திருத்தலப் பெருமை
கொல்லிமலையை ஆண்ட மன்னரின் மகளுக்கு முயலகன் நோயைத் தீர்த்து, இன்றளவும் கொடிய நோய்கள் பலவற்றுக்கு தீர்வு தரும் தலமாக இருப்பது திருவாசி. நீர்வளம், நில வளம், செல்வ வளம் நிறைந்த சோழவள நாட்டின் காவிரி நதியின் வடகரையில் உள்ளது இந்தத் திருத்தலம். தேவாரப் பாடல் பெற்ற சிவத் தலங்களுள் 62ஆவது தலமாகும். திருப்பாச்சிலாச்சிராமம் என்பதே இதன் இயற்பெயர். தற்போது, திருவாசி என அழைக்கப்படுகிறது.

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் கோபுரம்
திருப்பாச்சிலாச்சிராமம் என்பதில் திரு, பாச்சில், ஆச்சிராமம் என்ற மூன்று சொற்கள் உள்ளன. இவற்றில் திரு என்பது தெய்வத்தன்மை. அழகு, செல்வம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாச்சில் என்பது ஊர்ப் பெயர் ஆகும். ஆச்சிராமம் என்பது கோயிலின் பெயர். வசிஷ்டர், அகஸ்தியர், துர்வாசர் ஆகியோர் தவம் செய்த இடம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று பெருமைகளைக் கொண்ட திருத்தலம். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ளது. திருச்சியிலிருந்து முசிறி செல்லும் வழியில் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்
முயலகன் நோய் தீர்த்த வரலாறு
கொல்லிமலைத் தொடரை எல்லையாக ஆண்டுவந்த கொல்லிமழவனின் மகளுக்கு முயலகன் (வலிப்பு நோய்) எனும் தீராத நோயிருந்தது. மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்த்தும் மகளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, பெரியவர்களின் ஆலோசனைப்படி, பெருமான் அருள்புரியும் இக்கோயிலில் அவளைக் கிடத்தி, அவளின் பிணியைக் குணப்படுத்தும் பொறுப்பை பெருமானிடமே விட்டுவிட்டுச் சென்றான்.
அச்சமயத்தில் திருஞானசம்பந்தர் பல தலங்களைத் தரிசனம் செய்துகொண்டு மழவ நாட்டைச் சார்ந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்ற இத்தலத்திற்கு எழுந்தருளினார்.

கோயில் கொடிமரம்
இதையறிந்த மன்னன் அன்புடன் சம்பந்தரை வரவேற்றுத் தன் மகளின் நோயை நீக்கியருள வேண்டினான். அருள் உள்ளம் கொண்ட சம்பந்தர் சிவனை வேண்டி "துணிவளர் திங்கள் துளங்கி விளங்க" எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க நோய் நீங்கி மன்னன் மகள் குணமடைந்தாள் என்பது வரலாற்றுத் தகவல். சிவபெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி, அதன் மீது நின்று ஆடினார். இதன் அடிப்படையில் இங்குள்ள நடராஜர் காலுக்குக் கீழே முயலகன் உருவம் இல்லாமை அறியத்தக்கது. திருவடியின் கீழ் அதற்குப் பதில் உள்ள ஒரு சர்ப்பத்தின் மீது நடனமாடுகின்றார்.
நரம்புத் தளர்ச்சி, வாதநோய், வலிப்பு நோய், சர்ப்ப தோஷம், மாதவிடாய் பிரச்னைகள் முதலியன இத்தல இறைவனை வழிபடக் குணமாகும். இவ்வாலயத்திலுள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.
இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

கோயில் உள் பிராகாரம்
இறைவன்
கருவறை சிவலிங்கப் பெருமானுக்கு சமீவனேசுவரர், பிரமபுரீசுவரர், மாற்றறிவரதீசுவர் ஆகிய திருநாமங்கள் உள்ளன. மாற்றறிவரதீசுவர் என்ற பெயர்தான் உருமாறி மாற்றுரைவரதீஸ்வரர் என்ற திருநாமத்துடன் இங்கு விளங்குகிறது.
இறைவன் இந்த பெயர் பெறக் காரணமாக உள்ள வரலாறு சுவையானது. இத்தலம் வந்த சுந்தரர், சிவனிடம் பொன் கேட்டார். அவரை சோதிப்பதற்காக சிவன் பொன் தரவில்லை. கோபம் கொண்ட சுந்தரர், "சிவன் இருக்கிறாரா, இல்லையா" என்ற அர்த்தத்தில் இகழ்ந்து "வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும்" என்று தொடங்கும் பதிகம் பாடினார்.
பதிகத்தின் கடைசிப் பாடலில் "திரு நாவலூரில் தோன்றிய நம்பியாரூரன் இவரைப் பேசிய பேச்சுகள், உண்மையில் ஏசினவும் அல்ல, இகழ்ந்தனவும் அல்ல, ஆதலின், அவற்றை இவர் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும், அது செய்யாராயினும், அடியேனது பிழைகளைப் பொறுத்து ஆளும் தலைவர் இவரன்றி வேறொருவர் இல்லை" என்று குறிப்பிடுகிறார்.

நடராஜர்
சிறிதுநேரம் கழித்து சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், பொன் முடிப்பு தரவே, அந்தப் பொன் தரமானதுதானா என்ற சந்தேகம் சுந்தரருக்கு வந்தது. அப்போது அங்கு வந்த இரண்டு வணிகர்கள் தங்கத்தைச் சோதித்துத் தருவதாகச் சொல்லி வாங்கிக்கொண்டனர். ஒருவர் பொன்னை உரைத்து (சோதித்து) பார்த்துவிட்டு, பொன் தரமானதுதான் என்றார். உடன் வந்தவரும் அதை ஆமோதித்தார். பின் இருவரும் மறைந்துவிட்டனர். சுந்தரர் வியந்து நின்றபோது, சிவனே வணிகர் வடிவில் வந்து உரைத்துக் காட்டியதையும், மகாவிஷ்ணு அவருடன் வந்ததையும் உணர்த்தினார். தங்கத்தை உரைத்துக் காட்டியதால் சிவனுக்கு "மாற்றுரைவரதர்' என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இறைவி
இங்கு குடிகொண்டுள்ள அம்மையின் திருநாமங்கள் பாலசெளந்தரி, பாலாம்பிகை என அழைக்கப்படுகிறது.
இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப் பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்
தீர்த்தம்
அன்னமாம் பொய்கை எனும் தீர்த்தம் கோயிலுக்கு முன்னர் உள்ளது. இதனை தாமிரபரணி எனவும் கூறுகின்றனர். பொய்கை என்பதுதானே தோன்றிய நீர்நிலை ஆகும். உமாதேவியார் இங்கு அன்னப்பறவை வடிவுடன் இருந்து நீராடி இறைவனை வழிபட்டதால், இத்தீர்த்தம் அன்னமாம்பொய்கை எனப் பெயர் பெற்றது.

சிலம்பு நதி
இந்த நதியானது ஊரின் கிழக்கு நோக்கி ஓடும் பங்குனி நதி ஆகும்.
கொள்ளிட நதி
இந்த நதியானது ஊருக்கு தெற்கு முசிறி செல்லும் சாலையை அடுத்து தென்பால், காவிரியின் பிரிவாக ஓடும் பெரிய நதியாகும்.
தல விருட்சம்
இக்கோயிலின் தல விருட்சம் வன்னி மரம். இங்கு வன்னிமரம் மிகுதியாக இருந்ததால் வனஷேத்திரம் எனப் பெயர் பெற்றது. தற்போது, இக்கோயிலில் ஒரு வன்னி மரம் மட்டும், அம்மையார் ஆலயத்தின் முன்னே உள்ளது.
இந்தக் கோயிலையும் வலம் வரலாம்: சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்
ஆலயத்தின் சிறப்புகள்
இந்த ஆலயமானது 5 நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிராகாரங்களுடனும் விளங்குகிறது. இத்தலத்தில் சுவாமி ருத்ராட்ச பந்தலின் கீழ் சுயம்பு லிங்கமாக அருளுகிறார். ராஜகோபுரத்தின் கீழே அதிகார நந்தி, மனைவியுடன் இருக்கிறார். இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன் தன் மனைவியர் உஷா, பிரத்யுஷாவுடன் இருக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் அவரை பார்த்தபடி உள்ளன. திருவாசியில் வசித்த கமலன் என்னும் வணிகனுக்கு மகளாகப் பிறந்த அம்பிகை, சிவனை வேண்டி தவமிருந்து, அவரை மணந்தாள். அம்மன், இத்தலத்தில் பாலாம்பிகை என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். அர்த்தஜாமத்தில் அம்மனுக்கே முதல் பூஜை நடக்கும். அம்பாள் சன்னதி எதிரே செல்வ விநாயகர் இருக்கிறார். அம்பாள் சன்னதி முகப்பில் இரண்டு துவாரபாலகியர் உள்ளனர்.

கோயில் வெளி பிராகாரம்
திருமணமாகாத பெண்கள் நல்ல வரன் அமையவும், திருமணத் தடை உள்ளவர்கள் தடை நீங்கவும் இவர்களுக்கு மஞ்சள் கயிறு கட்டி பிரார்த்திக்கின்றனர். குழந்தையில்லாத பெண்களும் இங்கு தொட்டில் கட்டுகின்றனர். துவாரபாலகியர் மூலமாக பக்தர்களின் கோரிக்கைகளை அம்பாள் ஏற்றுக் கொள்வதாக ஐதீகம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்ட தோஷம் நீங்க அம்பிகைக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
நான்கு கால பூஜைகள்
இக்கோயிலில் தினமும் 4 கால பூஜைகள் நடைபெறும். காலை 8 மணிக்கு மேல் 9 மணி வரை காலசந்தி பூஜை நடைபெறும். பகல் 11 மணிக்கு மேல் 12 மணி வரை உச்சிக்கால பூஜை நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் 6 மணி வரை சாயரட்சை பூஜை நடைபெறும். இரவு 7.30 மணிக்கு மேல் 8 மணி வரை அர்த்தசாம பூஜை நடைபெறும்.
இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

அம்பிகையுடன் நடராஜர்
பெருவிழா
இக்கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்திற்கு வைகாசி மாதம் பௌர்ணமியை முடிவாகக் கொண்டு பெருவிழா நடைபெறும். புனர்பூச நாளில் கொடியேற்றி, பத்தாம் நாளாகிய விசாக நாளில் தீர்த்தவாரியும், சுவாதி நாளில் திருத்தேரும் சிறப்பாக நடைபெறும். ஐந்தாம் நாள் இடப வாகனக் காட்சியும், ஏழாம் நாள் திருக்கல்யாண காட்சியும் நிகழும். 11ஆம் நாள் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதி உலா வரும்.
நடைதிறப்பு
காலை 7 மணி முதல் 12 மணிவரை, மாலை 5 மணி முதல் 8 மணி வரை
பேருந்து வழித் தடம்
திருச்சியிலிருந்து முசிறி செல்லும் சாலையில் சுமார் 14 கி.மீ. தொலைவில் திருவாசி என்கிற பேருந்து நிறுத்தம் வரும். அங்கிருந்து ஊருக்குள் செல்லும் ஒரு கிளைச் சாலையில் சுமார் அரை கி.மீ. செல்ல இந்த ஆலயத்தை அடையலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவாசி செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
கோயில் முகவரி
அருள்மிகு பாலம்பிகா சமேத மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்
திருவாசி, திருச்சி - 621 216
படங்கள்: எஸ். அருண்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு

ரூ.1,60,000 சம்பளத்தில் வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாட்டில் முதல்முறை வாக்காளர்கள் 34% உயர்வு! 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பின்!!

அரசன் படப்பிடிப்பு துவங்குமா?
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


