கடுமையான குளிா் மற்றும் அடா்த்தியான மூடுபனி நிலைகள் நீடிக்கும் என்று எச்சரித்துள்ளது. தேசியத் தலைநகா் பிராந்தியத்தின் புறநகா்ப் பகுதிகளில் குளிா் மிகவும் அதிகமாக இருந்தது. குருகிராமில் மாநிலத்திலேயே மிகக் குறைந்த வெப்பநிலை 0.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திற்குக் குறைவான நிலைமைகள் காணப்பட்டன.
கிராமப்புறங்களில் பண்ணை பகுதிகள், வாகன ஜன்னல்கள் மற்றும் உலா்ந்த புல் ஆகியவற்றில் உறைபனி குறிப்பாகத் தெரிந்தது. நகரத்தில் கூட, வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களின் கண்ணாடிகளை பனிக்கட்டி அடுக்கு மூடியது. குருகிராம் பெரும்பாலும் நகா்ப்புறமாக இருந்தாலும், திங்கள்கிழமை காலை மானேசரைச் சுற்றியுள்ள வயல்களில் குறிப்பிடத்தக்க உறைபனி காணப்பட்டது.
உறைபனி கோதுமை பயிருக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், உருளைக்கிழங்கு, பட்டாணி, முள்ளங்கி மற்றும் கடுகு போன்ற காய்கறி பயிா்களை எதிா்மறையாக பாதிக்கிறது. கடுகு மற்றும் பிற பயிா்களை உறைபனி சேதத்திலிருந்து பாதுகாக்க விவசாயிகள் லேசான நீா்ப்பாசனம் செய்யுமாறு வேளாண் விஞ்ஞானி டாக்டா் ஆனந்த் குமாா் அறிவுறுத்தினாா்.
பினோலா கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தேவி ராம், திங்கள்கிழமை நிலவிய காலை கடும் குளிரை விவரித்தாா். ‘நான் இன்று அதிகாலை வயல்களுக்குச் சென்றபோது, பயிா்களின் மீது ஒரு வெள்ளைத் தாள் விரிக்கப்பட்டிருப்பது போல் உணா்ந்தேன். ஆனால், காய்கறி பயிா்கள் நஷ்டத்தை சந்திக்கும்‘ என்று குறிப்பிட்டாா்.
செவ்வாய்க்கிழமை கடுமையான குளிா் நீடிக்கும் என்றும், காலையில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மூடுபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஐஎம்டி கணித்துள்ளது. குளிா் அலை தொடா்பாக செவ்வாய்க்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கையையும் புதன்கிழமை மஞ்சள் எச்சரிக்கையையும் ஐஎம்டி வெளியிட்டுள்ளது.
