முகவரியுடன் RK-வின் ஜோதிடப் பயணம்

கடந்தகால ஜோதிட சாஸ்திரத்துக்கும் நிகழ்கால ஜோதிடத்துக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, ஜோதிட சாஸ்திரத்தில் தனது 25 ஆண்டுகால அனுபவத்தைக் கலந்து.....
முகவரியுடன் RK-வின் ஜோதிடப் பயணம்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

இது, மனிதனுக்காக ஐயன் திருவள்ளுவர் சொன்னது.

ஒருவன் ஒரு செயலை எப்படிச் செய்துமுடிப்பான் என்று ஆய்தறிந்து அவனிடம் அந்தச் செயலை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் இக்குறளின் பொருள்.

அதாவது, ஒரு செயல் நல்லவிதமாக செயல்படுத்தப்பட வேண்டுமானால், அச்செயலை செய்துமுடிக்கும் திறன் படைத்த ஒருவரிடம் நம்பிக்கையுடன் விட்டுவிட வேண்டும் என்பதே இதன் உள்கருத்து.

அந்த வகையில், நம்முடைய தினமணி ஜோதிடப் பகுதியில் புதிதாகத் தொடங்கியிருக்கும் வாழ்வியல் பயணம் என்ற தொடரை வாழ்வியல் வழிகாட்டி RK எழுதுகிறார்.

கடந்தகால ஜோதிட சாஸ்திரத்துக்கும் நிகழ்கால ஜோதிடத்துக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, ஜோதிட சாஸ்திரத்தில் தனது 25 ஆண்டுகால அனுபவத்தைக் கலந்து, இந்த வாழ்வியல் பயணத்தில் தன்னோடு வாசகர்களாகிய நம்மையும் அழைத்துச் செல்லப்போகிறார்.

தொடக்கத்தில் குறிப்பிட்ட குறளின் பொருளுக்கு ஏற்ற வகையில், மனிதனுடைய வாழ்வியல் பயணம் சிறப்பாக அமைவதற்கான அடிப்படைக் காரணங்களை எடுத்துச் சொல்லக்கூடிய வகையில் அறிவும் அனுபவமும் பெற்றவர் வாழ்வியல் வழிகாட்டி RK.

இதோ, நமக்கான இந்த வாழ்வியல் பயணத்தை தனது அனுபவங்களுடன் தொடங்குகிறார்… வாருங்கள் அவருடன் இணைந்து பயணிப்போம்…

*

காரணம் புரியாமல் வரும் திடீர் சந்தர்ப்பங்களையே கடவுள் சித்தம் என்கிறோம். அதுதான் எனது 21-வது வயதில் நடந்தேறியது.

தமிழகத்தில், திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைக்கு அருகே உள்ள சிற்றூர் சடையகவுண்டன்புதூர். ஜோதிட பின்புலம் இல்லாத எளிய விவசாயக் குடும்பம். எனது குடும்பத்தில், எனது தந்தை மட்டும் ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டு கற்க முனைந்தார். ஆனால், அதை ஒரு தொழிலாக ஒருபோதும் அவர் ஏற்கவில்லை. அருகில் இருந்த பார்த்தால், எனக்கும் ஜோதிடத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

கல்லூரிப் படிப்பு முடித்து ஆசிரியர்ப் பணியில் இருந்தபோது, எனது வாழ்வின் புது அத்தியாயத்துக்கு பிள்ளையார் சுழியாக ஒரு ஜோதிடர் என் வாழ்வில் நுழைவார் என்றும், அதுவே என் வாழ்வின் இறுதிவரைக்கும் நிலைத்துப்போகும் என்பதையும் நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

நான் குறிப்பிடும் அந்த ஜோதிடர் எதிர்வீட்டில்தான் குடியிருந்தார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, அவர் வாய் மொழியால் சொல்வதை எழுதித் தரும் உதவியை செய்துகொடுத்தேன். அந்தச் சமயத்தில், அவரிடம் இருந்த ஒரு ஜோதிட நூலை படிக்கக் கேட்டும் அது எனக்குத் தரப்படவில்லை.

ஏன் மறுக்கப்பட வேண்டும்? அதில் என்ன ரகசியம் இருக்க முடியும்? மனதுக்குள் பல கேள்விகள். அத்தகைய கேள்விகளுடனேயே காலம் என்னை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தியது. காலணி வாங்கப் போன நான், ஒரு புத்தகத்தோடுதான் வீடு திரும்பினேன்.

அந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்ததன் ரகசியம் ஒருநாள் எனக்குப் புரிந்தது. ஜோதிடமே என் சுவாசமாக, அதுவே என் வாழ்க்கையாக இருக்கப்போகிறது என்பதை அந்தப் புத்தகம்தான் எனக்கு உணர்த்தியது. இது முயற்சியால் நடந்தது அன்று; இறைவனின் சித்தமே காரணம். இனி, ஜோதிடமே என் வாழ்க்கை என்பதை மனமும் உறுதி செய்துகொண்டது.

சில குருமார்களின் துணை கொண்டு ஜோதிடத்தின் அடிப்படைப் பாடங்களைக் கற்கும் வாய்ப்பு அமைந்தது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஜோதிட நூல்களை வாங்கிப் படித்து ஆய்வு செய்தேன். அந்நாட்களில் சரியான நூல்களை தேர்ந்தெடுக்கும் அளவில்கூட எனக்குப் பக்குவம் இருந்திருக்கவில்லை.

ஜோதிட ஆய்வில் நான் எடுத்துக்கொண்ட விடாமுயற்சிகள் விரைவில் எனக்குத் தெளிவை கொடுத்திருக்க வேண்டும். மாறாக, குழப்பங்களே பதிலாக அமைந்தது என்பதுதான் உண்மை.

எனக்கென ஒரு அலுவலகமும், அங்கு வாடிக்கையாளர்களைச் சந்திப்பதும் என வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்த சூழல் அது.

தொடர் குழப்பங்களால் ஜோதிடம் சலித்தது. ஆனால், மனம் மட்டும் சலிக்கவில்லை. மாறாக, ஜோதிடத்தில் மறைந்துள்ள நமக்குப் புரியாத ஏதோ ஒன்று இருக்கிறது என்று அதைத் தெரிந்துகொள்ளும் நோக்கில் எனது தேடலை தீவிரமாக்கினேன். ஆனால், பாதை மட்டும் அகப்படவில்லை. கொதிக்கும் மனநிலையை இறக்கி வைக்கவும் ஆளில்லை.

மனம் தளர்ந்த அந்தக் கால இடைவெளிகளில் ஆன்ம கதவுகள் திறக்கப்பட்டன. பகவத் கீதையை கேட்கும் வாய்ப்பு கிட்டியது. புராண, இதிகாசங்களில் உள்ள ஆழமான விஷயங்களை உள்வாங்க முடிந்தது. வேதாந்த விசாரணையால் என் மனம் நிறைந்திருந்தது. எதையும் பற்றிக்கொள்ளும் பக்குவத்தைப் பெற்றிருந்தது. அப்போதுதான், குமாரசுவாமியத்தின் தரிசனம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்பது இறைவன் சித்தமே.

ஆம், குமாரசுவாமியம் என்ற நூலே ஜோதிடத்தின் ஆதி நூலாக இருந்திருக்கக்கூடும் என்பதை சமீபத்தில்தான் என்னால் முழுமையாக உணர முடிந்தது.

ஜோதிடத்தின் கடவுள் முருகப்பெருமானால், அகத்திய முனிவருக்கு திருச்செந்தூர் தலத்தில் அருளப்பட்டதே குமாரசுவாமியம். இதுவே, அனைத்து ஜோதிட நூல்களுக்கும் மூல நூல் என்பது எனது அசைக்க முடியாத கருத்து. விருட்சத்தை விதைக்குள் சுருக்கி வைத்திருக்கும் ரகசியம்போலவே, குமாரசுவாமியத்தின் செய்யுள்கள் என்னை பிரமிக்க வைத்தன.

இந்த நிலையில், என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நேர்ந்தது. முதன்முதலாக ஒரு ஜோதிட கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அது. 80 வயதைக் கடந்த மஹா பெரியவர் முன்னிலையில் அந்த ஜோதிட சபை கூடியது. குமாரசுவாமியத்தில் இருந்து ஒரு செய்யுள் வாசிக்கப்பட்டது. அதன் பொருள் விளக்கப்பட்டபோது, அதற்கு முன் எனது ஜோதிட ஆய்வுகள் அனைத்தும் ஒன்றுமே இல்லை என்பதுபோல் உணர்ந்தேன். பிறகு, ஆசிரியரை இனம் கண்டு சேர்ந்தேன். அவரும் எனக்கு சில செய்யுங்களை வாசித்து பதம் பிரித்து விளக்கங்களை எடுத்துக் கூறினார்.

குமாரசுவாமியம் செய்யுள்களை மனனம் செய்ய ஜோதிட தமிழ் நிகண்டும், பதம் பிரித்து வாசிக்க குருவின் துணையும் வேண்டும் என்ற அளவில் மட்டும் எனக்குப் புரிதல் இருந்தது.

80 வயது மதிக்கத்தக்க மஹா பெரியவரை சந்திக்கும் வாய்ப்பும், அவரது முழு ஆசிர்வாதமும் எனக்குக் கிடைத்ததை இறை தரிசனமாகவே இன்றும் பார்க்கிறேன். அவருடனான உரையாடல்கள், அவரின் ஞான உபதேசங்கள் என் மனதை உளிகொண்டு செதுக்கிப் பக்குவப்படுத்தின.

குறுகிய காலமே நீடித்தது எங்கள் சந்திப்பு. ஒருநாள் அந்த வேதாந்தியின் மரணச் செய்தியுடன் பொழுது எனக்கு மட்டும் கருப்பாக விடிந்தது. என் உயிர் துடிதுடித்ததும் முதன்முதலாக அன்றுதான்.

சிறிது கால இடைவெளியில் நான் சந்தித்த ஆசிரியருடனா குரு-சிஷ்ய சம்பாஷணையும் அரிதாகப் போனது. ஆசிரியரின் சூழ்நிலை, தூரம், பொருளாதாரம் என பல்வேறு விஷயங்கள் கைகோர்த்து வழிமறித்தன. எல்லைகளைத் தாண்ட முடியாமல் கண்டுண்டேன். காற்று என் வாழ்வில் எதிர் திசையில் அடிப்பதாக உள்ளூர தோன்றியது. வைராக்கியத்தை மட்டும் மனத்தளவில் பலப்படுத்திக்கொண்டேன்.

ஞானகுருவின் ஆசியுடன், நிகண்டுகளையும் துணைக்கு வைத்துக்கொண்டு குமாரசுவாமியம் செய்யுள்களை மனனம் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. செய்யுள்களின் பொருள் விளங்காவிடினும், முதலில் அவற்றை மனனம் செய்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

தொடக்கத்தில், ஓரிரு செய்யுள்களை பதம் பிரித்து மனனம் செய்வதற்கே வாரங்கள் தேவைப்பட்டது. ஜோதிடம் கற்பதில் உள்ள கடினம் புரிந்தது. இருப்பினும், தொடர் முயற்சிகளால், இரவு பகல் பாராது, குமாரசுவாமியம் செய்யுங்களை மனனம் செய்து, பொருள் புரிந்து, அதன்மூலம் ஜோதிடம் கற்பது கடினமாக இருந்தது. கால ஓட்டத்தில், குமாரசுவாமியம் என் கைக்குள் வந்துவிட்டது. பிறகு, மற்ற நூல்களின் செய்யுள்களும் என் வசமானது.

ஆனாலும், குமாரசுவாமியம் செய்யுளில் ஒன்றைப் படித்து அதன் முழுப் பொருளையும் விளங்கிக்கொண்டேன் என்று இப்போதும் என்னால் கூற முடியாது. ஆக, என்னைப் பொறுத்தவரை, குமாரசுவாமியத்தின் செய்யுள்கள் ஒவ்வொன்றும் ஒரு ஜோதிட ஆய்வுக்கூடமே என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு அதற்கான விளக்கங்களை தேட முற்படும்போதுதான், நூற்றுக்கணக்கான ஜாதகக் கட்டங்கள் அதனுள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது தெரிய வரும். அது ஒவ்வொன்றையும் தனித்தனியாக வரைந்து பார்த்தால்தான், அதனுள் பொதிந்திருக்கும் பொருளின் விளக்கங்களைப் புரிந்துகொள்ள முடியும்.

பிற ஜோதிட நூல்களின் பத்து முதல் ஐம்பது செய்யுள்களை உள்வாங்குவதால் பெறும் பொருள் விளக்கத்தைக்கூட, குமாரசுவாமியத்தின் ஒரு செய்யுளுக்கு ஈடு செய்ய முடியாது. இந்தப் புரிதல் ஏற்பட்டபோது, செய்யுள்கள் இல்லாமல் தொடக்கக்காலத்தில் பலன் உரைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று என் மனதுக்குப் பட்டது. அதேபோல், செய்யுள்களின் துணை இல்லாமல் பலன் உரைப்பவர்களை ஜோதிடர்களாக ஏற்கவும் என் மனம் இசையவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், எனக்குத் தெரிந்து குமாரசுவாமியத்தை கையில் எடுத்து செய்யுள்களின் பொருள் தெரிந்து பலன் உரைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

என் அனுபவத்தில் ஒரே செய்யுளை பல்வேறு காலகட்டங்களில் ஆராய்ந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் எனக்குப் புதுப் புது விளக்கங்கள்தான் கிடைக்கின்றன. ஒவ்வொரு செய்யுளும் மற்ற செய்யுங்களுடன் ஒரு சங்கிலிப்பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது. செய்யுள்களை தனித்தனியாகப் பார்த்து அதன் பொருள்களை விளங்கிக்கொள்வது சாதாரணமானது. ஆனால், ஒரு செய்யுளுடன் மற்ற செய்யுள்களில் வரும் விளக்கங்களையும் சேர்த்துப் பார்க்கும்போதுதான் அதில் உட்பொதிந்து கிடக்கும் முழு சூட்சுமத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இதன் அடிப்படையில்தான், ஒருவரின் ஜாதகம் மதிப்பீடு செய்யப்படவேண்டி உள்ளது. அப்போதுதான், ஒருவரின் வாழ்வைப் பற்றிய தெளிவான முடிவுக்கு வர முடிகிறது. அப்படி நான் எடுத்துரைத்த ஜாதகங்களைப் பற்றிய துல்லியமான பலாபலன்கள்தான், மக்களிடையே இன்று எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன.

அறிவியலை கற்றுக்கொள்ளலாம்; கலையை கற்றுக்கொள்ள முடியாது. நாம் அதனுடன் கலக்க வேண்டும்; உறவாட வேண்டும்; அதன் ஆன்மாவுடன் நெருங்கிவிட வேண்டும். அது ஒருவித உணர்வு. உணர்வுகளின் உச்ச நிலைக்கு அது எடுத்துச் சென்றிருக்க வேண்டும். ஒன்றின் ஆழத்துக்குள் செல்லும்போதுதான் அதனை உணர முடியும்.

ஜோதிடம் என்பது ஒரு கலையே என்பதை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஆரம்பத்தில், ஜோதிடத்தைக் கற்றுவிட வேண்டும் என்று முயற்சித்தது சிறுபிள்ளைத்தனம் என்பது புரிந்தது. இருந்தும் என் மனதில் ஒரு நெருடல்.

விதிக்கப்பட்டதைத்தான் அனுபவிக்கிறோமா? அப்படியெனில் தெய்வங்கள், பரிகாரங்கள் எதற்காக? எல்லாமே மாறுதலுக்கு உட்பட வேண்டியதுதான் என்றால், அதற்கான வழிமுறைகள்தான் என்ன?

தொடர்ந்து பயணிப்போம்.

- ராஜேஷ் கன்னா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com